சென்னை, செப்.22- தமிழ்நாட்டில் வாகனங்கள் தொடர்பான 3 முக்கிய போக்குவரத்து விதிகள் கவனம் பெற்றுள்ளன. இந்த போக்குவரத்து விதிகளை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விதிமுறை 1: பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலி எழுப்பான்கள் மற்றும் வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொருத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விதிமுறை 2: 18 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு வாகனம் இயக்க அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விதிமுறை 3: நாடு முழுவதும் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்றை அரசு அனுப்பி உள்ளது. வாகனங்களில் வாகன எண் தகடு வைக்க சாதாரண ஸ்க்ரூ மற்றும் போல்டுகளுக்கு பதிலாக ரிவெர்ட் பொருத்தப்படுவது கட்டாயம் ஆகிறது.
இந்த பிளேட்களை நீக்க முடியாத அளவிற்கு ரிவெர்ட் பொருத்த வேண்டும். கடந்த நவம்பர் மாதத்திலேயே இந்த விதி வந்துவிட்டது. ஆனாலும் இப்போதுதான் இதை நாடு முழுவதும் அமல்படுத்த தொடங்கி உள்ளனர். அதேபோல், உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) கொண்டு வருவதும் அவசியம் ஆகிறது.
இந்தியாவில், 1.4.2019க்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி.
எச்.எஸ்.ஆர்.பி. இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
எச்.எஸ்.ஆர்.பி. என்பது எரிபொருள் வகையை குறிக்கும் வண்ண குறியிடப் பட்ட லேபிளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது இணையத்தில் முடிக்கக்கூடிய எளிதான செயலாகும். இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம் ‘இந்தியா’ என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் இருக்கும்.
அதேபோல், ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக
எச்.எஸ்.ஆர்.பி. வகை எண் தகடுகளுடன் வருகின்றன. கருநாடகா போன்ற பல் வேறு மாநிலங்கள் தற்போது ஒரு ஆண்டுக்கு முன்பு பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை எச்.எஸ்.ஆர்.பி. (HSRP) வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையை பொருத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கருநாடகாவில் உத்தர விடப்பட்டு உள்ளது.
உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP)
எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உங்கள் காருடன் இணைக்கப்பட்ட அலுமினிய உரிமத் தகடுதான் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP) என்று அழைக்கப்படுகிறது. நீல நிற ஹாலோகிராமில் குரோமியம் அடிப்படையிலான அசோக சக்ரா சின்னம் எச்.எஸ்.ஆர்.பி. (HSRP) உடன் சேர்க்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.ஆர்.பி. (HSRP) தகடு 10 இலக்க பின் (PIN) அல்லது நிரந்தர அடையாள எண், லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழ் இடது மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது. 20 மிமீ நீளம் மற்றும் 20 மிமீ அகலம் ஆகியவை தட்டின் பரிமாணங்கள் ஆகும்.