மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் ரயிலில் தஞ்சாவூருக்கு சேர்ந்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் காந்தியார் இறங்கிவிடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் கூடி நின்றார்கள். ஆனால் இம்முறை காந்தியார் அவ்வாறு இறங்கவில்லை. திட்டப்படி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது மக்களுக்கு ஏமாற்றம்தான். தஞ்சையில் காந்தியார் குழுவினர் உக்கடை ஹவுஸ்ஸில் தங்கியிருந்தார்கள்.
இந்த நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான காரியம் நீதிக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் காந்தியாரும் சந்தித்துப் பேசியதேயாகும். பன்னீர் செல்வம், உமாமகேசுவரம்பிள்ளை (நீதிக்கட்சித் தலைவர்கள்) உக்கடைத் தேவர், சையத் தாஜுதின், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருக்கு காந்தியார் பேட்டி அளித்தார். (மற்றும் பாப்பநாடு ஜமீன்தார் கே.நடராஜன் முதலிய பல பிரமுகர்களையும் காந்தியார் சந்தித்துப் பேசினார். கே.நடராஜன் தாயாரான வயதான அம்மையார் காந்தியாரைப் பார்க்க வந்தபோது காந்தியார் அவரை அன்போடு வரவேற்று, பெண்கள் கட்டிக் கொள்ளத் தக்க மெல்லிய புடவைகள் கதரில் இருப்பதாகச் சொன்னார்.
நீதிக்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது இரு தரப்பினருக்குமே நல்லதாகப் போயிற்று. காந்தியாரின் தரப்பை அவர்களும், அவர்கள் தரப்பை காந்தியாரும் அதிகம் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு உதவியது.
நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும், உமாமகேசுவரம் பிள்ளையும் காந்தியாரைச் சந்தித்துப் பேசிய உரையாடல் ‘சுதேசமித்திரன்’ இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும்.
உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.
மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர், பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார்.
என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஈரோடு ராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன்றவர்களே இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள்.
(‘தமிழ்நாட்டில் காந்தி’ பக்கம் 520 – 521)
இந்த நிகழ்வு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் விளக்கிக் கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொல்வது 1925ஆம் ஆண்டுக்கு முன்பாகும். அப்பொழுதெல்லாம் சீனிவாசய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் காந்தியார் உட்கார வைக்கப்பட்டார். இப்பொழுது (1927) மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனிவாச அய்யங்கார் வீட்டு அடுப்பங்கரை வரை காந்தியாரின் மனைவியால் போகமுடிகிறது என்றால் என்ன காரணம்?
சுயமரியாதை இயக்கத்தை 1925ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தோற்றுவித்ததன் விளைவுதான் காந்தியாருக்கே இந்த உரிமை கிடைத்தது என்று பொருள்.
பெரியார் என்ன சாதித்தார்? அவர்களின் இயக்கம் என்ன சாதித்தது? என்பதற்குக் காந்தியாரின் இந்த வாக்குமூலம் ஒன்று போதாதா?
(‘விடுதலை’ சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.2024)