தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி வெற்றி பெற்றது. சென்ற வியாழனன்று திருவிதாங்கூரிலுள்ள சர்க்கார் ஆலயங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட ஹிந்துக்கள் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்துள்ள உத்தரவினால் பூராவும் வெற்றி பெற்று விட்டது. கேரளம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று கூறினார் காலஞ் சென்ற விவேகாநந்தர். அத்தகைய கேரளத்தில் ஒரு பகுதி திருவிதாங்கூர்.அது இதுவரை வைதீகக் கோட்டையாகவே இருந்து வந்தது. இம்மாதம் 12ஆம் தேதியோடு திருவிதாங்கூரிலே வைதீகம் ஒழிந்துவிட்டது; பகுத்தறிவு வெற்றி பெற்று விட்டது. ஹிந்து சமயம் வளர வேண்டுமென்று விரும்புவோரும், சீர்திருத்தக்காரர்களும், திருவிதாங்கூர் மகாராஜாவை வாழ்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனைய ஹிந்து சமஸ்தானங்களும் திருவிதாங்கூரைப் பின்பற்றுமானால் ‘ஹிந்து’ மத்தத்தைப் பிடித்திருக்கும் தீண்டாமைக் கறை ஒழிந்துவிடும் என்பது நிச்சயம்.
– ‘விடுதலை’ – 11.11.1936