மனுராஜ் சண்முகசுந்தரம், விக்னேஷ் கார்த்திக்
மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர்
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு 2024இல் துவங்கியுள்ளது. சமூக அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடி வருவது இந்த இயக்கத்தின் தனித் தன்மை. தனி மனிதர்களுக்கும், சமூகங்களுக்கும் அதிகாரப் பங்களிப்பு பெற்றுத் தருவது இதன் நோக்கம். நீண்ட காலமாக அடக்கி ஒடுக்கி வந்த உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஆதிக்க சக்திகளை மக்கள் தூக்கி எறியவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் லட்சியம். அது அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து பகுத்தறிவுச் சிந்தனையை வளர்ப்பதிலும், சமூகநீதியை நிலைநாட்டுவதிலும் ஈடுபட்டது.
நேர்மையான அரசியல் களம் அமைய போராடியது. மகளிர் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தது. திராவிட இயக்கத்துடன் சுயமரியாதை இயக்கம் இணக்கம் கொண்டிருந்தபோதிலும் ஒரு சில கொள்கை ரீதியான அணுகுமுறை மாற்றங்கள் இரண்டுக்குமிடையே இருந்துள்ளன. எனினும் இரண்டுமே ஒருமித்த சமூகப்பார்வையுடன் தமிழ்நாட்டு அரசியல் கண்ணோட்டத்திற்கு வழிகாட்டி வந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. மக்கள் விரோத ஆட்சிகளை எதிர்த்து பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக இரு இயக்கங்களுமே போராடி வந்துள்ளன என்பது வரலாறு.
சுயமரியாதையின் மலர்ச்சியும் வளர்ச்சியும்
கடந்த பத்து ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு கிடைத்துள்ளது. இது ‘திராவிட மாதம்’ என்று கொண்டாடப்பட்டு வருவதாகவும் கூறலாம். திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளும் நிகழ்வுகளும் நினைவு கூரப்பட்டு செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று சிறப்புமிக்க நிகழ்வுகளை நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறது – பெரியாரின் பிறந்த நாள், அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. உருவான நாள்.
அறிஞர் அண்ணா ஓர் அரசியல் ஞானியாக கருதப்படும் தமிழ்நாட்டில் பெரியார் ஈடு இணையற்ற வழிகாட்டியாகவும், தலைவராகவும் மதிக்கப்படுகிறார். சுயமரியாதை இயக்கம் சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நாம் புரிந்து கொண்டால்தான் மாநிலத்தின் இன்றைய சமூக கட்டமைப்பு நமக்குத் தெளிவாகப் புரியும். பெரியாரால் உருவான இந்த இயக்கம் ஏறத்தாழ அய்ம்பது ஆண்டு காலம் அவருடைய தலைமையில் வளர்ந்து வந்துள்ளது. அந்தப் பயணம் பற்றி நாம் முழுதாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
சுயமரியாதை இயக்க வரலாற்றில் 1925 ஆம் ஆண்டு இரண்டு முக்கியமான காரணங்களால் தனிச்சிறப்பு பெறுகிறது. மே மாதத்தில் ‘குடிஅரசு’ எனும் தமிழ் வார இதழ் வெளிவரத் துவங்கியது ஒன்று. மற்றொன்று நவம்பர் மாதத்தில் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறியது. அவர் வெளியேறியதுதான் சுயமரியாதை இயக்கம் துவங்கக் காரணம் என்று கூறப்பட்டாலும், அதற்கு முன்பே ‘குடிஅரசு’ இதழ் அதற்கு வழிவகுத்துவிட்டது என்றே கூறலாம்.
மதராஸ் மாகாணத்தில் மக்கள் மத்தியில் சலசலப்பையும் விழிப்புணர்வையும் அந்த இதழ் ஏற்படுத்தியது. சமூகவாரி பிரதிநிதித்துவத்தால் அரசியல் ஆதாயம் அடைவதையும் கடந்து சமூகச் சீர்திருத்தங்களை நோக்கி ‘குடிஅரசு’ இதழ் பயணித்தது. காங்கிரஸை விட்டு வெளியேறிய பின் பெரியார் இந்திய தேசிய காங்கிரஸை விமர்சிக்கவும், பார்ப்பனியத்தை எதிர்க்கவும் ‘குடிஅரசு’ இதழை ஓர் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
அவரை எந்தச் சக்தியாலும் கட்டுப்படுத்த இயலவில்லை. பழைமைவாதத்தையும், ஜாதிப்பாகு பாட்டுக் கொடுமைகளையும் மக்களுக்கு புரியவைக்கவே பெரியார் ‘பார்ப்பனியம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். எனவே சுயமரியாதை இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டியதே ‘குடிஅரசு’ இதழ் என்று கூறினால் மிகையாகாது.
