பூவிருந்தவல்லி மருத்துவர் சரோஜா
நீங்களோ எம்.பி.பி.எஸ்., முடித்த மருத்துவர்! பெரியார் தொடக்கக் கல்வி பயின்றவர். பெரியாருக்கு எப்படி நீங்கள் மாணவியாக இருக்க முடியும்?
நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மருத்துவர்களுமே பெரியாரின் மாணவர்கள்தான்! அவர் சமூக மருத்துவராகச் செயல்பட்டு, எங்களை மருத்துவர்களாக உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் அய்யாவின் படத்தை என் மருத்துவமனையில் மாட்டி இருக்கிறேன். ஒரு சிலர் இதை வியப்போடு கேட்பார்கள். நான் தயக்கமின்றி பதில் சொல்வேன்.
“பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குத் திறமைகள் நிறைய இருக்கிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் அவர்களுக்கு உதவித் தொகைக் கொடுத்தால் அவர்களும் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்”, எனப் பெரியார் வலியுறுத்தியதன் விளைவே கல்வி உதவித் தொகைக் (Schalarship) கிடைத்தது. அந்த உதவித் தொகையில் தான் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவானார்கள். எங்கள் குடும்பத்தில் மட்டும் 4 மருத்துவர்கள் உருவானோம். சரோஜா என்கிற என் பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ்., பட்டம் இருப்பதற்குக் காரணமே பெரியார்தான்!
நீங்கள் பிறந்து, வளர்ந்தது எங்கே?
1937ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்தேன். இப்போது 87 வயதாகிறது. பெற்றோர் தியாகராஜன் – தில்லையம்மாள். இராமசாமி (செட்டியார்) உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு வரையிலும், 7 ஆம் வகுப்பு முதல் கடலூர் செயின்ட் தாமஸ் பள்ளியிலும் படித்தேன். அப்போது என் அப்பாவிற்கு மாதம் 20 ரூபாய் ஊதியம். வருவாய்துறை, பதிவுத்துறை, உணவு வழங்கல், தொழிலாளர் துறை எனப் பலவற்றிலும் வேலை செய்தார். சிறுகச் சிறுக முன்னேறியவர். அப்பா எவ்வளவு குறைந்த வருமானம் ஈட்டினாலும், அதில் ஒரு ரூபாயை அம்மா சேமித்துவிடுவார். நான் செயிண்ட் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் போது வட்ட வழங்கல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்தார்.
நான் 10ஆம் வகுப்பு முடித்த நிலையில், இனி படிக்க வைக்க வாய்ப்பில்லை என அப்பா கூறிவிட்டார். அப்போது எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமாய் இருந்த தலைமையாசிரியர் ஒருவர், எனக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். அதை வைத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் “இன்டர்மீடியட்” சேர்ந்தேன். 10ஆம் வகுப்புத் தேர்வில் நான் 74 விழுக்காடு பெற்றதாலும், நன்றாகப் படிப்பேன் என்பதாலும், என் பெற்றோர் என்னை மருத்துவராக்க வேண்டும் என விரும்பினார்கள். தொடர் போராட்டத்தின் விளைவாக 1955 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயிலத் தொடங்கினேன்!
உங்களுக்குப் பெரியார் கொள்கை
எப்படி அறிமுகமானது?
