செப்டம்பர் முதல் வாரம் முதல் 10 கோடி பாஜக உறுப்பினர்கள் இலக்கு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடந்துவருகிறது, நேரடியாக உறுப்பினர் சேர்க்கை என்று அழைத்தால் பாஜகவை யாருமே சீண்ட மாட்டார்கள் என்பதால் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் பாஜகவினர் மோசடியான சில அமைப்புகளின் போர்வையில் நுழைந்து குறிப்பிட்ட எண்களுக்கு அலைபேசியில் அழைத்தால் உதவிகள் கிடைக்கும் என்று கூறியதும் – அவர்களின் பேச்சை நம்பி தொலைபேசி செய்தால் அடுத்த சில விநாடிகளில் ‘‘பாஜக வில் உறுப்பினராக சேர்ந்தமைக்கு நன்றி’’ என்ற குறுஞ்செய்தி உறுப்பினர் எண்ணோடு வருகிறது.
இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
நாடு முழுவதும் பாஜக பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதில் உறுப்பினர் சேர்க்கையும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சில நேரங்களில் பொது மக்கள் – தங்களுக்கே தெரியாமல், பாஜகவில் இணைந்துவிட்டதாக குறுஞ்செய்தி வருவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை ஏமாற்றி பாஜகவில் இணைத்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை என்ற பகுதியில் உள்ள அகத்தியர் வீதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நலத்திட உதவிகள் வழங்குவதாகவும், தீபாவளிப் பரிசு வழங்குவதாகவும் தனியார் சேவை அமைப்பு ஒன்றின் பெயரைச் சொல்லி சிலர் சென்றுள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதி மக்களை ஒரே இடத்திற்கு அழைக்காமல், அவரவர் வீடுகளுக்குச் சென்று, தாங்கள் ஒரு அறக்கட்டளையில் இருந்து வருவதாகவும் நலத்திட்ட உதவிகள் செய்வதாகவும் கூறி, அவர்களது தொலைப்பேசி மற்றும் ஆதார் எண்களைக் கேட்டுள்ளனர்.
வீடு வீடாகச் சென்று நலத் திட்ட உதவிகளைச் செய்வதாக பா.ஜ.க.வினர் கூறியது தொலைக்காட்சிகளிலும் வந்தது.
இதனை நம்பிய மக்களும் உடனே தங்கள் தொலைப்பேசி எண்ணையும், தங்கள் குடும்பத்தினரின் எண்களையும் அந்த நபர்களிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த எண்களுக்கு சில மணி நேரங்களிலேயே “பாஜக உறுப்பினராக சேர்ந்ததற்கு வாழ்த்துகள்” என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
பாஜகவில் இணைந்ததாக வந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் தங்களுக்கு வந்த குறுஞ்செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கொந்தளித்து வருகின்றனர். பாஜகவின் நூதன மோசடிக்குப் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்தப் பகுதி பெண்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இவ்வாறு செய்தது மிகவும் தவறு என்றும் தெரிவித்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் பிரதமா் மோடியின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக மாவட்ட மருத்துவ அணி சாா்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா்.
இலவசமாக மருத்துவப் பரிசோதனை நடைபெறும் என்று விளம்பரப்படுத்தி, மக்களை கூட்டிவைத்து பிறகு அவர்கள் குறித்த விவரங்கள், ஆதார் எண் உள்பட அனைத்தையும் பெற்று அவர்களுக்கு பாஜ்க உறுப்பினர் அட்டையைக் கொடுத்துள்ளனர்.
இதற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து அந்த மருத்துவ முகாமுக்கு வரவழைத்த தங்கள் பகுதி சமூக சேவை அமைப்பினரோடு சண்டையிட்டனர்.
குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் மருத்துவ உதவி தேவையா? உடனே அழைக்கவும் என்று அலைப்பேசி எண்னோடு விளம்பரங்கள் கொடுத் துள்ளனர். அந்த எண்ணிற்கு அலைபேசியில் அழைத் தால் சில நிமிடங்களில் – நன்றி நீங்கள் பாஜகவில் உறுப்பினராக சேர்ந்துள்ளீர்கள் என்ற செய்தி வருகிறது.
இதற்கு முன்பு மிஸ்டு காலில் பா.ஜ.க.விற்கு உறுப்பினர்களைச் சேர்த்தனர். இப்பொழுது நலத்திட்ட உதவிகள் செய்வதாகக் கணக்கெடுத்து – மோசடியாக, அவர்களைப் பா.ஜ.க. உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர். கேவலம் இப்படி ஒரு கட்சியா? இப்படி ஒரு பிழைப்புத் தேவையா?
கொள்கையைச் சொல்லியோ, தங்கள் கட்சி மற்றும் ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்லியோ கட்சிக்கு உறுப்ப்ினர்களைச் சேர்ப்பதற்குச் சரக்கு இல்லை – வக்கு இல்லை என்ற நிலையில் இப்படி ஒரு மோசடி வேலையில் இறங்குவதற்குப் பா.ஜ.க.வினர் வெட்கப்படப் போவதில்லை; காரணம் அவர்களின் தரம் அவ்வளவு கீழிறக்கமானது – வெட்கக்கேடு.