மதராஸ் மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி 1920இல் ஆட்சி அமைத்து பார்ப்பனரல்லாதாரின் கட்சி அரசியலுக்கு தூசிப்படையாக செயலாற்றியது. முத்துலட்சுமி ரெட்டியை சட்டமன்றத்தின் முதல் பெண் கவுன்சிலராக நியமித்தது. அரசுப் பணிகளில் முறைப்படி இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யும் வகையில் ஓர் அரசாணையையும் பிறப்பித்தது.
அதே சமயத்தில் பெரியார் தமிழ்நாட்டில், செங்கல்பட்டில் 1929 பிப்ரவரி 27 ஆம் நாளன்று மதராஸ் மாகாண முதல் சுய மரியாதை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். இன்றளவும் அது மிகப்பெரிய புரட்சியாகப் போற்றப்படுகிறது. இந்த மாநாடு கீழ்கண்டவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியது – பெண்ணுரிமை, ஜாதிப் பெயர்கள் நீக்கம், பெண்களுக்கு கல்வியிலும் பணி நியமனங்களிலும் சமவாய்ப்பு, வாழ்விணையர்களின் சமத்துவம் மற்றும் பல சமூகப் பிரச்சினைகள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று பிரமுகர்களும் பல அரசியல் தலைவர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டனர்.
காலத்தால் அழியாத புகழ் பெற்ற மாநாடு இது என்று இன்றும் அது போற்றப்படுகிறது. இந்த மாநாட்டின் வெற்றிக்குப்பின், பெரியார் பார்ப்பனர் அல்லாதோரின் அரசியல் பிரதிநிதித்துவப் போராட்டத்தோடு நின்று விடாமல் பல சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணியில் முழுமூச்சுடன் செயல்படத் துவங்கினார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மதவெறியர்களால் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்க முன்பை விட தீவிரமாகப் போராட ஆரம்பித்தார். சமூகத்தில் மகளிர் முன்னேற்றமடைய வழிவகுப்பதில் தனி கவனம் செலுத்தத் துவங்கினார்.
நூற்றாண்டு கால வளர்ச்சி
சுயமரியாதைத் திருமணங்களுக்கு வழிவகுத்ததே சுயமரியாதை இயக்கம்தான். இது மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தமாக இன்று உலகத்தால் போற்றப்படுகிறது. பார்ப்பன புரோகிதர்களையும் அர்த்தமற்ற மதச் சடங்குகளையும் சுயமரியாதைத் திருமணங்கள் தவிர்த்தன. இணையேற்பு விழாக்கள் இப்படித்தான் நடைபெற வேண்டும் என்று மதவெறியர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த மூட விதிமுறைகளையெல்லாம் பெரியார் தூக்கி எறிய வைத்தார்.
சுயமரியாதைத் திருமணங்கள் வாயிலாக பெண்களுக்கு தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் சம உரிமைகளும் கிடைத்தன. 1967இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் சுயமரியாதைத் திருமணம் சட்டமாகவே அங்கீகாரம் பெற்றது. பாரம்பரிய பழமைவாத பழக்க வழக்கங்கள் சுயமரியாதைத் திருமணங்களால் விட்டொழிக்கப்பட்டன. சட்டம் இயற்றப்பட்டு சுயமரியாதை திருமண முறை நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டது.
பெண்ணடிமைத்தனம் சுயமரியாதை இயக்கத்தால் அடியோடு அழிந்தது. சமூகத்தில் நீண்டகாலமாக பெண்களை பிணைத்து வைத்திருந்த அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்பட்டு பெண் விடுதலை மலர்ந்தது. விதவை மறுமணத்திற்கும், விவாகரத்து உரிமைக்கும் இந்த இயக்கம் வழி வகுத்தது.
