ராஜாராம் மோகன் ராய் நினைவு நாள் இன்று [27.09.1833]
சதி என்பவர் இறைவன் சிவபெருமானின் மனைவி.(இவரின் மறுபிறவியே பார்வதி தேவியாம்)
தட்சன் என்னும் மகாசக்ரவர்த்தியின் மகள் சதி. சதி சிவபெருமான் மீது காதல் கொள்கிறாள். தட்சன் விருப்பதிற்கு மாறாக சிவனைத் திருமணம் செய்கிறார். .
இதனால் அவமானம் அடைந்த தட்சன் தேவர்கள், கடவுள்களை அழைத்து யாகம் செய்கிறார். இதை அறிந்த சதி தனது கனவனை அழைக்காமல் யாகம் ஏன் நடத்துகிறாய் என்று கூறி தனது தந்தையோடு வாக்குவாதம் செய்கிறார். தனது கணவனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் தனக்கு இழைக்கப்பட்டது என்று கூறி யாகத்தீயில் விழுந்து செத்துப் போகிறார்.
இந்த புராணத்தை மய்யப்படுத்தியே சதி என்பது சமூகத்தில் புகுத்தப்பட்டது.
கணவர் இறந்த பிறகு பெண்களை உயிரோடு எரிக்கும் நடைமுறையை இந்தக் கதையை சொல்லித்தான் ஆயிரம் ஆண்டுகளாக நடத்தி வந்தனர். எத்தனை எத்தனை பெண்கள் இதில் எரிக்கப்பட்டிருப்பார்கள்?
ராஜஸ்தானில் உள்ள ஒரு நாடோடிப் பாட்டில் சுடுகாட்டில் ஆடுமேய்த்துக்கொண்டு இருந்த ஒருவர் சதி குறித்துப் பாடலாக பாடும் பாடல் ஒன்றின் மூலம் சதியின் கொடூரம் விளங்கும்.
‘‘ கணவன் இறந்ததும், தன்னை எரித்துவிடுவார்கள் என்று இளம்பெண் ஓட எத்தனிக்கிறார். அவரைப் பிடித்து வந்து பாங்க்(கஞ்சா) சாற்றையும் வெல்லக்கரைசலையும் வாயில் ஊற்றுகிறார்கள்.
அப்பெண் போதையில் தள்ளாடுகிறார். இருப்பினும் அவளுக்குள் தான் சாகப்போகிறோம் என்ற அச்சம் கண்ணில் இருந்தது, ஊர் கூடி குளிக்கவைத்து அவளுக்கு ஆடை அணிவிக்கின்றனர். பின்னர் சுடுகாட்டுக்கு அவளைக் கொண்டு வருகின்றனர். சதி மந்திரம் ஓத, ஓ என்ற கூக்குரல் எங்கும் ஒலிக்க கயிறு மற்றும் மரப்பட்டைகளால் இறந்த கணவனின் உடலோடு கட்டப்படுகிறாள் அப்பெண் அவளுக்குள் போதை ஒருபுறம், தான் சாகப்போகிறோம் என்ற அச்சம் ஒருபுறம் பிறகு தீ வைக்கப்படுகிறது, சுற்றிலும் கம்பை எடுத்துக்கொண்டு தீயில் எரியும் போது அலறும் பெண்ணை அடித்து எழவிடாமல் செய்கிறார்கள். சில நிமிடங்களில் அந்த ஓலம் ஓய்ந்துவிடுகிறது. மேலும் மேலும் உப்பும் நெய்யும் வீசப்படுகிறது, தீ கோரமாக எரிந்து முடிகிறது. பெண்ணின் துணிகள் ஏலம் விடப்படுகிறது. நாவிதரும், சலவைக்காரர்களும் வெட்டியானும் ஏலம் எடுக்கிறார்கள். கூட்டம் கலைகிறது’’ என்று பாடுகிறான்.
கொடூரச் சதிக்கு மூல காரணம் மேலே கூறிய புராணக் கதைதான். இதை ஒழிக்கத்தான் ராஜாராம் மோகன் ராய் போராடினார். பெண்டிங் பிரபு சட்டமியற்றினார்.
4 .12.1829 அன்று வில்லியம் பெண்டிங் அவர்களால் சதியை எதிர்த்து சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தை எதிர்த்து ஸநாதனிகள் பிரிவியூ கவுன்சிலிற்கு ஓடினார்கள் அங்கும் சட்டம் செல்லும் என்று கூறிய பிறகு தோல்வியோடு திரும்பினார்கள்.
இருப்பினும் ஓயவில்லை ஸநாதனிகளின் வெறி. 1987இல் இராஜஸ்தானில் உள்ள டோரலா என்ற கிராமத்தில் திருமணமாகி 9 மாதமேயான 18 வயது பெண் ரூப் கன்வார் கணவர் மான்சிங் இறப்புக்கு பின் கட்டாயத்தின் காரணமாக உடன்கட்டை ஏற்றப்பட்டார். சமீபத்தில் ஒடிசாவில் ஒரு பெண் கணவரின் உடலோடு எரிக்கப்பட்டார். இக்கொலைக்கான விசாரணை இன்றும் நடக்கிறது.