எனது அம்மாவின் தங்கை பெயர் மனோரஞ்சிதம். அவரது இணையர் சண்முகம். இவர் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தவர். இவர் பெரியார் கொள்கையின் மீது பிடிப்போடு இருந்தவர். எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம், எங்களை உட்கார வைத்து, கொள்கைகள் குறித்துக் கூறுவார். இதனால் எங்கள் குடும்பத்தில் சுயமரியாதைக் கருத்துகள் பரவின. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பெரியார், அண்ணா கூட்டங்கள் நடைபெறும். என்னையும் அங்கு அழைத்துச் செல்வார்கள். அதேநேரம் என்னுடைய இணையர் பழனியப்பன் ஒரு புத்தக நிலையம் நடத்தினார். ‘பச்சை அட்டை குடிஅரசு’, சிவப்பு வண்ணத்தில் வரும் ‘திராவிட நாடு’ போன்றவை விற்பனைக்குக் கிடைக்கும். மேலும்
ரஷ்யா, அமெரிக்காவில் இருந்தெல்லாம் பத்திரிகைகள் வரும். அதைப் பிள்ளைகளுக்கு வாசிக்கக் கொடுப்பார்1961இல் திருச்சியில் தி.பொ.வேதாச்சலம் அவர்களின் தலை மையில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. என்னுடைய இணையர் பழனியப்பன், ஆசிரியர் அவர்களுடன் ஒன் றாகப் படித்தவர். டார்பிட்டோ ஜனார்த்தனம், கோடை இடி குப்தா போன்றவர்கள் கூட்டத்திற்கு வந்தால், எங்கள் வீட்டில் தங்குவார்கள். அப்போது நான் பள்ளி மாணவியாக இருந்தேன். எனவே பெரியார் கொள்கையைப் பல வழிகளிலும் நான் கற்றுக் கொண்டேன்.
முதன்முதலில் பெரியாரை எங்கே சந்தித்தீர்கள்?
1963இல் சென்னை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தேன். அப்போது 42ஆம் எண் கொண்ட அறை பரபரப்புடன் காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது அங்கே பெரியார் இருந்தார். அவரருகில் ஆசிரியர் அவர்களும், சம்பந்தம் அய்யாவும் நின்று கொண்டிருந்தார்கள். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே, என் இணையர் மூலம் ஆசிரியரின் அறிமுகம் இருந்தது. அதனை நினைவாக வைத்து ஆசிரியர் அவர்கள், “நீங்கள் சரோஜா தானே?” என்று கேட்டார்கள். நான் வியந்து போனேன்.
பெரியாரிடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகம் செய்தார் ஆசிரியர். படுத்திருந்த நிலையில், என்னைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தார் பெரியார். ”பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து மருத்துவம் படித்து, இப்போது அறுவைச் சிகிச்சை நிபுணராக இருக்கிறார்” என அய்யாவிடம் அறிமுகம் செய்தார் ஆசிரியர். இதைக் கேட்ட பெரியாருக்கு மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து, இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, ”சந்தோசம், சந்தோசம்” என்று சொன்னார்கள். வாழ்நாளில் மறக்கவே முடியாத நினைவு அது!
குடும்பக் கட்டுப்பாட்டுப் பணியில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறுவார்களே?
ஆமாம்! 1963ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான் பணியில் அமர்த்தப்பட்டேன். அன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும், 8ஆம் தேதியாக இருந்ததாலும் பலரும் என்னிடம் தயக்கத்தை வெளிப்படுத்தினர். எனக்கு நேரங்களிலும், பஞ்சாங்கத்திலும் நம்பிக்கைக் கிடையாது எனக் கூறி, அன்றே பணியில் சேர்ந்து விட்டேன். பூவிருந்தவல்லி சுகாதார நிலையம் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஒரு “மாதிரி” (MODEL) போன்று உருவாக்கினார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இங்கு பார்வையிட வந்துள்ளார்கள்.
அந்தக் காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு என்று பேசினாலே கிண்டல் செய்வார்கள்; கடுமையாகத் திட்டுவார்கள்; அடிக்கவும் வருவார்கள்! இந்தத் துறையில் பல மருத்துவர்களும் தாக்குப் பிடிப்பது சிரமமாக இருந்தது. இந்நிலையில் நான் இதைச் சவாலாக ஏற்றேன். பூவிருந்தவல்லி மக்களோடு நானும் நெருக்கமாய் பழக ஆரம்பித்தேன். எந்த எதிர்ப்பையும் மனதில் கொள்ளாமல் வீடு, வீடாகச் சென்று குடும்பக் கட்டுப்பாடு குறித்து விளக்கினேன். நான் சைக்கிளில் தான் அனைத்து இடத்திற்கும் செல்வேன். பிறகு நல்ல மாற்றங்கள் வந்தன. இந்தப் பிரச்சாரத்தின் போதுதான் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் இணையர் விசாலாட்சி அம்மாவை அந்தப் பகுதியில் சந்தித்தேன்.