பெண்களுக்கு சமத்துவ சொத்துரிமையும், கருக்கலைப்பு உரிமையும் கூட சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால்தான் கிடைத்தன. பெண்களை இழிவு படுத்தும் புராண இதிகாசங்களை இந்த இயக்கம் கடுமையாக எதிர்த்தது. மடைமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியது.
தாய்மைப் பேறு பெண்களின் தனி உரிமை என்பதை வலியுறுத்த கருத்தடைச் சாதனங்களின் உபயோகத்திற்கு இந்த இயக்கம் வரவேற்பு அளித்தது. பெண்களின் உரிமைகளுக்கு எவரும் தடை போட இயலாது என்ற நிலை இதனால் ஏற்பட்டது. ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாடு முழுவதும் இன்றும் நடைபெறவும் உதவியது சுயமரியாதை இயக்கமே. வாழ்விணையர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் மட்டுமே உள்ளது என்ற அவல நிலை மாறியது. ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பப்படி வாழ் விணையரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற சமூக மாற்றம் சுயமரியாதை இயக்கத்தால்தான் ஏற்பட்டது. இதை எவராலும் மறுக்க முடியாது.
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பலர் சுயமரியாதை இயக்கம் சமூகச் சீர்திருத்தங்கள் மீது அக்கறை செலுத்தும் அளவுக்கு நாட்டின் சுதந்திரம் குறித்து கவலைப்படவில்லை என்றெல்லாம் புலம்பி விமர்சித்து வந்தனர். அவர்களுடைய குற்றச்சாட்டில் உண்மையில்லை.
சுயமரியாதை இயக்கத்தினர் பிரிவினைவாதிகள், மன்னராட்சியை ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் கூட கண்டனங்கள் எழுந்தன. அவற்றில் உண்மை இல்லை. சுயமரியாதை இயக்கம் நாட்டின் சுதந் திரத்தை எதிர்க்கவில்லை. மாறாக – பிரிட்டிஷ் ஆட்சி அகன்று விட்டால் இந்து – ஜாதி வெறியர்கள் கூட்டம் ஆட்சிக்கு வந்துவிடும் அபாயம் உள்ளது என்றே இந்த இயக்கம் அஞ்சியது. காலப்போக்கில் எல்லோருக்குமே இந்த இயக்கம் பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டது.
அரசியல் சுயாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கம் இது என்பது நாளடைவில் அனைவருக்கும் புரிந்தது. கூட்டாட்சி தத்துவத்திற்கும், உரிமைக்கும் மதிப்பளிக்கும் இயக்கம் இது என்ற உண்மை அனைவருக்கும் இன்று தெரிந்துள்ளது.
சுயமரியாதை இயக்கம் எதிர்கொண்டு வரும் சவால்களும் எண்ணற்றவை. தங்கள் நோக்கத்தையும் கொள்கையையும் எந்த ஒரு இயக்கமும் மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இன்றைய சமூகச் சூழலில் இதைத் தவிர்ப்பது எளிதல்ல. ஹிந்துத்துவாவாதிகளே ஒரு பெரிய சவாலாக உள்ளனர். சமத்துவத்திற்கு வழி வகுக்கக்கூடிய சமூகச் சீர்திருத்தங்களை ஹிந்துத்துவா தடுத்து வருவது கவலையளிக்கிறது.
மக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து விடக்கூடாது என்பதில் இந்த இயக்கம் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. பண்பாட்டுப் பன்முகத் தன்மையையும், முற்போக்கான மாற்றங்களையுமே சுயமரியாதை இயக்கம் விரும்புகிறது. இதற்கு ஹிந்துத்துவாவாதிகள் தடையாக உள்ளனர். நாட்டில் சமூகநீதி முழுமையாக நிலவ வேண்டும் என்பதில் சுயமரியாதை இயக்கம் உறுதியாக உள்ளது.
