சிங்கப்பூர், செப்.7- 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றிருந்ததை, “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” என்ற 330 பக்க வரலாற்று ஆவணத் தொகுப்பு நூலாக்கி இருக்கிறார் செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ்.
சிங்கப்பூர், உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் கடந்த 1.10.2024 அன்று காலை நடைபெற்ற அந்த நூல் வெளியீட்டு விழாவில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
நூலாசிரியர் எம். இலியாஸ், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் டாக்டர் ஜி.வி ராம், கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் மேனாள் தலைவர் கவிஞர் இறை.மதியழகன் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக, கவிஞர் இறை, மதியழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ஆர்.ராஜாராம் அவர்கள் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
7 நாடுகளில் சிங்கப்பூர் தூதராகப் பணியாற்றிய மேனாள் தூதர் கே. கேசவ பாணி, பேராசிரியர், முனைவர் சுப. திண்ணப்பன், முனைவர் ஜி.வி.ராம். டாக்டர் சேது குமணன், வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர்கனி மற்றும் சான்றோர் பெருமக்களின் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.
விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக, ஜாலான் புசார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால் அவர்களும், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவரும், நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினருமான கே.தனலட்சுமி அவர்களும், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் இரா.அன்பரசு அவர்களும் வருகை தந்து சிறப்பு சேர்த்தனர்.
நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் கார்த்திகேயன், நீதிபதி மூ. புகழேந்தி, தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது, கலைஞர் அவர்களின் சிங்கைப் பயணத்தின் போது அவரைப் பேட்டி கண்டதோடு, அவரது பயணச் செய்திகளை தொகுத்தளித்த அன்றைய தமிழ் முரசின் செய்தியாளரும் இன்றைய சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின், தெற்காசிய ஆய்வுக்கழகத்தின் இணை இயக்குநருமான சித்ரா துரைசாமி அவர்கள் அனுபவ உரை வழங்கினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவியும் பல்கலைக் கழ கத்தின் அரசியல் சங்க உறுப்பினருமான செல்வி விஷ்ணு வர்தினி நூல் ஆய்வுரை வழங்கினார்.
அவரது உரை அழகாக, ஆழமாக, அறிவார்ந்த உரையாக அமைந்திருந்தது என்றதோடு, எதிர்காலத் தமிழ் மீதான நம்பிக்கையைத் தருவதாக பின்னர் கவிஞர் கனிமொழி அவர்கள் தனது உரையில் பாராட்டும் வகையில், அவர் பேச்சு சிறப்பாக அமைந்திருந்தது.
தமிழ்முரசு நாளிதழின் ஆசிரியர் த.இராஜசேகர், சிங்கப்பூர்த் தமிழாசி ரியர் சங்கத்தின் ஆலோசகரும் உலகத் தமிழாசிரியர் பேரவையின் தலைவருமான சாமிக்கண்ணு, கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் நூலை வெளியிட்டார். இந்த ஆண்டு முதலமைச்சர் கரங் களால் கணியன் பூங்குன்றனார் விருது பெற்ற தமிழறிஞர் டாக்டர் சுப. திண்ணப்பனார் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.
அடுத்த நூலை, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரின் பேத்தியுமான டாக்டர் சித்திரா சங்கரன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள், புரவலர்கள், செம்மொழி வாசகர்கள், பொதுமக்கள் நூலை பெற்றுக் கொண்டனர்.
