முனைவர் க.அன்பழகன்
மாநில அமைப்பாளர்
கிராமப் பிரச்சாரக்குழு
திராவிடர் கழகம்
பேரண்டத்தில் நெபுலா எனும் நெருப்புக் கோளம் வெடித்துச் சிதறியதால் கோள்களும் – கிரகங்களும் உருவாயின. அண்ட வெளியில் கண்டங்கள் கருவாயின. திருவிடத்தில் (திராவிடத்தில்) பெரியாரின் தத்துவத்தை சுமந்த கருப்புக்கோளம் கக்கிய சுயமரியாதை கொள்கைத் தீ ஆரியத்தை எதிர்த்து சமர் செய்து சமத்துவக் கொடி பறந்தது. அதுவரை “தர்ப்பை” ஏந்திய ஆரியத் தொப்பைகள் அலறித் துடித்தனர். நொடிப்பொழுதில் “பிடி சாம்பல்” ஆயினர்.
ஆரியர்களின் ஆடிய பாதமும் – பாடிய சுப்ரபாதமும் கருந்தீயில் கருகி காணமல் போனது. ஜலதரங்கம் கேட்டுண்டே சபாஷ் போட்டு தொடை தட்டிய ஆத்துக்கார மாமிகள் முகாரியில் முனங்கத் தொடங்கினர். அன்று ஸநாதான சதிராட்டம் போட்டோர் இன்று சாமான்யர்கள் முன் சலாம் ஆட்டம் போட்டு நெளிகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில் சென்னையில் நாடகக் கொட்டகை ஒன்றில் “பஞ்சமர்களுக்கும் குஷ்ட நோயாளிகளுக்கும் இடமில்லை” என்று இருந்தது.
பேருந்து பயண சீட்டில் “பஞ்சமர்களுக்கும் குஷ்ட நோயாளிகளுக்கும் இடமில்லை” என்று இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தோர்க்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு இருந்தது. இதனால், பார்ப்பனரல்லாதாருக்கு முற்றிலும் மருத்துவம் படிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாதிருந்தது. பொதுக்கிணறு மற்றும் குளங்களில் நீர் எடுக்கும் உரிமை இல்லாதிருந்தது. இன்னோரன்ன கொடுமைகள் அனைத்தும் சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சாரத்தால் – போராட்டத்தால் ஒழித்துக்கட்டப்பட்டது.
சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிட மிகவும் காரணமாக அமைந்தது “வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்” எனும் இட ஒதுக்கீடு கொள்கையாகும். தந்தை பெரியார் கேட்ட 50% இட ஒதுக்கீடு காங்கிரஸ் பேராயக் கட்சியால் மறுக்கப்பட்டதன் விளைவு சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியாரின் உழைப்பு, இட ஒதுக்கீட்டை நீதிக்கட்சி ஆட்சியில் 1928 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 69% இட ஒதுக்கீடு என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு அரசில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% மேல் வழங்கப்படக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மிகப்பெரும் பேராபத்து வெடித்தது.
இந்தப் பேராபத்திலிருந்து 69% இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட செய்வதறியாது தமிழ்நாடு அரசு விழித்தது. சட்டத்துறையும் பரிகாரம் காணத் தெரியாது தவித்தது. இந்நிலையில் திராவிடர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் இதற்கு தீர்வு தந்தார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் 31-Cபிரிவின் கீழ் ஒரு தனிச்சட்டத்தை நிறைவேற்றி அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தபின் 9ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதற்கு குடியரசு தலைவரின் கையொப்பம் பெற்றிட்டால் தமிழ்நாட்டின் 69 % இட ஒதுக்கீடு நீதி மன்ற தலையீட்டிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படும் என்று கூறிய ஆலோசனைப்படி அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் செயல்பட்டார்.
அதன் விளைவாக முதல்வர் ஜெயலலிதா – பிரதமர் நரசிம்மராவ் – குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆகிய ஆரிய மும்மூர்த்திகளை (பார்ப்பனர்களை) இயக்கிடும் சூத்திரதாரியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடும் முயற்சி எடுத்து, மேற்படி தனிச்சட்டம் 9-ஆவது அட்டவணை பாதுகாப்பிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.