பன்முக பண்பாட்டு வழக்கங்களுக்கு ஒரு நிலையான கட்டமைப்பு ஏற்பட இந்த இயக்கம் பாடுபட்டு வருகிறது. எல்லாவிதமான தடைகளையும் உடைத்தெறிவதே தற்போது இந்த இயக்கம் சந்திக்கும் சவால். இந்த இயக்கம் துவங்கிய காலக்கட்டத்தில் இல்லாத பிரச்சினைகள் இன்று ஏற்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் இந்த இயக்கம் தீர்வு காண வேண்டியது அவசியம் – அவசரமும் கூட.
பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உண்மைக்கு மாறான செய்திகளும், அவதூறுகளும் ஊடகங்கள் மூலம் பரவி வருகின்றன. ஜாதி மதம் சார்ந்த பாகுபாடுகள் சமூகவலை தளங்கள் மூலம் மறைமுகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
சுயமரியாதை இயக்கம் இளைய தலைமுறையினரின் ஒத்துழைப்புடன் அனைத்து தீமைகளுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். முற்போக்குச் சிந்தனை நிறைந்த இளைய தலைமுறையினரை இயக்கத்துடன் இணைத்துக்கொண்டு செயல்பட்டால் எல்லா எதிர்ப்புகளையும் சுயமரியாதை இயக்கத்தால் முறியடிக்க முடியும்.
பல்வேறு பாலினர் சார்ந்த புதிய பிரச்சினைகளும் இன்று அச்சுறுத்தி வருகின்றன. “எல்ஜிபிடிக்யூ” போன்றவை. இன்ன பிற குழப்பமளிக்கும் சவால்களும் தீர்வுகளை எதிர்நோக்கியுள்ளன. சுயமரியாதை இயக்கம் பல்வேறு பாதைகளில் காலத்திற்கேற்ப பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இன்றைய பலவிதமான அவலநிலைகளையெல்லாம் சீர்படுத்த வேண்டிய கடமை இயக்கத்திற்கு உள்ளது. இடஒதுக்கீடுகள், ஜாதி மதம் சார்ந்த பிரச்சினைகளும் ஏராளமாக உள்ளன. புதிய தலைமுறையினரின் விழிப்புணர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு சுயமரியாதை இயக்கம் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக் கொண்டே இருக்கவேண்டியது அவசியம்.
சிரமங்கள் நிறைந்த இலக்கு
இரண்டாவது நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ள சுயமரியாதை இயக்கத்தின் இலக்கு பல சிரமங்களைக் கடந்து அடையவேண்டிய ஒன்றாக உள்ளது. சுயமரியாதை இயக்கம் துவங்கிய அதே 1925இல்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் துவங்கியது – தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாக. இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பே தற்போது சமூகநீதிக்கும், பகுத்தறிவுக் கண்ணோட்டத்திற்கும், சமத்துவத்திற்கும் மிகப் பெரிய தடையாகவும் இடையூறாகவும் உள்ளது.
தனது வேர்களை இறுகப்பற்றிக்கொண்டே இந்த இயக்கம் தனது தாக்கத்தை மேலும் அதிகரிக்க இயலும். தற்கால சமூகப் பிரச்சினைகளை எப்போதும் போலவே துணிவுடன் அலசி ஆராய்ந்து விடியலுக்கு வழிவகுக்கவேண்டும் இந்த இயக்கம். புத்துணர்ச்சி யுடனும் புதிய உற்சாகத்துடனும் சுயமரியாதை இயக்கம் இயங்கினால் எல்லா சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சமூகம் நிச்சயம் உருவாகும்.
இயக்கத்தின் புரட்சி மனப்பான்மை மேலும் அதிக பலம் பெற முயல இதுவே சரியான தருணம். சுயமரியாதை இயக்கம் என்பதே தீமைகளை எரித்துச் சாம்பலாக்கக்கூடிய நெருப்பாகும். அது மேலும் பரவி கொழுந்து விட்டெரிய வேண்டும். இந்த இயக்கத்தின் கொள்கைகள் என்றும் மாறாமல் மறையாமல் நிலைத்து நின்றால் மட்டும் போதாது – இனிவரும் உலகத்தின் புதிய தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாகவும் அவை இருக்கவேண்டும். அனைவரும் இணைந்து போராடினால் சுயமரியாதை இயக்கம் தன் இலக்கை அடைந்தே தீரும்.
நன்றி: ‘தி இந்து’ நாளிதழ் – (28.09.2024)