சென்னை, செப்.10- முட்டுக் காட்டில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பெயரில் பன்னாட்டு தரம் வாய்ந்த மய்யம் ஒன்றை அமைக்க பொதுப் பணித்துறை ஆரம்பகட்டப் பணி களில் தீவிரமாக இறங்கி உள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த மறைந்த மேனாள் முதல மைச்சர் கலைஞரின் பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,
‘நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞரின் பெயரில் பன்னாட்டு தரம் வாய்ந்த மய்யத்தை சென்னையில் அமைக்க நான் திட்ட மிட்டுள்ளேன். உலகளவில் உள்ள சிறந்த மாநாட்டு மய்யங்களில் ஒன்றாக இது அமைய வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு அமையவுள்ள இந்த கலைஞர் மாநாட்டு மய்யம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக் கூடிய உலகத் தரத்திலான மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கி மாபெருமளவில் உலகத்தரத்தில் சென்னையில் அமைக்கப்படும்.
அதில், உலகளாவிய தொழில் கண்காட்சிகள். திரைப்பட நிகழ்வு கள், பன்னாட்டு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும். சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப் பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரமாண்டமான முறையில் ‘கலைஞர் மாநாட்டு மய்யம்’ (கலைஞர் கன்வென்சன் சென்டர்) அமையவுள்ளது’ என்று பேசினார்.
இதனை தொடர்ந்து தற்போது இந்த மாநாட்டு மய்யத்தை அமைக்க பொதுப்பணித்துறை ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘சென்னை- மாமல்லபுரம் செல்லும் சாலையில் முட்டுக்காடு அருகில் 32 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள நிலத்தில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் “மாநாட்டு மய்யம்” ஒன்று கட்டப்பட உள்ளது.
குறிப்பாக கண்காட்சி அரங்கம் ரூ.184.50 கோடியிலும், பன்னாட்டு மாநாட்டு மய்யம் ரூ.109.30 கோடியிலும், விருந்து அரங்குகளுடன் கூடிய அரங்கம் ரூ.115.20 கோடியிலும், வெளிப்புறத்தில் பாதுகாப்பு, சாலை வசதி, அலங்கார வளைவு, மின்சார வசதிகள் உள் ளிட்ட பணிகள் ரூ.116கோடி உள்பட ரூ.525 கோடியில் பணிகள் நடக்க இருக்கிறது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. இந்த மய்யத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பன்னோக்கு மாநாட்டு கூடம் அமைக்கப்படுகிறது. இதனை 5 ஆயிரம் பேர் வீதம் அமரும் வகை யிலும் பிரித்து கொள்ள முடியும்.
இதுதவிர 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம், திறந்தவெளி காட்சியகம் மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இடங்கள், 1,800 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்படுகிறது.
இதில் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகள், வணிக நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்பட்டு திட்ட மிட்ட காலத்தில் கட்டி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும்’ என்றனர்.