இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் இம்மணவிழாவிற்கு வந்திருக்கின்றார் அய்ந்தாவது தலைமுறையான நம்முடைய அமைச்சர் உதயநிதி!
சுருட்டுப் பிராண்டிற்கு ‘மும்மூர்த்தி’ என்று பெயர் வைக்கலாமா? அது நீங்கள் பேசுகின்ற கொள்கைக்கு விரோதம் இல்லையா? என்ற கேள்விக்கு கலைஞரின் பதில் என்ன தெரியுமா?
‘‘மும்மூர்த்தி சுருட்டை எரிக்கிறோம்; எரிப்பதற்காகத்தான் மும்மூர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார், எங்கள் தோழர் கே.கே.நீலமேகம்!’’
புதுவை, ஆக.30 இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் இம்மணவிழாவிற்கு வந்தி ருக்கின்றார் அய்ந்தாவது தலைமுறையான நம்முடைய அமைச்சர் உதயநிதி அவர்கள் என்றும், ‘‘மும்மூர்த்தி சுருட்டை எரிக்கிறோம்; எரிப்பதற்காகத்தான் மும்மூர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார்’’ எங்கள் தோழர் குடந்தை கே.கே.நீலமேகம் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னதை எடுத்துக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இன்று (30.8.2024) காலை புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்சன் ஹாலில் நடைபெற்ற கே.ஜி.எஸ். இல்ல மணமக்கள் கே.ஜி.எஸ்.டி. சரத் – பி.நிவேதிதா ஆகியோரின் மணவிழாவிற்கு முன்னிலை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
திராவிடத்தினுடைய நம்பிக்கை நட்சத்திரம்
மிகுந்த நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் கே.ஜி.எஸ்.டி.சரத் – பி. நிவேதிதா ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய, திராவிடத்தினுடைய நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு மானமிகு அமைச்சர் அருமைத் தோழர் உதயநிதி அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு, அவரே ஒரு பெரிய பட்டியலைச் சொன்னார். அவர் சொன்ன அத்துணை பெயர்களையும், மேடையில் இருக்கக்கூடிய தலைவர்களை நான் அப்படியே வழிமொழிந்து, ஒவ்வொருவரையும் தனித்தனியே சொல்லிக் கொண்டிருந்தால் நேரம் ஆகும் என்பதினால், வந்தி ருக்கின்ற பெரியோர்களே, நண்பர்களே, தாய்மார்களே, மன்றல் கொண்டிடும் மணமக்களே உங்கள் அனை வருக்கும் அன்பான, மகிழ்ச்சியான வாழ்த்துகள், வணக்கம்!
இந்த மணவிழா, இது நம்முடைய கொள்கைக் குடும்ப மணவிழா! அதைத்தான் அழகாக, வரலாற்றைப் பின்னோக்கி நம்முடைய வெற்றி வீரர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் சொன்னார்.
இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கின்றார்
முதலாவது, மிக வெற்றிகரமான ஒரு வாய்ப்பு என்னவென்றால், இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் அவர் இங்கே வந்திருக்கின்றார். அவர் ஏற்பாடு செய்த மிகப்பெரிய கார்ப் பந்தயம் – அந்த இடத்திலேயே நடப்பதா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதா? என்பதுதான் அது.
அதற்கு முன்பு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதலமைச்சர் அவர்கள், ஒரு பெரிய போராட்டம் நடத்தித்தான், இட ஒதுக்கீட்டில், மெரினாவில் கலைஞருக்கு இடம் வாங்கிக் கொடுத்தார்.
அன்றைக்கு அவர் வெற்றி பெற்றார்;
இன்றைக்கு இவர் வெற்றி பெற்றிருக்கிறார்!
இவருக்கும், இப்போது இட ஒதுக்கீட்டில்தான் பிரச்சினை. அன்றைக்கு அவரும் வெற்றி பெற்றார்; இன்றைக்கு இவரும் வெற்றி பெற்றார்!
மக்கள் மன்றத்தில் என்றைக்கும் வெற்றி பெறு கிறார்கள் என்று சொல்லக்கூடிய, இது ஓர் அற்புதமான ஒரு நல்ல வெற்றித் திருவிழாவாக இம்மணவிழா நடந்துகொண்டிருக்கின்றது. அதுவே மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்றாகும்.
அய்ந்தாவது தலைமுறை
நடத்துகின்ற மணவிழா!
இரண்டாவதாக, இந்த மணவிழா என்பது அய்ந்தாவது தலைமுறை நடத்துகின்ற மணவிழா. 5-ஜி தான் தலைமை தாங்கியிருக்கிறார்.
பெரியாரிலிருந்து கணக்குப் போட்டுப் பார்த்தால், இது அய்ந்தாவது தலைமுறையாகும்.
மணமக்களுக்கு அறிவுரையை தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார். அறிவுரையை இளைஞர், இளைஞர்களுக்குச் சொன்னால்தான், அது நிற்கும். அதற்காக நாங்கள் எல்லாம் முதியோர் என்று நீங்கள் கணக்குப் போடவேண்டாம். நாங்களும் இளைஞர்கள்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
ஒரே ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன் – சுயமரியாதை இயக்கம் எவ்வளவு கொள்கை பூர்வமாக இருக்கின்றது என்பதற்கு அடையாளம் – கே.கே.நீலமேகம் அவர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள்.
