சுயமரியாதை இயக்க நூற்றாண்டு (1925- 2024), பெரியாரின் 146-ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் வகை யில் ‘விடுதலை’ சிறப்பு மலரை. திராவிடர் கழகத்தின் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வாழ்த்துடன் தொடங்கும் நூலில், ஆசிரியர் வீரமணி, தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தங்களது வாழ்த்துகளையும், வரலாற்றையும் பகிர்ந்துள்ளனர்.
தந்தை பெரியாரைப் பற்றியும், சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம், தாக்கம் அதன் வழியாக ஏற்பட்ட மறுமலர்ச்சி குறித்தும், பல ஆளுமைகள் கட்டுரைகளைப் பகிர்ந்துள் ளனர்.
திராவிடர் இயக்கம் குறித்து ‘குடி அரசு’, ‘விடுதலை’ இதழ்களில் வெளிவந்த முக்கியக் கட்டுரைகள், கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
‘பெரியார்’ பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு தொடங்கி. பெரிதும் அறியப்படாத மறைந்த சுயமரியாதை இயக்கத் தீரர்கள் பற்றி அறிமுகம், வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்கும் காந்தியாருக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள், பெரியாரின் மலேசிய மற்றும் பர்மா பயணங்கள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
கோயில் நுழைவுப் போராட்டங்கள், திராவிடர் கழகம் நடத்திய குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா. பெரியார் சொன்ன குட்டிக் கதைகள், தேவதாசி ஒழிப்புச் சட்டம், ராஜாஜி கலந்துகொண்ட சுயமரியாதைத் திருமணம் எனப் பல தகவல்கள் பெட்டிச் செய்திகளாக வாசிப்பு அனுபவத்தைத் தூண்டுகின்றன.
பகுத்தறிவுப் பெட்டகமாக வந்துள்ள ‘விடுதலை மலர்’, அனைவரிடமும் இருக்க வேண்டிய அவசியமான கையேடு.
நன்றி: ‘முரசொலி’ 21.9.2024