கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடத்தப்பட்ட வித்யாஜோதி, வித்யா பூஷன் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி வழக்கம் போல தனது காவி வாடைக் கருத்துகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
‘‘ஸநாதன தர்மம் என்பது மதம் அல்ல; வாழ்க்கை முறை, ஆங்கிலத்தில் தர்மம் என்ற சொல் கிடையாது. நம் அனைவரையும் ஒரே தர்மம் வழி நடத்துகிறது. அதன் அடிப்படையில் தான் பாரதம் உருவானது. மதச் சார்பின்மை என்ற வார்த்தை நம் அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை. சில தரப்பினரைத் திருப்திபடுத்துவதற்காக, அது இடையில் செருகப்பட்ட வார்த்தை’’ என்று ‘திருவாய்’ மலர்ந்துள்ளார்.
இடையில் செருகப்பட்டதாகவே இருக்கட்டும்; இதுவரை 106 முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட காரணத்தால் இவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஆளுநர் ரவி கூறப் போகிறாரா?
அப்படி வெளிப்படையாகக் கூறட்டுமே பார்க்கலாம்; அந்த நேரமே அவரின் சீட்டுக் கிழிந்து விடும்.
இப்பொழுது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மதச்சார்பின்மை (Secularism) என்பதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை – இதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கண்டிப்பாகவே மீறியிருக்கிறார். இதனைத் தான் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘ஆளுநர் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருக்கிறார்; இதன்மீது நடவடிக்கை தேவை’’ என்று சட்ட அமைச்சர் என்ற தன்மையில் உரிமையில் இவ்வாறு கூறி இருக்கிறார்.
மதச் சார்பின்மை தான் சட்டத்தின் நிலைப்பாடு – இதனை வலியுறுத்திய காந்தியார்தான் முதல் உயிர்ப் பலி!
முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவும் மதச் சார்பின்மையில் அழுத்தமாகவே இருந்து வந்திருக்கிறார். அதனால்தான் காந்தியாரைக் கொன்றதற்குப் பதிலாக முதலில் நேருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வமான இதழான ‘பஞ்சான்யா’வில் எழுதப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தமானது.
காந்தியார் எந்த ‘மதச்சார்பின்மை’ கொள்கைக் காரணமாகக் கொல்லப்பட்டாரோ, அந்த வரிசையில் தான் நரேந்திர தபோல்கர் (2012), கல்புர்கி (2015), கோவிந்த் பன்சாரே (2015), கவுரி லங்கேஷ் (2017) வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைகளின் பின்னணியில் இருந்த அமைப்பின் பெயர் ஸநாதன சன்ஸ்தா என்பதாகும்.
தபோல்கர் படுகொலையில் இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இருவர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதிலிருந்தே ‘ஸநாதன’ என்பதன் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்்.எஸ். முரளிதரன் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலைக் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று கூறியதுண்டு. அதனைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசுிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (26.7.2017).
‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வங்காளத்தைச் சேர்ந்த பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ என்ற நாவலில் இடம் பெற்ற பாடல் அது.
இந்தப் பாடலில் ஹிந்து மதத்தில் முப்பெரும் தேவிகளாகக் கூறப்படும் பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் கடவுள்களைப் பற்றிய துதிபாடல் இது.
மற்ற மதக்காரர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் இந்த நாட்டில் இல்லையா? அவர்கள் எப்படி இந்தப் பாடலை ஏற்றுக் கொள்வார்கள்?
1937ஆம் ஆண்டில் ராஜாஜி சென்னை மாநிலப் பிரதமராக இருந்த நிலையில் சட்டமன்றம் தொடங்கப்படும்போது ஒவவொரு நாளும் இந்தப் பாடலைப் பாட வைக்க முயன்று, கடும் எதிர்ப்புக் காரணமாக தோல்வியுற்றார் என்ற விவரங்களை ‘விடுதலை’ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் திராவிடர் கழகத் தலைவர்.
மதச் சார்பின்மையைக் கொச்சைப்படுத்தி ஆளுநர் ஆர்.என். ரவி வெளிப்படுத்திய கருத்தையொட்டி இதனை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை என்பதைக் கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?
இந்தியா ஒரே நாடு அல்ல; ஒரு துணைக் கண்டம்! பல மாநிலங்கள், பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் அம்சத்தை – நோக்கத்தைப் பொதுவானதாக ஆக்க முடியும்?
இதில் இன்னொரு வேடிக்கை வினோதம், தன் முரண் என்ன தெரியுமா?
நாகர்கோயில் பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஹிந்து தர்மத்தைப் பற்றியும் சிலாகித்துள்ளார். அவரை நோக்கி மிகவும் எளிமையான ஒரு கேள்வியை எழுப்பினால், கண்டிப்பாக மூச்சுத் திணறிப் போய் விடுவார் என்பதில் அய்யமில்லை.
ஒரே மதம் ஹிந்து மதம் என்கிறார்களே, அந்த ஹிந்து மதத்திற்குள் தான் எத்தனை எத்தனை முரண்பாடுகள்!
ஸ்மார்த்தத்தை வைணவம் ஏற்றுக் கொள்ளுகிறதா? சிவனை வழிபடுபவர்கள் பெருமாளை வணங்குவார்களா? பெருமானள வழிபடுவோர்
சிவனை ஏற்றுக் கொள்வார்களா?
சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குள் தனி சன்னதியோடு இடம் பெற்றிருந்த கோவிந்தராஜப் பெருமானை மூன்றாம் குலோத்துங்க மன்னன் கடலில் தூக்கி எறியவில்லையா?
இதைவிட இன்னொரு விபரீதமான வேடிக்கை உண்டு.
வைணவர்களுள் வடகலை – தென் கலை என்ற இரு பிளவுகள் குஸ்தி போடும் அளவுக்கு உண்டு. காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை ஆங்கிலேயர் ஆ்டசிக் காலத்தில் லண்டன் பிரிவிக் கவுன்சில் வரை சென்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?
இந்த இலட்சணத்தில் தான் மதச் சார்பின்மைபற்றி கேலி செய்கிறார் – அரசமைப்புச் சட்டத்தில் இடைச் செருகல் என்று சினம் கொள்கிறார் ஆளுநர் ரவி.
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகப் பேசிய ஒருவர் ஆளுநராக நீடிக்கலாமா என்பது ஒரு நெற்றியடிக் கேள்வியே!