நூலை வெளியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாள ருமான கவிஞர் கனிமொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
“செம்மொழி இலக்கிய இதழ் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டி ருக்கக்கூடிய ‘‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’’ நூல் வெளியீட்டு விழாவிலே கலந்து கொள்வதிலே மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்திருக்கக்கூடிய நூலின் வெளியீட்டாளர், அதன் ஆசிரியர் இலியாஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் இந்த மேடையிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே நிறைய பேருக்கு தமிழின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ, இங்கே இளைஞர்கள் தமிழ் பேசு வார்களா, இல்லையா என்ற அச்சத் தோடு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அந்த அச்சத்தையெல்லாம் இங்கே உடைத்து நொறுக்கக்கூடிய அளவிற்கு அழகாக, அறிவாக, ஆழமாகப் பேசிய இந்த நூலைப் பற்றி ஒரு ஆய்வு கட்டு ரையைப் படித்த ஆர். விஷ்ணு வர்தினி அவர்களே,
இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கக்கூடிய சகோதரர்களே, சகோதரிகளே, நம்முடைய அன்புத் தலை வர் கலைஞரின் உயிரினும் மேலான, அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய வணக்கத்தை நன்றியை, மகிழ்ச்சியைத் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிங்கப்பூர், நான் பல ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மண்… இங்கே வந்து தலைவர் கலைஞர் அவர்கள், சிங்கப்பூருக்கு வந்த பொழுது அந்த நினைவுகளை 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நூற்றாண்டிலே பதிவு செய்து அந்த வரலாற்றை நமக்கெல்லாம் மறுபடியும் வழங்கக்கூடிய ஒரு நூல் வெளியீட்டு விழாவிலே கலந்து கொள்வதிலே மட் டற்ற மகிழ்ச்சி, பெருமை. ஆசிரியருக்கு என்னுடைய நன்றியை ஒரு மகளாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல வேளை தலைவர் கலைஞர் அவர்கள் மேடையிலே பேசும் போது, நான் தனித்து விடப்பட்டிருக்கிறேன் என்று சொன்னார். எனக்கு மேடையிலே சில பேர் இங்கே, ஆதரவாக இருக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
நான் எனக்கு ஆதரவாக இருக்கக் கூடிய என்று கூறும்பொழுது, வரும் போதே ராம் அவர்கள் சொன்னார். இங்கே அரசியல் பேசாதீர்கள் என்று.
நான் இங்கே அரசியல் பேசவில்லை. நான் மிகச்சாதாரணமாக எனக்கு ஆதர வாக இருக்கக் கூடியவர்கள் என்று கூறினேன்.
இந்த அரங்கமே தலைவர் கலைஞர் அவர்களுடைய உடன்பிறப்புக்களால் நிரம்பி வழியக்கூடிய அரங்கம் என்று பார்க்கும் பொழுது நிச்சயமாக, இது தமிழால் இணைக்கப்பட்ட ஒரு கூட்டம் : உணர்வால் இணைக்கப்பட்டி ருக்கக்கூடிய ஒரு கூட்டம்; இதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது; என்பது திட்டவட்டமான, தெளிவான ஒன்று.
அந்த உறவு தான் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழி பேசக்கூடியவர்களுக்கும், இந்த உலகம் முழுவதற்கும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு, அந்த தமிழ் மொழி, தமிழர்கள் என்ற அந்த பெருமிதம். இது தான் நம்மை கட்டிப் போட்டு வைத்திருக்கக்கூடிய ஒரு உணர்வு.
எந்த நாட்டிலிருந்தாலும் அங்கே ஒரு தமிழ் முகத்தை அங்கே ஒரு தமிழ்க்குரலை கேட்கும் பொழுது, மனதி லிருந்து ஒரு மகிழ்ச்சி முகிழ்த்து வரும். அந்த மகிழ்ச்சி என்பது, நம்முடைய மொழி, நம்முடைய அடையாளம் நாம் யார் என்பதை நமக்கு திரும்பிச் சொல் லக்கூடிய ஒரு ஆணித்தரமான வேர்.
அது தான் நம்முடைய அடை யாளம் என்றால் அது மிகையில்லை. இந்த அடையாளங்களை, நம்மு டைய சுயமரியாதையை நிலை நிறுத்துவ தற்காகத்தான் தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்கள் போன்றவர்களெல்லாம் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பணி யாற்றினார்கள்.
தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒரு முறை கேட்டார்கள்.
குடும்பம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று. அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன பதில் :
என்னுடைய குடும்பம் என்பதை ஒரு ஒளிப்படத்திற்குள் அடக்கி விட முடியாது.