பார்ப்பனர்கள் தவிர்த்த பிற வர்ணத்தாருக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமையில்லை. புரோகிதரைக் கொண்டு தற்காலிகமாக உயர் ஜாதியினராக மாற்றப்பட்டு பின் வேதமந்திரம் ஓதி (சமஸ்திருதத்தில்), சப்த அடி முறைப்படி தீவலம் வந்து திருமணம் செய்தபின் மீண்டும் சூத்திரனாகவே மாப்பிள்ளை ஆக்கப்படுவார் என்ற புரோகிதத் திருமணத்தை தந்தை பெரியார் எதிர்த்து, சுயமரியாதைத் திருமணத்தை உருவாக்கி, தமிழர் தலைமையில் – தமிழிலே திருமணம் நடைபெறும் வாழ்க்கைத்துணை நல ஒப்பந்த விழாவை பெரியார் அறிமுகப்படுத்தினார். ஆயிரக்கணக்கில் சுயமரியாதைத் திருமணங்கள் நீதிமன்றத்தில் செல்லாது என்றபோதும் நடந்தேறியது.
பேரறிஞர் அண்ணா 1967 – இல் முதலமைச்சாரக ஆனபின் சுயமரியாதைத் திருமணம் முன்தேதியிட்டு சட்டம் ஆனது. ஆரியத்தின் கொட்டத்திற்கு ஆணி அறையப்பட்டது. அந்த சட்டத்தை இந்திய ஒன்றியமே ஏற்க வேண்டும் என்ற குரலும் எதிரொலிக்கத்தொடங்கி பல்லாண்டு ஆகிவிட்டது.
தனது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் முக்கிய ஒன்றான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக்கு பெரியார் நடத்திய பல போராட்டங்களின் முடிவாக – ஹிந்திப் பேசாத மக்கள் ஹிந்தியை ஏற்கும் வரை ஒரு போதும் ஹிந்தி கட்டாயமாக்கப்படாது என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் தந்திட்ட உறுதிமொழி இன்றும் உயிரோடு இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் இந்திய ஒன்றியத்தின் பிரதமரிடமே உறுதி மொழி பெற்றுள்ளது என்பது இந்திய வரலாற்றில் வேறு எந்த அமைப்புக்கும் இல்லா சரித்திரச் சாதனையாகும்.
சுயமரியாதை இயக்கம் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி பயிலும் உரிமைக்கு – ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திடும் உரிமை கிடைப்பதற்கு வகுப்பு வாரி விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதித் திட்டத்தை முன்வைத்ததோடு – கல்விகற்கும் உரிமைக்கு களம் பல கண்டது. இன்று பார்ப்பனரல்லாத மக்களுக்கு கிடைத்திடும் கல்வி உரிமையின் விளைவாக திராவிடர் இனத்தினர் (கருப்பர் கூட்டம்) கல்வித்துறையில் கலக்குகிறார்கள். இது கண்டு வெறுப்பர் கூட்டம் (ஆரியர்) நாக்குத் தொங்க ஏக்கத்தோடு பார்க்கிறார்கள்.
ஆரியர் இல்லா அமைச்சரவையை அறிஞர் அண்ணா அமைத்துக்காட்டினார். அதே கட்டமைப்பை உறுதியாக்கி – இறுதியாக்கி கல்லூரி கல்வி வரை இலவசக் கல்வியை முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கினார். அதிலும் பெண்ணினம் ஆண்களை மிஞ்சிய சாதனைகளை ஆண்டுக்கொருமுறை புதுப்பித்த வண்ணம் உள்ளனர்.
இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் கட்டணமில்லா கல்வி – காலையும், மதியமும் சத்தான உணவு – விலையில்லா மிதிவண்டி – மகத்தான அறிவைப் பெருக்கிட மடிக்கணிணி – முழுமையான அறிவியல் ஆய்வகம் – வலிமையான உடல் அமைய விளையாட்டிடம் – ஒலிம்பிக் போட்டியை குறி வைத்து பயிற்சி – கற்றல் மேம்பட உதவும் வகையில் இருக்கைகள் – பேருந்து பயண உரிமை அட்டை – சமத்துவம் காத்திடும் பள்ளிச் சீருடை – காணொலியின் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பு – கைக்கு எட்டிய தூரத்தில் அயல்நாட்டுப் படிப்பு – கல்விகற்க வட்டியின்றி நிதி வழங்கும் வங்கிகள் என ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர்கல்வி கற்று சாதனை மகுடத்தில் வைரக்கற்களாய் ஜொலிக்கிறார்கள்.
‘நேக்கு தான் படிப்பு வரும்’ என்ற காயத்ரி மந்திரக் கூட்டத்தாரை எட்டிய வரை காணவில்லை. காணும் இடமெங்கும் கருப்பு – இதுதான் நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பு.
