மூன்று ஆண்டுகளில் அரசு குடியிருப்புகளில்
35,866 ஏழை எளியவர்கள் குடியமர்வு!
சென்னை, செப். 7- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், அரசு சார்பில் கட்டப்பட்டகுடியிருப்புகளில் 35,866 ஏழை, எளியவர்கள் குடிய மர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
இந்திய கட்டுநர்கள் சங்கம் சார்பில் சென்னை வர்த்தக மய்யத்தில் வீடு, மனை கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண் காட்சியை தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ரூ.15 லட்சம் மானியம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிதரப்படுகின்றன. அதில், மறுகுடியமர்வுக்கு பயன்படும் வகையில் சென்னையில் ஒரு வீடு கட்ட சுமார் ரூ.18 லட்சம் செலவாகும்.
இதற்காக ஒன்றிய அரசு வழங்கும் ரூ.1.50 லட்சம், மறுகுடியமர்வு செய்யப்படுபவர்களிடம் இருந்து பெறப்படும் ரூ.1.50 லட்சம் என தமிழ்நாடு அரசுக்கு ரூ.3 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதை தவிர சாலை,கழிவுநீர், குடிநீர் போன்ற வற்றுக் கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் அறிவித்த வகையில் ரூ.15 லட்சத்தை தமிழ்நாடுஅரசுதான் மானியமாக வழங்குகிறது.
ஜிஎஸ்டி பிரச்சினை: 1.43 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இதில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் விரைவில் கட்டப்படும். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,248 கோடி மதிப்பீட்டில் 79,439 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, 35,866 குடியிருப்பு களில் ஏழை, எளிய மக்கள் குடிய மர்த் தப்பட்டுள்ளனர்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இத்தகைய பணிகளை அரசால் மட்டுமே செய்ய முடியாது. எனவே, கட்டுநர் சங்கங்களும் அரசுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஜிஎஸ்டி, 10 சதவீதம் பிடித்தம் செய்யும் பிரச்சினைகளுக்கு ஓரிரு மாதங்களில் தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப் பினர் ரூபி மனோகரன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இந்திய கட்டுநர் சங்கத்தின் காப்பாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், மு.மோகன், தேசிய துணைத் தலைவர் ஆர்.சிவகுமார், தென்மண்டல தலைவர்
என்.ஜி.லோகநாதன், கண்காட்சி குழு தலைவர் எஸ்.ராம்பிரபு, கவுரவ செயலாளர் கே.கோபிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.