கடலூர் மாவட்ட பிஜேபி பிரமுகர் கைது
சென்னை, செப்.6- சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56). இவர், கடலூர் மாவட்ட பா. ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார் என்பவரிடம் ரூ.3 கோடி கடனாக பெற்று, செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் 14.8 ஏக்கர் நிலம் ஒன்றை வாங்கி, அதை வீட்டுமனைகளாக மாற்றி உள்ளார். இந்த வீட்டு மனைகளை, விற்று தந்தால் கமிஷன் தருவதாக சிவகுமாரிடம் மூர்த்தி கூறி உள்ளார்.
ஆனால், மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தில் சிவகுமார், தன்னுடன் 4 நபர்களை அழைத்துக்கொண்டு, சூளைமேட்டில் உள்ள மூர்த்தியின் அலுவலகத்துக்கு 3.9.2024 அன்று மாலை சென்றுள்ளார். அங்கு, பாலூர் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி தரும்படி, மூர்த்திக்கு அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மூர்த்தி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத் தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி நடத்தும் மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டி
சென்னை, செப்.6 ரிசர்வ் வங்கி 90-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசியளவில் நடத்தப்படும் வினாடி – வினா போட்டியில் அதிகளவிலான மாணவர்களை பங்கேற்கச் செய்யுமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களுக்கு நேற்று (5.9.2024) அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய்) 90-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத் துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அந்த வங்கி பல்வேறு தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய் துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான வினாடி – வினா போட்டியை அறிவித்துள்ளது. இதில் பொது அறிவு, வரலாறு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்கள் இடம்பெறும். இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் போட்டி நடைபெறும். தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் கல்லூரிகள் மண்டல போட்டிக்குத் தகுதி பெறுவர்.
இதையடுத்து மாநில, தேசிய அளவில் வினாடி – வினா நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இறுதியாக தேசிய அளவில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.8 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.6 லட்சம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாநில, மண்டல போட்டிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், இறுதிப் போட்டி டிசம்பரிலும் நடைபெறும். தகுதிச் சுற்று இணைய வழியிலும், மாநில, மண்டல, தேசிய போட்டிகள் நேரடி முறையிலும் நடத்தப்படும். போட்டிக்கான பதிவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்பிஅய் அறிவித்துள்ள இந்த வினாடி – வினா குறித்து கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி, அதிகளவிலான மாணவர்களை பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவக் கல்வி கலந்தாய்வு
7.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டில்
50 பேருக்கு ஆணை
சென்னை, செப்.6 கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் ஒதுக்கீட்டில் 50 பேருக்கு கல்லூரிஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு 4.9.2024 அன்று தொடங்கியது.
முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், மேனாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், மொத்தமுள்ள 51 இடங்களில் 25 இடங்கள் நிரம்பின. இந்நிலையில் 2-ஆவது நாளான நேற்று (5.9.2024) அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதஉள்ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 50 இடங்களுக்கு (பிவிஎஸ்சி படிப்பு) கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொள்ள 180 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மொத்தம் 81 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வு முடிவில் 50 பேருக்கு கல்லூரி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. பிடெக் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கான (8 சீட்டுகள்) கலந்தாய்வு இன்று (6.9.2024) நடைபெறுகிறது.
இதற்கிடையே, பொதுப்பிரிவுக்கான இணையவழி கலந்தாய்வின் முதல் சுற்று 4.9.2024 அன்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் செப்,.7-ஆம் தேதிக்குள் (நாளை) கல்லூரி விருப்பத்தை இணைய வழியில் பதிவுசெய்ய வேண்டும். அவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 11-ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.