கல்லூரி கல்வி பயிலும் மாணவியர்க்கு மாதம் ரூ.1000 மாணவர்களுக்கு ரூ.1000 குடும்பத்தலைவிக்கு உரிமைத் தொகை ரூ.1000 மகளிர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க விடியல் பயணத்திட்டம் என பிறப்பு முதல் இறப்பு வரை மக்களை காக்க செயலாற்றும் மனித நேய – மனித சமத்துவ திராவிட மாடல் அரசு போல் வேறெங்கும் உண்டா? என்று நெஞ்சு நிமிர்த்திக் கேட்டிடும் வெற்றிக்குரல்.
சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு பள்ளிக்கூடம் நமக்கில்லை. இன்று தொடக்கப்பள்ளி முதல் பன்னாட்டுப் பள்ளி வரை இருக்கிறது.
அன்று காசுகொடுத்தும் பேருந்தில் பயணிக்க இடமில்லை. இன்று மகளிருக்கு காசின்றி விடியல் பயணம் – மாணவர்க்கு இலவச பயணச் சீட்டு அட்டை. அன்று ஒரு வேளை உணவுக்கு வழியில்லை இன்று இரண்டு வேளை உணவு. அன்று கட்டணக் கல்வி, இன்று இலவச கல்வி. அன்று குடிப்பதற்கு தனி தண்ணீர் பானை, இன்று பொதுக் குடிநீர் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். அன்று காலணி அணிந்து செல்லக் கூடாது. இன்று அரசாங்கமே இலவசக் காலணி வழங்கி கல்வி பயில அழைக்கிறது.
தந்தை பெரியாரால் கிடைத்திட்ட இடஒதுக்கீடு தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களால் பாதுகாக்கப்பட்டது.
சமூக நீதிக்கு பெரியார் முதல் சட்டத்திருத்தம் செய்திட போராடி வெற்றி பெற்று சமூகநீதியை பாதுகாத்தார்.
சமூகநீதியை நீதிமன்ற தலையீட்டிலிருந்து பாதுகாக்க தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி தானே ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசுக்கு எழுதிக்கொடுத்து சமூகநீதியை பாதுகாத்தார்.
இந்திய ஒன்றியத்தில் தேர்தல் மூலம் எந்தப் பதவிக்கும் செல்லாமல் இயங்கும் இயக்கத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரைந்தளித்திட்ட சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசு பெற்றுக்கொண்டு மேற்கண்டபடி நிறைவேற்றி 69% இடஒதுக்கீட்டை பாதுகாத்திட்ட வரலாற்று நிகழ்வு ஆரிய ஆதிக்கக் கோட்டையில் சிறைபட்டு இருந்த சமூகநீதிக்கொடியை திராவிடர் இனத்தலைவர் பெரியாரின் சீடர் தமிழர் தலைவர் வீரமணி தத்துவப்போரில் வென்றெடுத்து, திராவிடர் இனத்தின் மானங்காத்திட மலைமீது பறக்க விட்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
சுயமரியாதை இயக்கத்தின் வகுப்புரிமைக் கொள்கை இந்திய ஒன்றிய அளவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட மண்டல்குழு பரிந்துரையை சட்டவடிவம் பெறச் செய்திட அகில இந்திய அளவில் 42 மாநாடுகள் – 16 போராட்டங்கள் நடத்தி சமூகநீதியின் சின்னம் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. அதன் பயனை இன்றைய தினம் இந்திய ஒன்றிய அளவில் 27% இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) என்று வழங்கப்படுகிறது.
இவரது இந்தப் பணியை பாராட்டி எழுதிய மலேசியா நாட்டின் தமிழ்முரசு ஏடு – கி.வீரமணி மட்டும் இல்லாது போயிருந்தால் மண்டல் குழு பரிந்துரை பளிங்கு கல்லறைக்குள் புதைக்கப்பட்டிருக்கும் என்று எழுதியது.
சுயமரியாதை இயக்கம் தனது நூற்றாண்டில் பல தாக்கங்களை உருவாக்கி இருப்பதை பார்த்தோம். இன்னும் பல தடைகள் தகர்க்கப்பட வேண்டும். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் முழு வெற்றி பெற வேண்டும்.
அய்யாவும் – அம்மாவும் தன்னிடம் ஒப்படைத்த சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை சூடு தணியாமல் பாதுகாக்கும் – யாரும் தொட்டுப் பார்க்க நினைக்கவே அஞ்சும் வண்ணம் களைப்பின்றி – சலிப்பின்றி -களமாடும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நூற்றாண்டு கடந்து வாழ்ந்து – சுயமரியாதை இயக்கத்தின் அடுத்த நூற்றாண்டுக்கும் தலைமை ஏற்கட்டும். சுயமரியாதை உலகம் உருவாகட்டும். அதற்கு பேதமிலா பேசு சுயமரியாதை உலகென்று பெயர் விளங்கட்டும்.
வெல்க சுயமரியாதை இயக்கம்!