பெரியார் பிறந்த நாள் விழா- மலர் வெளியீடு, கருத்தரங்கம்

viduthalai
2 Min Read

தந்தைபெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று (17.9.2024) காலை முதலே கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பெரியார் திடலை அடைந்தனர்.

கழகப்பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர்கள், மகளிர் தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் என அணிஅணியாக கழகப்பொறுப்பாளர்கள் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆவடி உள்ளிட்ட கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரசு, திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள், தொழிலாளர் அமைப்புகள் என பலரும் நன்றிக்கடன் காட்டும் பெருவிழாவாகக் கருதி பெரியார் திடலில் குழுமியிருந்தனர்.

‘விடுதலை’ மலர் வெளியீடு, கருத்தரங்கம்

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தந்தைபெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச்செயலாளர்கள், தலைமைக்கழக பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரை ஆற்றினார்.
விழாவில், சிறப்பு விருந்தினர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு (1925-2024) தந்தைபெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை‘ மலரை திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட, கழகப்பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் வரிசையில் சென்று மலரைப் பெற்றுக்கொண்டனர்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரையைத் தொடர்ந்து, தந்தைபெரியார் பார்வையில் அடிப்படைக்கடமைகள். இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A(எச்) எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்றது.
ஊடகவியலாளர் பேரலை இந்திரகுமார் தேரடி, திமுக செய்தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் கருத்தரங்க உரை ஆற்றினார்கள்.
நிறைவாக திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள். வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றி கூறினார். தாம்பரம் மாவட்ட மகளிரணித் தலைவர் பெரியார் களம் இறைவி இணைப்புரை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *