கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?

Viduthalai
10 Min Read

சித்திரபுத்திரன்

கிருஷ்ணன் – அர்ஜூனன்
சம்பாஷணை!
கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் – இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும்
தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

அர்ஜூனன்: ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி வஞ்சித்து வசப்படுத்தியதாகவே காணப்படுகின்றனவே! அது மாத்திரமல்லாமல் அந்தப் பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே! இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன்: ஓ! அர்ஜூனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒரு நாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படி போடமுடியும்? அப்படியே போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும்? ஒரு சமயம் திரு. அ.இராகவன் சொல்லுவது போல் ஆண் – ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படிப் பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன் னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்ப வனுக்கு புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல் லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.
அரு: அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்கு சற்று சொல்லு பார்ப்போம்!
கிரு: அந்த மாதிரி எழுதின தத்து வார்த்தம் என்ன வென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும், எதிரியை ஜெயிக்கப் போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிகச் சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப் போய் காட்டியோ, அல்லது அவனுக்குக் கூட்டிவிட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த் தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் ரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாத வன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந் திருந்தால் அதற்குப் பொது ஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத் தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றி பெற்றான் -பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்களே கூடச் சொல்லு வதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என் (விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள் . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்த தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்!

ஆதலால் வெற்றி பெறுவதற்கு வழி எனப்தைக் காட்டும் தத்துவப் பொரு ளாகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். இது போலவே தத்துவார்த் தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் பழக்கமும், வழக்கமும் தத்து வார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமும், அவைகளெல்லாம் சுயமரியாதைக் காரர்களுக்கல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.
அரு: சரி, சரி! இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம்! சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.
கிரு: அதென்ன சொல்லு பார்ப்போம்!
அரு: அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்னியாசி ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட்டான் என்றும், அந்தப்படியே அவன் கொடுத்தான் என்றும் சொல்லப்படுகின் றதே! அதன் ரகசியம் என்ன?
கிரு: இது தெரியவில்லையா?
அரு: தெரியவில்லையே!
கிரு: சன்னியாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகஸ்தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்யவேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்க வேண்டும்! அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக் கின்றது! ஆகவே அந்தப்படி சன்னியாசிக்குப் பெண்களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்னியாசி ரூபமாய் – ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்னியாசி யாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டுக்கு வந்தால் அவன் கேட்டவு டனேயே கொடுக்க வேண்டும் என்பதற் காகவே அதாவது இந்த சன்னியாசி – சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்து விடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக் காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.
தவிரவும், குருசாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப்பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்து கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்தந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், சிலர் தெரி யாதது போலவே காட்டிக் கொண்டிருக் கிறாகள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும், மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.
அரு: சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்கு கின்றாயா?
கிரு: என்ன அது! சொல் பார்ப்போம்!
அரு: அதாவது புராணங்களில் அக்கிர மமான, வஞ்சகமான புரட்டான காரியங் கள் செய்யவேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்த தாகக் காணப்படுகின்றதே! இதன் தத்துவ மென்ன?
கிரு: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படு மென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக் காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற் காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியா தைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காகப் பார்ப்பனர்களைத் தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.
அரு: இன்னம் ஒரு சந்தேகம்?
கிரு: என்ன சொல்லு?
அரு: கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்!
கிரு: ஆம்.
அரு: அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவா கனம், கும்பாபிஷேகம் முதலி யவை செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும் கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?
கிரு: அதன் ரகசியம் என்னவென்றால், மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டு விடுவான். அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால்தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்குத் தனக்கு வேண்டியதையெல்லாம் நைவேத்தியம் செய்யச் செய்து, தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசிய மும் ஏற்பட்டது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால்தான் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்துவிடும், கடவுள் மஹிமைகளும் ஒழிந்துவிடும்.
அரு: சரி, இவை எனக்கு ஒரு மாதிரி விளக்கமாயிற்று. இன்னும் சில விஷ யங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.
கிரு: சரி.
21-12-1930 – குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

எப்புடிடா? – ‘கிருஷ்ண ெஜயந்தி’’
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும்.

கடவுளின் யோக்கியதை
– சித்திரபுத்திரன் –

கேள்வி : கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு.
பதில் : நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனையுள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.
கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு..
பதில்: கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர் வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமாக பழம், துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவை களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியே உருவாய்க் கொண்டவர்.
கேள்வி: இந்தக் கெடுதிகளை யெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜு?
பதில்: முன் சொல்லப்பட்ட நன்மை களை எல்லாம் கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ, அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன்.
கடவுள் படைத்த படைப்பெல்லாம் மனிதனுக்காகவே.

மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லுகின்றது. ஆகவே, கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப் பட்டிருப்பானேயானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால் அவனை நாம் எவ்வளவு அயோக் கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவ னென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா?
அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்கு வதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும், குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணாமூர்த்தி, விருப்பு, வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா?

அன்றியும், கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்கு மானால் அந்த ஒரு காரி யமே பெரிய தொரு அயோக்கியத்தனமும், அக்கிர முமானதென்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசிகளுக் கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ் கின்றன?
மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?
இவைகளையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா?
மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா?
இவைகளையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்க வில்லையா?

– குடிஅரசு – உரையாடல் – 12.05.1935

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *