திருச்சி, ஆக.26- ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை மட்டுமே நிறைவேற்றும் நிலை தொடர்ந்தால், ஒன்றிய பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று (25.8.2024) கூறிய தாவது: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் ஒவ்வொரு முறையும், அவர்களை மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாப்பதில் ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, ஒன்றிய அரசுக்கு எதிராக செப். 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்த கட்சியின் தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். ஆனால், வயநாடு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, எதையும் அறிவிக்கவில்லை.
ஒன்றிய பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மட்டுமே நிறைவேற்றும் நிலை தொடர்ந்தால், ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது. நடிகர் விஜய் தற்போதுதான் கட்சிக் கொடியை அறிமுகம் செய்துள்ளார். அவர் கட்சியை தொடங்கி நடத்தட்டும். பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவிப்போம்.
-இவ்வாறு இரா. முத்தரசன் கூறினார்.