கடந்த செப்.28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த தி.மு.க. பவள விழா பல வகைகளிலும் சிறப்பானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திச் சொன்ன ஒரு கருத்து மிகவும் முக்கியமானதாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள்
(1) சமுதாய சீர்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (3) அரசியல் ஜனநாயகம்.
இந்த மூன்றும்தான் தி.மு.க.வின் முத்தான கொள்கைகள் என்று முத்திரை பதித்தது போல் அழுத்தமாகத் தெரிவித்தார்.
தி.மு.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையிலான ஒரு வேறுபாடு என்று ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் சமுதாயக் கொள்கை என்ற வேர் இதில் அழுத்தமாக இருப்பதாகும்.
தி.மு.க. பொதுக் குழு ஒன்றில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் (2.6.2008) ஒன்றை வலுவாகச் சொன்னதுண்டு.
‘‘நாம் எதிர்பார்க்கின்றது – தேர்தல் சிம்மாசனத்திலே அமர்வதல்ல, கோட்டையிலே உட்காருவதல்ல, இவைகளை எல்லாம் விடப் பெரியது, சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனிக்கு எடுத்துக்காட்டுவதுதான் நாம் வெற்றி பெற வேண்டிய சாதிக்க வேண்டிய தேர்தல் என்பதை மறந்து விடாமல் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தி.மு.க. பொதுக் குழுவில் தோழர்களுக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் அறுதியிட்டுக் கூறினார்.
இந்தக் கருத்தை காஞ்சியில் நடைபெற்ற தி.மு.க. பவள விழா நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தனது உரையில் முக்கியமானதாகப் பதிவு செய்தார்.
காஞ்சி விழாவிலும் தி.மு.க. தலைவர் தி.மு.க.வின் மூன்று அடிப்படைக் கொள்கைகள் என்று சொல்லும் பொழுது முதலாவதாக அவர் நிலை நிறுத்தியது சமுதாயத்தில் சீர்திருத்தம் என்பதையே!
இந்தச் சமுதாய மாற்றம் என்ற கண்ணோட்டத்தில் தி.மு.க. சில கருத்துக்களை எடுத்து வைக்கும் பொழுதெல்லாம் பாசிச சக்திகள் நாலுகால் பாய்ச்சல் பாய்கின்றன.
சுயமரியாதைத் திருமணத்தில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருளை தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்ன போதும் சரி; தி.மு.க. இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் ஸநாதனம் குறித்து பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் எடுத்துக் கூறிய போதும் – அடேயப்பா பாசிச பார்ப்பனீய சக்திகள் எந்த அளவுக்குத் துள்ளின என்பதை நாடறியும்.
இது போன்ற நேரங்களில் நம் கண்முன் நிற்க வேண்டியவர் தந்தை பெரியாரே! எதிர்க்க, எதிர்க்க அவர் குரல் வேகமாக ஒலிக்கும் – கருத்துகள் அழுத்தம் திருத்தமாக மேலும் கூர்மையோடு எழுந்து பாயும்!
‘சமாதானம் சொன்னால் எதிரி வெற்றி பெற்று விடுவான்!’ என்பார் தந்தை பெரியார். அதை எப்பொழுதும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்து சென்று, தேர்தலில் போட்டியிடும் அரசியல் தன்மையை அது ஏற்றிருந்தாலும் – மற்ற ஆட்சியினர் யாரும் செய்ய முன்வராத திட்டங்களை, சட்டங்களை செயல்படுத்திக் காட்டியிருப்பது தி.மு.க. ஆட்சியே!
அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டு ஆண்டு காலம்கூட முதலமைச்சராகத் தொடர முடியாத வகையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஆனால், அந்தக் குறுகிய காலத்திலும் மூன்று முத்தான – சமுதாயம் தொடர்பான சட்டங்களை, காலத்தை வென்றெடுக்கும் முறையில் நிறைவேற்றச் செய்தார்.
(1) சுயமரியாதைத் திருமண சட்டம் (2) சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல் (3) தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை. இரண்டே மொழிகள் தான் இங்கு, ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம் என்ற இந்த மூன்று சட்டங்களை யாரும் கை வைக்க முடியாத வரை – இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறான் என்று சொன்னவர் அண்ணா.
இதன் மய்யப் புள்ளிதான் இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று முதலமைச்சர் அறிஞர் அண்ணா சட்டப் பேரவையிலே பிரகடனப்படுத்தியதாகும்.
காஞ்சிபுரம் தி.மு.க. பவள விழாவிலும் இதனைப் பலரும் சுட்டிக் காட்டியது முக்கியமானதாகும்.
அண்ணாவை அடுத்து முதலமைச்சராக வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தமிழுக்குச் செம்மொழி தகுதியை பெற்றுத் தந்தார். சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தி பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நாடெங்கும் உருவாக்கினார். செங்கற்பட்டில் 1929இல் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெண்ணுரிமை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை – அடுக் கடுக்காக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் காட்டினார்.
தமிழர் பண்பாட்டு அடையாளமாக தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றும் அறிவித்தார். (அடுத்து வந்த பார்ப்பனீயம் தன் இயல்பைக் காட்டியது என்பது வேறு) உழவர் சந்தை என்பது அடித்தட்டு உழைப்பாளி மக்களின் மீதான அக்கறையும், ஆர்வமும்தானே!
மானமிகு கலைஞரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் – ‘சமூக’ நீதிக்கான சரித்திர நாயகர்!’’ என்று தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் மானமிகு வீரமணி உச்சி மோந்த பாராட்டும் அளவுக்கு மளமளவென்று நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சொல்லுகிறார்.
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்ததென்ன – மகளிருக்கும் பேருந்தில் இலவச பயணம் – மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அளிப்பு என்ன, புதுமைப் பெண் திட்டமென்ன, புதுமைப் புதல்வன் திட்டமென்ன – ஒன்றிய அரசின் ஆதிக்கத்தை எதிர் கொள்வதென்ன – எல்லாமே திராவிட சிந்தாந்தம்தான் – சமுதாயக் கொள்கையை முன்னிறுத்தும் முற்போக்கு எண்ணமும் செயல்பாடும்தான் அந்த வகையில் காஞ்சி தி.மு.க. பவள விழா – மீண்டும் ஒரு முறை தனது திரா விட சித்தாந்தத்தைப் பிரகடனப்படுத்தியது என்றே கூற வேண்டும்.