தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர் சங்கம் (ஏஅய்ஓபிசிஎஸ்ஏ) பெற்ற தரவுகளின்படி, திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (அய்அய்எம்-டி) பட்டியல் ஜாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட பேராசிரியர் பதவிகளில் 86 சதவீதம் நிரப்பப்படவில்லை.
பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு அங்கு வழங்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
மாணவர் அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுத்த மனுவிற்கு கிடைத்த தகவலின் படி, பிற்படுத்தப்பட்டோரில் 83 சதவீதம், தாழ்த்தப்பட்டோரில் 86.66 சதவீதம், பழங்குடியினரில் 100 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளன.
அய்அய்எம்-டியில், 2024 ஆகஸ்ட் நிலவரப்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பொது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்களின் (இ.டபிள்யூ.எஸ்.) எண்ணிக்கை 94 ஆகும்.
“இந்த பதவிகள் ஏன் நிரப்பப்படவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நிறுவனங்கள் ஏன் இந்தப் பதவிகள் காலியான தகவலை பொதுத் தளத்தில்வெளியிடவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களைத் தாக்கல் செய்து இந்தத் தரவுகளை ஏன் பெற வேண்டும்?” என்று ஏஅய்ஓ பிசிஎஸ்ஏ தேசிய தலைவர் ஜி. கிரண்குமார் கூறினார்
ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் 1,000 உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் 2019 முதல் கல்வி நியமனங்களில் சமத்துவத்தைக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார். “தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தின் மூலம், 2019இல் 45 ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் வெறும் ஒன்பது ஓபிசி பணி நியமனங்கள் மட்டுமே இருந்தன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (அய்அய்டி) மற்றும் அய்.அய்.எம்.டி.களில் நடக்கும் பணி நியமன மோசடிகள் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது,” என்று அவர் தெரிவித்தார்.
டில்லி மற்றும் புவனேஸ்வரில் உள்ள அய்.அய்.எம்.டி. களிலிருந்து பெறப்பட்ட பணி நியமன விவரங்களும் இதே போன்ற மோசடியைக் காட்டுவதாக கிரண்குமார் கூறினார்.
“முன்னணி நிறுவனங்களில் இருந்து அதிக அளவு முனைவர்கள் உருவாகிறார்கள்; இவர்கள் உண்மையில் எங்கே பணியாற்றுகிறார்கள்? அய்அய்எம்-டி விடயத்தில், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகள் தொடர்பான எந்தத் தகவலும் தரப்படவில்லை. தரம் மற்றும் தனிநபர் அளவில் பதவி நிரல்கள் தெளிவாக இல்லை,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
கல்வித் துறையில் வேலைவாய்ப்புகளில் பன்முகத்தன்மை இல்லாத பிரச்சினையை சங்கம் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் எழுப்பியது. ஆனால் இதுவரை பேராசிரியர் பதவிகளில் 50 சதவீதம் கூட நிரப்பப்படவில்லை,” என்றும் கிரண்குமார் கூறினார்.
இது தொடர்பாக தனியார் ஆங்கில நாளிதழ் சார்பில் கல்வி அமைச்சகத்திடம் கேட்ட போது – ‘‘ஓபிசி, எஸ்சிஎஸ்டி மாணவர் அமைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மாட்டோம்’’ என்று கூறிவிட்டனர் என்ற தகவலை அறியும் போது அதிர்ச்சி ஒரு பக்கமும் ஆரிய சூழ்ச்சி இன்னொரு பக்கமும் நம்மைப் புரட்டி எடுக்கின்றன.
2020ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அய்.அய்.டி. நிறுவனங்களில் பதவிகள் விவரம்:
பேராசிரியர்கள்
உயர் ஜாதியினர் – 265
பிற்படுத்தப்பட்டோர் – 35
தாழ்த்தப்பட்டோர் – 7
பழங்குடியினர் – 1
இணைப் பேராசிரியர்கள்
உயர் ஜாதியினர் – 123
பிற்படுத்தப்பட்டோர் – 5
பழங்குடியினர் – பூஜ்ஜியம்
உதவிப் பேராசிரியர்கள்
உயர் ஜாதியினர் – 127
பிற்படுத்தப்பட்டோர் – 14
தாழ்த்தப்பட்டோர் – 4
பழங்குடியினர் – 2
1925ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய தந்தை பெரியார் ‘சுதந்திர’ இந்தியாவில் ‘டெமாக்கிரசி’ இருக்காது. ‘பிராமினோகிரசி’ (பார்ப்பன நாயகம்) தான் தலை தூக்கி நிற்கும் என்று சொன்னதை நினைத்துப் பாருங்கள் –உண்மை புரியும்.
பா.ஜ.க. ஆட்சியில் மேலும் மேலும் சமூக நீதி நசுக்கப்படும் நிலையில் பார்ப்பனர் அல்லாதார் கிளர்ந்து எழாவிடின் முற்றிலுமாக சமூகநீதியைப் பறி கொடுக்க நேரும் – எச்சரிக்கை!