இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து.ராஜா பேட்டி
தஞ்சாவூர், செப்.5- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா தஞ்சையில் 3.9.2024 அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, பல கட்சி களின் ஆதரவோடுதான் பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியவில்லை.
இப்போதே அவர் களுடைய கூட்டணி ஆட்சியில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கிவிட்டன. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகள் கூட, பா.ஜனதாவின் கொள்கை களை பிடிக்காமல் மாற்று கருத்துகளை கூறி வருகின்றன.
விலைவாசி உயர்வு
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை வழங்காமல் விவசாய துறையை மோடி வஞ்சித்து வருகிறார். நாட்டில் விலைவாசி உயர்வு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பணவீக்கம் அதிகரிக்கிறது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதைப் பற்றியெல்லாம் மோடி கவலைப்படவில்லை.
பா.ஜனதா இரட்டை வேடம்
ஒன்றிய அரசு கல்வி, மருத்துவத்துக்குஒதுக்கீடு செய்யும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்தினால்தான், பின்தங்கிய வகுப்பினரின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் உரிய ஒதுக்கீடுகளை வழங்க முடியும்.
மேற்கு வங்காளத்தில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை பா. ஜனதா அரசியலாக்கி வருகிறது. டில்லியில் பளுதூக்கும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாக கூறி போராட்டம் நடத்தியவர்களை பா.ஜனதா வினர் கண்டு கொள்ளவில்லை. இந்த விசயத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது.
– இவ்வாறு அவர் கூறினார்.