சென்னை,செப்.7- சென்னை தேனாம் பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்ககத்தில் டெங்கு மரபணு பகுப்பாய்வு கூடம் 3 நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, கரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அளவில் இருந்தது. கரோனா பாதிப்பு மாதிரிகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் பெங்களூரு, அய்தராபாத், புனேவுக்கும் அனுப்ப வேண்டியிருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக, மாநில அரசே மரபணு பகுப்பாய்வு கூடத்தை நிறுவ முடி வெடுக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு செப்.14ஆம் தேதி ரூ.4 கோடி செலவில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்ககத்தில் (டிபிஎச்) அமைத்து திறந்து வைக்கப்பட்டது. தற்போது இங்கு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய டெங்கு வைரஸைக் கண்டறிந்து, ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் டெங்கு மரபணு ஆராய்ச்சியில் பயன்படுத்த ஏதுவாக அதற்குரிய வேதிப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இன்னும் 3 நாட்களில் டிபிஎச்இயக்குநரகத்தில் டெங்கு வைரஸ் மரபணு ஆய்வு தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டு டெங்கு பாதிப்புகளினால் 66 பேரும், 2017இல் 65 பேரும் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் வீரியமிக்க டெங்கு பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. எனவே, டெங்குவின் வீரியம் குறித்து ஆய்வு செய்வது அவசியமான ஒன்றாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் அவதூறு
பிஜேபி மாநில நிர்வாகி கைது
விருதுநகர்,செப்.7- இசுலாமிய பெண் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாகக் கூறி விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (52). பாஜகவில் விருதுநகர் மாவட்ட பார்வையாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், நீலகிரி மாவட்டத்தில் இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்த யாஷிகா என்ற பெண் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக, வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்து தவறான செய்தி என்றும், தவறான செய்தி பரப்புவோர் மீது நீலகிரி மாவட்ட காவல்துறையினர் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் துறை முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இது தொடர்பாக, நீலகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அருப்புக்கோட்டையில் தனது வீட்டிலிருந்த பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேலை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிகழ்வு விருதுநகர் மாவட்ட பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை
மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு..!!
கொழும்பு, செப்.7- ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு நிபந்தனைகளுடன் விடுதலை அளித்த நிலையில் மூவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகையும், படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
8 பேரின் வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் முதல் முறையாக எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்திருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதே போல் எஞ்சியுள்ள 3 மீனவர்கள் 2ஆவது முறையாக அத்துமீறி மீன்பிடித்ததான குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் 6 மாத சிறைத் தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் இலங்கை பணம் கட்ட நிபந்தனையுடன் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். விடுதலை செய்யப்பட்ட 5 பேரின் அபராத தொகையை இந்திய துணை தூதரக அதிகாரி அலுவலகம் மூலமாக செலுத்துவதாக நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்ததால் 5 மீனவர்களும் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இந்திய பணத்திற்கு தலா ரூ.20,000 ஆக ரூ.1 லட்சம் செலுத்தினால் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இரண்டு, மூன்று நாட்களுக்குள் இந்தியாவுக்கு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.