சென்னை, செப். 4- பிள்ளையார் சதூர்த்தியை முன்னிட்டு செயற்கை வேதிமண்ணால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் யு.உதயக்குமார் ஆஜராகி, “மூன்று அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரியதால் அங்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மனுதாரர் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரினால் அனுமதி வழங்கப்படும்.
மேலும் செயற்கை வேதிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தர விட்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும்” என்றார்.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, செயற்கை வேதிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது எளிதில் மக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மேலும், மனுதாரர் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
சென்னை, செப். 4- தூத்துக்குடியில், ‘சிப் காட்’ நிறுவனம் கடல் நீரை, குடிநீராக்கும் ஆலை அமைக்க உள்ளது. இதை செயல்படுத்த, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
துாத்துக்குடி மாவட்டத்தில், ‘சிப்காட்’ எனப்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு தொழில் பூங்காக்கள் உள்ளன. அங்கு, பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள் செயல்படுகின்றன.
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகிக்க, துாத்துக்குடி முள்ளக்காட்டில் நாள்தோறும், 6 கோடி லிட்டர் கடல் நீரை, குடிநீராக மாற்றும் கொள்ளளவில் ஆலை அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது.
திட்ட செலவு, 904 கோடி ரூபாய். இத்திட்டத்தை செயல்படுத்த, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்முறையாக அரசு, தனியார் இணைந்து கடல் நீரை, குடிநீராக்கும் ஆலை அமைக்க கடந்த ஜூனில், ‘ஒப்பந்தப் புள்ளி’ கோரப்பட்டது. ஒப்பந்தம் குறித்த சந்தேகத்தை விளக்கும் கூட்டத்தில், 20 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை சில சந்தேகங்களை எழுப்பின. அவற்றுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தில் அதிக நிறுவனங்கள் பங்கேற்றால், போட்டி ஏற்பட்டு குறைந்த விலைப் புள்ளி கிடைக்கும். எனவே, அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில், ஆக., இறுதியில் இருந்த கடைசி நாள் இம்மாதம், 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.