பூவிருந்தவல்லி பகுதியில் மருத்துவமனைத் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
அரசுப் பணியில் இருந்து சில காரணங்களுக்காய் நான் விலகிவிட்டேன். பூவிருந்தவல்லி பகுதியில் அப்போது பெண் மருத்துவர்களும் இல்லை. அந்தக் காலத்தில் மகப்பேறு சிகிச்சைக்கு எழும்பூர் அல்லது திருவல்லிக்கேணி பகுதிக்குத் தான் செல்ல வேண்டும். அதேநேரம் இந்தப் பகுதி மக்களோடும் எனக்கு நல்ல உறவு இருந்தது. எனவே, பூவிருந்தவல்லி பகுதியில் எனது அம்மா தில்லையம்மாள் நினைவில் “தில்லை மருத்துவமனை” எனத் தொடங்கினேன்.
இதற்கிடையில் பெரியாரைச் சந்தித்த போது, “அரசு வேலையை விட்டு ஏன் விலகினீர்கள்?” எனக் கேட்டார். நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே, “சரோஜா தன்னம்பிக்கையும், நல்ல உழைப்பு கொண்டவர். அவர் வெற்றி பெறுவார்”, என ஆசிரியர் கூறினார். உடனே பெரியாரும் பாராட்டுத் தெரிவித்தார். ஆசிரியர் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிவிட்டேன்.
பெரியார் படத்தை இருக்கை மேல் வைத்துள்ளீர்கள், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்கிறீர்கள். வணிக ரீதியில் மருத்துவமனை எப்படி செயல்படுகிறது?
நல்ல பெயரோடும், புகழோடும் இருக்கிறது. பெரியார் என்பவர் யார்? நமக்காகப் பாடுபட்டவர். அப்படி இருக்கும் போது அந்த அடையாளம் நம்மை மென்மேலும் உயர்த்தவே செய்யும். மனிதாபிமான அடிப்படையிலும், நியாயமாகவும், அன்புடனும் நாம் நடந்து கொள்ளும் போது மக்கள் நம்மை விட்டு எங்கே போவார்கள்!
படிக்கிற காலம் தொட்டு இன்று வரை ஆசிரியரை அறிந் துள்ளீர்கள். அந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
எனது இணையர் மூலம் ஆசிரியர் அறிமுகம். ஆசிரியர் மூலமே பெரியார் அறிமுகம். 1962 முதல் 1973 வரை பெரியாரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்துள்ளேன். நாம் எந்தச் செயல் செய்தாலும் உடனே பாராட்டுவதும், அங்கீகரிப்பதும் ஆசிரியருக்குக் கைவந்த கலை! பூவிருந்தவல்லி பகுதிக்கு வருகிற வேளையில், ஆசிரியர் அவர்கள் ஒரு சிலமுறை வீட்டிற்கு வந்துள்ளார்கள். அதைவிட வரலாற்றுப் பெருமை எனக்கேது! ஆசிரியரை நான் “அண்ணா” என்றுதான் அழைப்பேன்.
ஆசிரியர் அறிவிக்கிற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பூவிருந்தவல்லி கழகத் தோழர்கள் தகவல் தெரிவிப்பார்கள். நானும் என்னால் முடிந்த நன்கொடைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் அன்று கூட எங்கள் வீட்டில் கழகக் கொடியை ஏற்றினோம்.
எண்ண எண்ணத் தெவிட்டாதது திராவிடர் இயக்கத்தின் ஆளுமையும்! பெருமையும்!! திராவிடர் இயக்கத்தவராய், பெரியார் தொண்டராய் வாழ்வதில் பெரும் சுகம் இருக்கிறது” என மருத்துவர் சரோஜா கூறினார்.