வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான் திருமணம் நல்ல முறையில் நடக்கும் என்ற நிலையில்லாமல், உயர் ஜாதிக்காரனின் பிரவேசம் இல்லாமல் இந்தத் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணம் என்பது தெய்விகச் செயல் என்பதிலே நம்பிக்கையுள்ள மக்கள் எல்லாக் காரியங்களையும் தெய்விகக் காரியங்கள் என்றுதான் கருத வேண்டும். அந்தப்படியே எல்லாக் காரியங்களையும் தெய்விகக் காரியங்கள் என்று ஒப்புக் கொண்டு, திருமணத்தின்மீது மட்டும் தனித்து, மற்றொரு தெய்விகத் தன்மை கற்பிப்பது முன்னுக்குப் பின் முரணான செய்கையாகும். ஆனால், இந்தத் திருமணம் எளிய முறையில் ஆடம்பரமற்றுப் பலப்பல அனாவசியச் சடங்குகள் அற்று நடைபெற்று இருக்கிறது. இந்தத் திருமணம், வைதிகத் திருமணத்தைவிட உறுதி வாய்ந்த திருமணம் ஆகும்.
வைதிகத் திருமணத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவார்கள். இந்தத் திருமணத்தில் – பதிவுத் திருமணத்தில் பெண்களும் ஆண்களோடு சரி நிகர் சமானம் என்ற நிலை உண்டு. வைதிகத் திருமணம் செய்துகொண்ட கணவன் பெண்டாட்டியை என்ன செய்தாலும், எவ்வளவு அடித்தாலும் கேள்வி கேட்பார் கிடையாது.
ஒரு நிகழ்ச்சி என் நினைவிலே இருக்கிறது. 1927ஆவது ஆண்டில் ஒருவன் தன் மனைவியின் கையை அடித்து ஒடித்து விட்டான் என்று வழக்குத் தொடரப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் அந்தக் கணவனுக்கு 10 ரூபாய் அபராதம் விதித்தார். மறுபடியும் அந்த வழக்கு அய்க்கோர்ட்டுக்குப் போனபோது, மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யக் கணவனுக்கு உரிமை இருக்கிறது என்று கூறி நீதிபதி வழக்கைத் தள்ளிவிட்டார். இந்தப்படி வைதிகத் திருமணத்தில் ஆடு, மாடுகளைச் சந்தையில் வாங்குவது போலத்தான் பெண்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் அதானால்தான் அதற்குக் கன்னிகாதானம் என்றே பெயர் கொடுத்தார்கள். அந்தப்படி, தானமாகக் கிடைத்த மனைவியை கணவன் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பக்தர்கள் கதையைப் படித்துப் பார்த்தால், பெண்டாட்டியைப் பிறருக்குக் கொடுத்து, மோட்சத்திற்குப் போனான் என்று சொல்லப்பட்டிருக்கும்.
இந்த மாதிரியாக நடக்கும் திருமணங்களில் அத்தகைய அசம்பாவிதமான காரியங்களுக்கு இடமே இல்லை. கணவனுக்கும், மனைவிக்கும் பிடிக்கவில்லையென்றால், அவர்கள் விவாகரத்து செய்துகொள்ளலாம். இந்த மாதிரியான திருமணங்களால் பெண்களுக்குத்தான் அதிக லாபம் ஆகும்.
– 28.5.1950அன்று வேலூரில் நடைபெற்ற ராஜம்மாள்-பெருமாள் மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு
– ‘விடுதலை’- 30.5.1950.