என்னுடைய குடும்பம் என்பது, இந்த உலகில் தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அத்தனை பேரையும் உள்ளடக்கியது தான் என்னுடைய குடும்பம் என்று பதிலை சொன்னவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
அந்த உணர்வு இருப்பதால் தான் பல பேர் பேசும் போது சகோதரர்களே என்பார்கள், சகோதரிகளே என்பார்கள். அண்ணன், தம்பி என்பார்கள்.என் அக்காக்களே என்பார்கள். தாய்மார்களே என்பார்கள். ஆனால், ஆண், பெண் வயது என்று எந்த வித்தியாசமும் இல் லாமல் மக்களை, மனிதர்களை, தமிழர் களை “உடன்பிறப்பே ” என்ற அந்த ஒற்றைச் சொல்லால் கட்டிப் போட்டவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
உடன்பிறப்பு என்று சொல்லும் பொழுது பெரியவங்களா சின்னவங்களா என்ற எந்த வயது வித்தியாசமும் இல்லை. ஆணா, பெண்ணா என்ற வித்தியாசம் கிடையாது. அத்தனைப் பேரையும், அவர் பெரியவர் –– – பேராசிரியர் திண்ணப்பன் அவர்களையும் நாம் உடன்பிறப்பே என்று அழைக்க முடியும். இங்கே பேசிய நம்முடைய விஷ்ணு வந்தினி அவர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு மந்திரச்சொல்தான் அந்த உடன்பிறப்பு என்பது!
அந்த உடன்பிறப்பு என்ற சொல்லை தலைவர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூராக இருக்கட்டும், தமிழ்நாடாக இருக்கட்டும் எந்த இடத்தில் உச்சரித்தாலும் ஒரு அலை போல கைதட்டல் எழும். அதைக் கேட்பதே ஒரு மகிழ்ச்சி, அதுவே ஒரு பெருமையாக, அந்த இடத்தில் நாம்.இருக்கிறோம். அந்த உணர்வலைகள் உள்ளே நம்மையும் இழுத்துப் போகிறது. அப்படிச் சொல்லும் பொழுது,அதுவே ஒரு தனி உணர்வாக, இங்கே பேசும் போது குறிப்பிட்டார்களே, ஒரு மிகப் பெரும் ஆளுமையுடைய வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்று.
அதே போல அவருடைய வாழ்க்கையைப்புரிந்து கொள்வதற்கு அந்த உடன்பிறப்பே என்ற அந்த சொல்லை அவர் சொல்லும் பொழுது, மக்கள் மத்தியில் இருந்து எழக்கூடிய அந்தக் கரவொலியும் அந்த மகிழ்ச்சியும் தான் அவருடைய வாழ்க்கையே பதிவு செய்யக்கூடிய ஒற்றைச் சொல் என்றால் அது மிகையில்லை என்று நான் நினைக்கிறேன்.”
என்று கவிஞர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டுப் பேசினார்.
செம்மொழி சமூக இலக்கிய இதழின் ஆசிரியரும், நூலாசிரியருமான எம். இலியாஸ் அவர்களைப் பாராட் டியதோடு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இறுதியில், நூலாசிரியர் எம். இலி யாஸ் நன்றியுரையாற்றினார்.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி கவிழ்க் கப்பட்டு, அவசரகால நிலை நடப்பில் இருந்த போது, கலைஞருக்கு 1976 -ல் கடிதம் எழுதியதையும், அக்கடிதத்துக்கு “கடல் கடந்த நாட்டிலிருந்து வந்த தங்களுடைய ஆறுதல் என் நெஞ்சுக்கு இதமாக இருந்தது. அண்ணாவின் கொள் கைகளுக்கு என்றுமே அழிவில்லை. அந்த உறுதியுடன் தொடர்ந்து பணி யாற்றுவோம்” என்று குறிப்பிட்டு தலைவர் கலை ஞரிடமிருந்து பதில் வந்ததையும் நெகிழ்ச்சியுடன் தமது ஏற்புரையில் குறிப்பிட்டு, நன்றி கூறி பேசினார்.
தொடக்கமாக, ஸ்காட்லாந்தில் விலங்கியல் மருத்துவம் பயிலும் சிங்கப்பூர் மாணவி செல்வி இலக்கியா மதியழகன், கிடார் இசையுடன் தமிழ் வாழ்த்துப் பாடினார்.
உலக செம்மொழி மாநாட்டின்போது, தலைவர் கலைஞர் அவர்கள் எழுதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த செம்மொழிப்பாடல் ஒளி பரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் சிங்கப்பூர் வருகையின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், நூலாசிரியர் இலியாஸ் தலைவர் கலைஞருடன் 1976 தொடங்கி, பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் காணொலி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது.
“வணக்கம்” என்ற கரகரத்த குரலில் முத்தமிழறிஞர் கலைஞர் சிங்கப்பூர் உள்ளரங்கில் 6.1.1999இல் பேசிய பேச்சு சிறிது நேரம் ஒளிபரப்பப்பட்ட போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உணர்ச்சி வசப்பட்டனர்.