கேள்வி: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் பழனியில் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் “விரைவில் முதலமைச்சர் ஜெய் சிறீராம் சொல்லிவிடுவார்” என விமர்சனம் செய்கிறார். இதேபோல் இராம. சீனிவாசன் ஆகியோரும் விமர்சனம் வைக்கிறார்களே?
இராம சுப்பிரமணியம்: முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த மாநாடு சிறப்பாக நடந்து இருக்கிறது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் பங்களிப்பு அபரிமிதமானது. மாநாடு தொடர்பாக பல கூட்டங்களை நடத்தியுள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. அகில உலக அளவில் நடக்கக் கூடிய மாநாடு என்பதால் தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதிலும் இருந்தும், உலக அளவில் இருந்தும் முருகன் மேல் பக்தி கொண்டவர்கள் பங்கேற்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்த முக்கிய நபர்கள் இந்த மாநாட்டில் பேசியுள்ளார்கள். நிறைய ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளனர். அந்தப் பொறுப்பை மு.பெ. சத்தியவேல் முருகனார் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் விருதுகள் அளிக்கப்பட்டது. கருத் தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசமங்கையர்க்கரசி, சுகிசிவம் உள்ளிட்டவர்கள் இதற்கான பணிகளை செய்துள்ளனர். அறுபடை வீடுகளின் அரங்குகள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றதில் சைவ சமயத்தைச் சேர்ந்த மடாதிபதிகளின் பங்கும் இருக்கிறது. மிகச்சிறந்த கூட்டு முயற்சியால் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
கேள்வி: உங்கள் அனுபவத்தில் இதுபோன்ற மாநாடு நடைபெற்றுள்ளதா?
இராம சுப்பிரமணியம்: இதுவரை நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடைபெறும் பெரிய மாநாடு இதுதான்.
கேள்வி: ஓட்டுக்காகத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்கிறார்களே?
இராம சுப்பிரமணியம்: ஓட்டுக்காகவே ராமரின் மகுடத்தை தூக்கிக்கொண்டு பிரதமர் மோடி நடந்தார். அதனை மீடியாக்கள் காண்பித்தன. அயோத்தியில் ஏராளமான வி.அய்.பி.க்களை வரவைத்து, அவர்களுக்கு தங்கும் இடம் முதல்கொண்டு பல ஏற்பாடுகளை செய்தார்கள். அதற்கு எவ்வளவு விளம்பரங்களைச் செய்தார்கள்.
உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளுக்கு ஏராளமாக செலவு செய்து விளம்பரங்கள் செய்தார்கள். உண்மையான பக்தர்களுக்காக இந்த முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தக் கூடாதா?
வெகுநாட்களாக முருகப் பெருமானுக்கு இப்படி ஒரு விழா எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் ஆசை. அதற்காக அரசு தேர்ந்தெடுத்த இடம் சரியானது. முதலமைச்சரும், அமைச்சரும் தேர்வு செய்த இடம் பழனி. இது அறுபடை வீடுகளில் முக்கியமானது. மாநாட்டுக்கு வந்த அனைவருக்கும் போக்குவரத்து வசதிகள், குடிநீர், சாப்பாடு, தகுந்த கழிப்பறைகள், பிரமாண்டமான பந்தல் என பல்வேறு பணிகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கேள்வி: திமுகவுக்கு முருகன் மீது திடீர் அக்கறை வந்திருக்கிறது என விமர்சனம் வருகிறதே?
இராம சுப்பிரமணியம்: இந்து மதம் என்றால் பா.ஜ.க.தானா?. நீங்கதான் கடவுள்களை சப்ளை பண்றீங்களா? இந்து மதத்திற்கு நீங்கதான் அத்தாரிட்டியா? அவர்கள் பேசுவது அபத்தமானது. திமிர்த்தனம். முதலமைச்சர் ‘ஜெய் சிறீராம்’ சொல்லிவிடுவார் என்கிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு ஜெய் சிறீராம் என பா.ஜ.க.வினரே சொல்வதை நிறுத்திவிட்டார்கள். பூரி ஜெகநாதரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ‘வேல் யாத்திரை’ என்ற பெயரில் தமிழ்நாடு பா.ஜ.க. புருடா விட்டுக்கொண்டு அலைந்தார்கள். அதில் முருக பக்தர்களே இல்லை.
திமுக அரசாங்கம் ஆன்மீகத்திற்கு எதிரானது கிடையாது. அயோத்திக்குப் போக ஆசைப்பட்டவர்கள் அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். காசிக்கு போக விரும்பியவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அறுபடைவீடுகளுக்கு போக விரும்பிய 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தது. ஆடி மாதத்தில் அம்பாள் கோயிலுக்கு போக விரும்பியவர்களுக்கு ஏற்பாடு செய்கிறது?. இதேபோல் எந்த அரசாங்கம் செய்கிறது. பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து தி.மு.க. அரசு செய்கிறது. வேறு எந்த அரசும் செய்ய முடியாது.
(இணையதளப் பதிவிலிருந்து…)