2017ஆம் ஆண்டிலிருந்து வட மாநிலங்களை அச்சுறுத்திவரும் ‘புல்டோசர் அரசியல்’, சிறுபான்மை யினரின் வாழ்வாதாரத்தைத் தகர்த்து வருகிறது.
2020 ஆம் ஆண்டு சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் குடி யிருப்புகளை தலைநகர் டில்லியில் இடித்தனர். அதிலிருந்துதான் ‘புல்டோசர் விவகாரம்’ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பாஜக அரசுக்கு எதிராக குரல் எழுப்புப வர்களின் வசிப்பிடங்கள் இடிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.
2022ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, இஸ்லாம் குறித்துத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது.
நுபுர் ஷர்மாவைக் கைது செய்ய வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன! ஜூன் 10-ஆம் தேதியன்று, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பிரயாக்ராஜ் உள்பட ஆறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன; வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், கல்வீச்சும் நடைபெற்றது. வன்முறையில் ஈடுபட்டதாக 227 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பிரயாக்ராஜில் நடந்த வன்முறைக்குக் காரணமானவர் என்று கூறி ஜாவத் அகமது என்பவரைக் காவல்துறை கைதுசெய்தது. பின்னர், பிரயாக்ராஜில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி ஜாவத் அகமதுவின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்தது.
ஜாவத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டதற்கு முந்தைய நாள், ஷஹரான்பூரில் நடைபெற்ற வன்முறையில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள் இருவரின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டன.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான அஃப்ரீன் பாத்திமா, சி.ஏ.ஏ. போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் இருந்த அவரது வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு, டில்லியின் ஜாஹாங்கிர்புரியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வகுப்புவாத வன்முறைகள் வெடித்தன. அந்தச் சமயத்தில், ஜாஹாங்கிர்புரியிலுள்ள இஸ்லாமியர்களின் வீடுகள் பலவும் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டன.
மத்தியப் பிரதேசத்தில் பக்ரீத் விழாவில் பலி கொடுக்க மாடுகளை வைத்திருந்ததாகக் கூறி 11 இஸ்லாமியர்களின் தொகுப்பு வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 400க்கும் அதிகமான இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசம், குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம் மகாராட்டிரா மாநிலங்களில் ஒன்றரை லட்சம் வீடுகள் புல்டோசர் நடவடிக்கைகள் மூலம் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பாலான வீடுகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை. அவர்களை அச்சுறுத்தவே யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு இப்படிச் செய்கிறது. அவரைப் பின் தொடர்ந்து, பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
புல்டோசர்களினால் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாத் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்? குற்றவாளியாக இருந்தால்கூட சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அவரது வீட்டை இடிக்க முடியாது. எந்தவொரு கட்டடத்தை இடிக்கவும் சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை அடிக்கடி மீறப்படுகின்றன. கட்டுமானங்களை இடிப்பது தொடர்பாக ஒட்டு மொத்த நாட்டுக்குமான ஒரு வழிகாட்டுதல் முழு நெறிமுறைகளை வகுப்போம்’’ என்று கூறியிருந்தனர்.
ஆனால் சாமியார் ஆதித்யநாத் ‘‘புல்டோசர் பயன்படுத்த எதையுமே எதிர்கொண்டு துணிச் சலுடன் செயல்பட வேண்டும். புல்டோசரை இயக்க அனைவரும் தகுதியானவர்கள் அல்ல; மனதில் துணிவு கொண்டவர்களால் மட்டுமே அதனை இயக்க முடியும். வாக்கிற்காக சிலர் முன்பு மண்டியிடுபவர்களால் புல்டோசர் முன் நிற்க முடியாது’’ என்று பேசியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகும், யோகி ஆதித்யநாத் இப்படிப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிஜேபி நடத்துவது அடியாட்களின் ஆட்சியா? ரவுடிகளின் சாம்ராஜ்யமா? வெட்கக்கேடு!