75 ஆண்டுகால நண்பர்கள்!
அவருடைய சகோதரர்தான் கடலூரில் கே.கே.கோவிந்தசாமி அவர்கள். அவருடைய பாரம்பரியம்தான், கே.ஜி.சாமிநாதன் அவர்கள். சாமிநாதன் அவர்களும், நானும் 75 ஆண்டுகால நண்பர்கள். பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள்.
எனவே, இது எங்கள் குடும்பத் திருமணம், கொள்கைக் குடும்பத் திருமணம், கொள்கை உறவுள்ள திருமணம், மகிழ்ச்சிகரமான திருமணமாகும்.
கலைஞர் அவர்களுக்கும் இந்தக் குடும்பம் நெருக்க மான குடும்பமாகும்.
எப்படி என்று சொன்னால், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், கே.கே.என். ஆகியோர் எல்லாம் இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர்கள் அந்தக் காலத்தில்.
நாங்கள் எல்லாம் மாணவர்களாக இருந்த கால கட்டத்தில், கொள்கைப் பிரச்சார சுற்றுப்பயணம் சென்றவர்கள்.
அப்போது கே.கே.என். அவர்கள், சுருட்டு விற்பனை செய்தார். அந்தப் பிராண்டுக்கு ‘மும்மூர்த்தி’ என்று பெயர். சில மாவட்டங்களில் அதிகமாக விற்பனையானது.
எரிப்பதற்காகத்தான் மும்மூர்த்தி என்று
பெயர் வைத்திருக்கிறார்
நானும், கலைஞர் அவர்களும் மாணவர் சுற்றுப்பய ணத்திற்குச் சென்றிருந்தபொழுது, கலைஞரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள்; ‘‘நீங்கள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி பேசுகிறீர்கள். உங்களுடைய கே.கே.என். தயாரிக்கின்ற சுருட்டுக்கு – பிராண்டுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என்றால், ‘மும்மூர்த்தி’ என்று பெயர் வைத்திருக்கிறார். மும்மூர்த்தி என்று பெயர் வைக்கலாமா? அது நீங்கள் பேசுகின்ற கொள்கைக்கு விரோதம் இல்லையா?” என்று.
உடனே கலைஞர் அவர்கள் சொன்னார், ‘‘ஆமாம், அதை எரிக்கவேண்டும் என்பதற்காகத்தான், மும்மூர்த்தி சுருட்டை எரிக்கிறோம்; எரிப்பதற்காகத்தான் மும்மூர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார் எங்கள் தோழர் கே.கே.நீலமேகம்” என்றார்.
இன்றைய இளைஞர்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டிய விஷயம் இது.
அப்படி வளர்ந்த இந்த இயக்கம், இன்றைக்கு ஒரு மாநாடு போன்று இம்மணவிழா நடைபெறுகிறது என்றால், இதைவிட பெருமை வேறு என்ன இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கின்றோம்.
இன்றைக்கும் எதிர்நீச்சலிலேயே
வளர்ந்து கொண்டிருக்கின்ற இயக்கம்!
ஒரு காலத்தில், எதிர்ப்பு, எதிர்ப்பு என்று எதிர்ப்பிலே வளர்ந்த இயக்கம் – இன்றைக்கும் எதிர்நீச்சலிலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றது இந்த இயக்கம். அதனால்தான், மிகச் செழிப்பாக இருக்கிறது.
ஆகவே, இளைஞர்கள் – இந்த மணமுறையில் திருமணம் செய்துகொண்டிருக்கக் கூடிய நண்பர்கள் சிறப்பாக வாழ்வார்கள்.
நாங்கள் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாக ஆனதால், மணமக்கள் வீட்டார், ‘‘நேரமாகிவிட்டதே” என்று கவலையோடு இருந்தார்கள். எல்லா நேரமும் நல்ல நேரம்தான்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அதிலும் வெற்றி வீரர் இம்மணவிழாவினை நடத்த இருப்பது நல்ல வாய்ப்பு – இதைவிட வாய்ப்பு என்பது வேறு கிடையாது.
கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு!
அவருக்கு இருக்கின்ற நேர நெருக்கடிக்கு இடையிலும், இது கொள்கைக் குடும்ப மணவிழா என்பதினால், இம்மணவிழாவிற்கு ஒப்புக்கொண்டு, வந்திருக்கின்றார்.
இரண்டு விஷயம் இதில், ஒன்று திட்டமிட்டபடி இம்மணவிழாவினை நடத்தவேண்டும் என்பது,
இரண்டாவது, எவ்வளவு நெருக்கடியாக இருந்தா லும், அதனைச் சமாளித்து, கடமையிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று அவர் காட்டியிருக்கிறார்.
இதுதான் இந்த இயக்கத்தினுடைய சிறப்பு!
கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இயக்கமாகும்.
திராவிடம் வெல்லும்! அதை
நாளைய வரலாறு என்றும் சொல்லும்!
ஆகவே, இந்த மணமக்கள், சிறப்பான வகையில் வாழுங்கள் – கொள்கைப்பூர்வமாக வாழுங்கள் – பகுத்தறிவாளர்களாக வாழுங்கள்.
திராவிடம் வெல்லும்! அதை நாளைய வரலாறு என்றும் சொல்லும்!
வாழ்க மணமக்கள்!
வாழ்க பெரியார்!
வாழ்க சுயமரியாதை!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.