சென்னை, ஆக.24 எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று (23.8.2024) நடந்தது. இந்த விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அருண் முதல மைச்சருக்கு புத்தகம் வழங்கி வர வேற்றார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை முதலமைச்சர் வாகனத்தில் நின்றபடி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கான விருதுகளை தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே, ஆவடி காவல்துறை ஆணையர் சங்கர், காவல்துறை நிர்வாக பிரிவு ஏடிஜிபி வெங்கட்ராமன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர தயாள், காவல்பயிற்சிப்பள்ளி அய்.ஜி. தேன்மொழி, அய்.ஜி. பவானீஸ்வரி, கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், வடக்கு மண்டல அய்.ஜி. அஸ்ரா கார்க், தெற்கு மண்டல அய்.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, உளவுத்துறை அய்.ஜி. செந்தில்வேலன், நிர்வாகப்பிரிவு அய்.ஜி. அவினாஷ் குமார், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 69 காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாக விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அருண் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் 482 பேருக்கு விருதுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்கிறது என்றால், அந்த பெருமையில் தமிழ்நாடு காவல்துறைக்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சி குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இத்தகைய பெருமையை அரசுக்கு உருவாக்கி தரும் காவலர்கள் எல்லோருமே பதக்கங்களுக்கு தகுதி படைத்தவர்கள்தான். காவல்துறையை நவீனப்படுத்துவதற் காக இந்தியாவிலேயே முதல் காவல் ஆணையத்தை அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இரண் டாவது, மூன்றாவது காவல் ஆணையத்தையும் கலைஞர்தான் அமைத்தார். 5ஆவது காவல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் திராவிட மாடல் அரசு அமைத்திருக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.