சென்னை, செப்.11- தமிழ்நாடு அரசு சார்பில் பிளஸ் டூ படிப்புக்குப் பிறகு உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு வழிகாட்ட ‘உயர்வுக்கு படி’ முகாம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘நான் முதல்வன்’ எனும் திட் டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழில் வளர்ச்சி வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. மேலும், கணினி மற்றும் எந்திரவியல் திறன் சார்ந்த பயிற்சிகளும், உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த சூழலில் 2023-2024ஆம் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 99 மாணவர்களும், 2024-2025ஆம் கல்வியாண்டில்ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 30 மாணவர்கள் என 2 லட்சத்து 47 ஆயிரத்து 129 மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்துவிட்டு, உயர்கல்வி சேராமல் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள், உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்யும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘உயர்வுக்கு படி’ எனும் முகாம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங் களில், 94 கல்வி வட்டாரங்களில் ‘உயர்வுக்கு படி’ எனும் முகாம் 3 கட்டங் களாக அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடத்த திறன் மேம்பாட்டுகழகம் முடிவு செய்தது. அதன்படி, ‘உயர்வுக்கு படி’ முதல் கட்ட முகாம் தமிழநாடு முழுவதும் நேற்று (9.9.2024) நடந்தது.
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ‘உயர்வுக்கு படி‘ முகாமில், பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெறாத மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். முகாமில் ஆர்.டி.ஓ முருகன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், கல்வியாளர் கல்யாணந்திரி சச்சிதானந்தன் உள்பட பலர் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
அரசின் சலுகைகள்
முகாமில், உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பிற அரசு சலுகைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மாணவர் களுக்கு எடுத்துரைத்தனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்று வறுமை காரணமாக உயர்கல்வி செல்லாத மாணவர்களுக்கு வங்கிகள் வாயிலாக கல்விக்கடன் உதவி வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், அய்.டி.அய். எனும் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
முகாமிற்குவந்த மாணவர்கள், இந்த வழிகாட்டுதல்களை பெற்று தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும், படிப்புகளையும் தேர்வு செய்தார்கள். அவ்வாறு தேர்வு செய்த மாணவர்கள், நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கை ஆணை பெறும் வகையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு, தொழிற்கல்வியில் உள்ள வேலை வாய்ப்புகள் தொடர்பாக வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டு அவர் கன் 10ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் பாலிடெக்னிக் மற்றும் அய்.டி.அய். படிப்பு களில் சேர்க்கவும் திறன் மேம்பாட்டு கழகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
‘உயர்வுக்கு படி‘ முகாம் மிகவும் பயனுள்ளதாகவும், தங்களின் எதிர்கால வாழ்விற்கு கிடைத்த மறுவாய்ப்பு என்றும் மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-
சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி விண்ணரசி
பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பிறகு, குடும்ப சூழல் பிற காரணங் களால் என்னால் கல்லூரியில் சேர முடிய வில்லை. இருந்தபோதிலும், கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ‘உயர்வுக்கு படி‘ முகாம் வாயிலாக கல்லூரிகளில் சேர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை நான் நிச்சயம் பயன் படுத்திக் கொள்வேன். காயிதேமில்லத் அரசு பெண்கள் கல்லூரியில் கலை பிரிவில் எனக்கு இடம் நிச்சயம் கிடைக்கும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று (10.9.2024) கல்லூரிக்கு நேரடியாக வர அழைத்துள்ளார்கள். நிச்சயம் எனக்கு இடம் கிடைக்கும். என்னுடைய கல்வி தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
செனாய்நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி லத்திகா
நான் பிளஸ்-2 வகுப்பில் 451 மதிப்பெண் பெற்றேன். குடும்ப சூழல் காரணமாக என்னால் உயர்கல்வி செல்ல முடியவில்லை. என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் நான் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவு அளித்தனர். அரசின் திட்டங்கள் குறித்தும் எனக்கு வழிகாட்டினர். ‘உயர்வுக்கு படி‘ எனும் முகாம் குறித்து ஆசிரியர்கள் எனக்கு தெரிவித்தனர்.
அதன்படி,முகாமில் பங்கேற்றேன். காயிதே மில்லத் கல்லூரியில் வேதியியல், இயற்பியல் உள்பட அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் எனக்கு இடம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்ல கிடைத்த மறுவாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன். இதை ஏற்படுத்தி கொடுத்த அரசுக்கு நன்றி.