தமிழ்நாடு மழை மறைவுப் பகுதி, ஆண்டுதோறும் ஜூன் துவங்கி அக்டோபர் வரை மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அப்பால் பெரும் மழைப் பொழிவு இருக்கும் அந்த நீரில் முக்கால் பாகம் கடலில் கலக்கும் மிகவும் குறுகிய பகுதி. ஆகையால் அங்கே மேட்டூர், கிருஷ்ணராஜசாகர் போன்ற பிரமாண்டமான அணைகளைக் கட்ட முடியாது. அதே நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின்கீழ் பெரு நிலப்பகுதி விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டது, ஆனால், அதற்கு தேவையான நீராதாரத்தை பெறாமல் மழைமறைவுப் பகுதியாகவே தமிழ்நாடு பெரும் நிலப்பகுதி இருந்தது,
தமிழ்நாட்டின் பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்துதான் உருவாகிறது, சில ஆறுகள் தமிழ்நாடு பகுதியில் உருவானாலும் அதன் போக்கில் கேரளப்பகுதிக்குச்சென்று விடுகிறது. இயற்கை மாற்ற முடியாது, ஆனால் நீராதாரத்தை பெருக்கவேண்டும், அந்த சீரிய சிந்தனையில் தான் கலைஞர் அணைகளைத் திட்டமிட்டுக் கட்டினார்
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது விவசாயத்தின் மீதும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டினார். தமிழ்நாட்டில் உள்ள மொத்த அணைகள், 115. அதில் இந்தியா விடுதலை பெற்ற பின், கட்டப்பட்டவை 90.
விடுதலைக்குப் பின், அய்ந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே தான், காங்கிரஸ் ஆட்சியில், 19 ஆண்டுகளில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன. 1967இல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அய்ந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, ஓராண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏற்கெனவே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது மனதில் விதைத்த மண்ணின் வளம் பெருக நீராதாரம் அதற்கு ஆறுகளை தடுத்து அணைகட்டவேண்டும் என்ற விடாமுயற்சியால், அவர் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும், உப்பாறு, மேல் ஆழியாறு, சோலையாறு, மணிமுக்தா நதி, சிற்றாறு, கீழ்கொடையாறு, மேல்கொடையாறு , கடனா, பரப்பலாறு, ஹைவேவிஸ், மணலாறு, பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, ஆனைக்குட்டம், அடவிநயினார் கோவில், செண்பகத்தோப்பு, இருக்கன்குடி உள்ளிட்ட, 36 அணைகள் கட்டப்பட்டு அவற்றை பாசனம், குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தேனி மாவட்டத்தில், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகளை பார்வையிட்டும், திறந்தும் வைத்தார். இன்று தமிழ்நாடு பெரும் நிலப்பகுதி அது காவிரி டெல்டாவானாலும் சரி, தென்மாவட்டங்களாலும் சரி, பெருநை சமவெளி செழிப்பிலும் கலைஞரின் கைவண்ணம் இருக்கிறது. மிகச் சிறந்த பேச்சாளரும் இரண்டாம் உலகப்போரின் போது, இங்கிலாந்தின் பிரதமராக இருந்து மக்களை வழிநடத்திச் சென்றவருமான வின்சன்ட் சர்ச்சிலின் ”தேம்ஸ் நதி என் உதிரத்தில் ஓடுகிறது” அம்மண்ணிற்கு நான் கடமைப்பட்டவன் என்ற புகழ்பெற்ற உரையைப் போல் தமிழ்நாட்டில் இன்று ஓடும் நதிகள் ஒவ்வொரு தமிழரின் உதிரத்திலும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஓடுவதற்கு ஆறுகளின் நீரை சேமித்து விவசாயத்தை செழுமைப்படுத்தியதால் தான் என்பது கண்கூடாக தெரிந்த ஒன்று. மக்களின் மீது அக்கறையோடு பொதுநலத்தோடு நூற்றாண்டுகள் பெயர் சொல்ல அணைகளைக் கட்டியவர் கலைஞர் – ஆம், அவர் அணைகளின் நாயகர் தான்.