சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

Viduthalai
3 Min Read

 கலைஞர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல – தமிழ் உலகத் தலைவர்!

தமிழர்களுக்குத் தலைவர் மட்டுமல்ல – உரிமைகளுக்காகப் போராடும் அனைவருக்குமே அவர் தலைவர்! 

அரசியல்

சென்னை, ஆக.7 கலைஞர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல – தமிழ் உலகத் தலைவர்! தமிழர்களுக்குத் தலைவர் மட்டுமல்ல – உரிமைகளுக்காகப் போராடும் அனைவருக்குமே அவர் தலைவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந் தாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள்!

”மானமிகுசுயமரியாதைக்காரன்” என்றுதன்னை ஒரு வரியில் விமர்சித்துக்கொண்டவர் கலைஞர். தந்தைபெரியாரின்குருகுலத்தில்வளர்ந்து,அண்ணா விடம் அரசியல் பாடம் பெற்று, திராவிட ஆட்சியை, நீதிக்கட்சியினுடைய நீட்சியாக அண்ணா தொடங்கிய ஆட்சியை, மேலும் பல்வகையான எதிர்ப்புகளை யெல்லாம் சந்தித்து, நெருக்கடிகளுக்கெல்லாம் தலை கொடுத்து, இன்றைக்கு ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியாக, இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சியாக வரும் அளவுக்கு உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட, தலைநிமிர்ந்து பெருமிதத்தோடு இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது என்பதற்கு அடிக்கல் நாட்டியவர் – தந்தை பெரியாரிடம் கற்ற பாடம் – அண்ணாவிடம் கற்ற அரசியல் ஞானம் – இவற்றையெல்லாம் வைத்து, வளர்ந்து ஒரு திருப்பத்தை உருவாக்கிய தலைவருக்கு இன்றைக்கு (7.8.2023) அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள்!

நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு; அவரை என்றைக்கும் நாம் மறக்க முடியாது. எல்லா இடங்களிலும் அவருடைய புகழ் இருக்கிறது. அவரை விமர்சிப்பவர்கள்கூட, அவரைத் தவிர்க்க முடியாது.

கொடி மட்டும் உயருவதில்லை; 

மாநில சுயாட்சி உரிமையும் உயருகிறது கலைஞரால்!

இன்னும் சில நாள்களில் இந்தியா முழுவதும் ஆகஸ்டு 15 ஆம் தேதி மாநில முதலமைச்சர்கள் கொடியேற்ற இருக்கிறார்கள். அப்படி கொடியேற்றும்பொழுது, அந்தக் கொடி மட்டும் உயருவதில்லை; மாநில சுயாட்சி உரிமையும் உயருகிறது என்றால் அந்தப் பெருமை கலைஞருக்கே உரியது. ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் கொடியேற்றும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், பி.ஜே.பி.யைச் சார்ந்தவராக இருந்தாலும்கூட, அவர்களுக்கு அந்த வாய்ப்பை, அந்த உரிமையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர் தான் இன்றைக்கு இங்கே படமாகவும், பாடமாக வும், அமைதியாகவும் இருக்கக்கூடிய அந்தத் தலை வராவார்.

உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல – 

தமிழ் உலகத் தலைவர்!

அதுபோலவே, செம்மொழி எம்மொழி என்று உலக நாடுகளில், பற்பல நாடுகளில், தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் எல்லாம் பெருமிதத்தோடு, தமிழ் ஆட்சி மொழியாகவும், பேச்சு மொழியாகவும், நடைமுறை மொழியாகவும் தமிழ் மொழி இருந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு செம்மொழித் தகுதியைப் போராடிப் பெற்றுத் தந்த தலைவர் என்ற பெருமை – உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் மத்தியில் கலைஞருக்கு இருக்கும்பொழுது, அவர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல – தமிழ் உலகத் தலைவராகவும் – தமிழர்களுக்குத் தலைவராக மட்டுமல்ல – உரிமை களுக்காகப் போராடும் அத்துணை பேருக்குமே அவர் தலைவராக இருக்கிறார். ”உரிமைகளுக்காக எப்படி போராடவேண்டும்? எப்படி எதிர்நீச்சல் போட வேண்டும்? என்பதை நான் கற்றுள்ளேன் – அதைக் காட்டியிருக்கிறேன் – தொடருங்கள்” என்று பாடத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்!

வாழ்க கலைஞர்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *