தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூறாண்டு விழா!

2 Min Read

கும்மிப் பாட்டு!

கும்மியடி கொட்டிக் கும்மியடி – நம்ம
குன்றக் குடியாரின் நூறுக்கடி!
நம்மின மேன்மைக்கு நாளுமுழைத் திட்ட
நல்லடி யாரின்சீர் சொல்லியடி!

குன்றக் குடிதந்த குன்றாக்குடி! – திருக்
குறள்சொன்ன நல்லறத் தொண்டர்அடி!
எண்ணம் பெரியார்போல் ஏற்றுங்கொடி! – இங்கு
எல்லார்க்கு மெல்லாமும் வாய்க்கும்படி!

பல்லக்கிலே யேறாப் பண்பின்குடி! – இவர்
பொன்னாக் குதிர்சொற்கள் அன்பின்முடி!
உள்ளக் கிடக்கெல்லாம் ஊருக்கடி – அந்த
உத்தமர் பேர்சொல்லிக் கும்மியடி!

பாராண்ட மன்னரின் மேலாம்அடி! அவர்
பற்றெல்லாம் மானுடம் பற்றியடி!
கூராண்ட தாலவர் குன்றாக்குடி – எங்கள்
குருமகா சந்நிதா னம்தானடி!

கல்வி தரப்பல பள்ளிகண்டார் மக்கள்
கற்றுயர்ந் தோங்கிடக் கைகொடுத்தார்!
பள்ளிகள் சீர்பெறக் கூடல்கண்டார்! – அதில்
பண்டித நேருவும் பங்குகொண்டார்!

சீனப்போ ரின்போது தானணிந்த தங்க
மாலையை ஏலத்தில் விற்றுவிட்டுத்
தானமாய் ஆயிரம் நான்குதந்தே – பறை
சாற்றினார் தாய்நாட்டுப் பற்றினையே!

செந்தமிழ் தீய்த்திட வந்தஇந்தி கண்டு
செந்தழல் போலெழுந் தார்அடிகள்!
மந்தண மாய்மடம் உள்ளடங்கா – தவர்
மக்களுடன் தானும் வழக்கும்பெற்றார்!

பாரி புகழ்பாட வந்தகிளி! – இவர்
பட்டிமன்றப் பேச்சுக் கன்னற்பிழி!
ஊரி லிளைத்தோரும் உய்யும்படி – தொழில்
ஊக்கி வளர்த்தநற் தாயின்மடி!

கோயிலைச் சார்ந்தவர் குடிகளென்பார்! – ஊரின்
குடிகளைச் சார்ந்ததே கோயிலென்பார்!
வாயிலைத் தாண்டிடத் தடைகளிட்டார் – வஞ்சம்
மாய்க்க அடிகளார் வாதுரைத்தார்!

கருவறைக் குள்ளேநாம் கால்பதிக்க – நமக்
கதிகாரம் உண்டென்று சொன்னவராம்!
திருப்பத்தூர்த் தமிழ்ச்சங்கக் கூடலிலே – செல்லத்
தீர்மானம் செய்தவர் நம்மடிகள்!

“இழிதகை நீக்கிநல் லேற்றந்தரும் ஓர்
இணையற்ற வீரராம்” நம்பெரியார்!
“தமிழினத் தந்தையாம் தழுவிப்பழ – கிடும்
இனியபண் பாடாம்” எனவிளித்தார்!

நூறாண்டு கண்டாராம் தேதிப்படி – பல
நூற்றாண்டு சென்றாலும் வாழும்படி
நூல்பல தந்தவர் பேரறிஞர்! – மதி
நுட்பத்தின் நுண்ணிய உச்சமவர்!

வேரை மறந்திடா வெல்விழுதாம் – அய்யா
வீரமணி சொன்ன சொல்லின்படி
காரைக் குடிநகர் மெச்சும்படி – நாம்
காண்போம் விழாவென்று கும்மியடி!

தாரைதாரை யாகத் தமிழர்குடி – வந்து
தமிழரின் நன்றியைக் காட்டும்படிச்
சாரைசாரை யாகச் செல்வோமடி – வர
லாறு படைத்துநாம் வெல்வோமடி!

– செல்வ மீனாட்சி சுந்தரம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *