சென்னை, செப்.26 சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் மறையவில்லை, நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்திய பிறகு, இன்று (26.9.2024) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டி வருமாறு: இயல்பாகவே, பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் களத்திலே நிற்கக்கூடிய போராளியாவார். சமூகநீதிப் பிரச்சினை என்று வந்தால், எப்போதும் அவர் ஒரு போராளிதான். வாழ்நாள் போராளியாக இருந்து, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் உரிமையைப் பெற்றுத் தந்தார் என்றால், அவரை என்றைக்கும் சமூகநீதி வரலாறு மறக்காது; சமூகநீதி வரலாற்றிலே ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கியவர். அவர் மறையவில்லை, நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்றார், உணர்வுப்பூர்வமாக!
இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.