ஒரு கோடி பனை விதைகள் நல்ல பலனை அளித்துள்ளதற்குப் பாராட்டு!

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.28 தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையிலும், பனைமரத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் 18.10.2000 அன்று “தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம்” என்ற பெயரில் தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.

இந்நலவாரியம் துவங்கப்பட்டத் திலிருந்து இதுவரை 31,097 பயனாளர்களுக்கு ரூ.19.80 கோடி மதிப்பீட்டில் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதுவரை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 11,011 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு பனைமரத் தொழி லாளர்கள் நல வாரியத்தின் 7-ஆவது வாரியக் கூட்டம் நேற்று (27.08.2024 ) வாரியத் தலைவர் ஏ.நாராயணன் தலைமையிலும், முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாரியச் செயலா ளர் ஆ. திவ்வியநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலா ளர்கள் நல வாரியத்தின் தலைவர் ஏ. நாராயணன், தனது தலைமை உரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துக்களோடு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு கடற்கரையோரங்களான 14 மாவட்டங்களில் 1076 கி.மீ தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தினை 24.09.2023 அன்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ் நாடு முழுவதும் அமைச்சர் பெருமக்களும், மேயர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி), வி.ஜி. சந்தோசம் போன்ற தன்னார்வலர்களும் மற்றும் மாணவர்களும் இணைந்து மேற்கொண்டனர். இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உலக சாதனையாக பதிவு செய்யப் பட்டுள்ளது என்பதை தெரிவித்து இப்பணிக்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்தார்.

மேலும், சென்ற ஆண்டு அக் டோபர் மாதம் விதைக்கப்பட்ட ஒரு கோடி பனை விதைகள் நன்றாக செழித்து வளர்ந்துள்ளதை கண்கூடாக காண முடிகிறது என்றும் தெரிவித்து, இதன் அடுத்த கட்டமாக தற்போது தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடி மரக்கன்றுகள் நடும் பணியானது தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முதன்மைச் செயலாளர் / தொழி லாளர் ஆணையர் பனைமரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புசாரா தொழி லாளர்களும் இணையதளம் வாயிலாக இலவசமாக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகனை பெற வேண்டும் என்றும், அதற்கான ஆக்கப்பூர்வ மான பணிகளை தொழிலாளர் உதவி ஆணையர்கள் (ச.பா.தி) தொய்வின்றி மேற்கொண்டு தொழி லாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வாரிய உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கருத்துக்களின் மீதும் விவாதம் நடத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாக அலுவலர், ஞானசம்பந்தன் நன்றி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *