கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பெண் அய்.ஜி. தலைமையில் புலனாய்வுக் குழு : முதலமைச்சர் அறிவிப்பு

Viduthalai
2 Min Read

சென்னை, ஆக.22 கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் நிகழ்வு குறித்து விசாரிக்க அய்.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூகநலத் துறை செயலர் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கவும் முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி மாணவர்களுக்கான முகாம், பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில் போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிஉள்ளனர்.இந்த நிகழ்வு தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என்சிசிபயிற்றுநர்கள் 6 பேரில் 5 பேரும், இந்த நிகழ்வை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த பள்ளி நிர்வாகிகள்4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து, காவலரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான என்சிசி பயிற்றுநர்கள் இதேபோல மேலும் சில பள்ளி, கல்லூரி களிலும் இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்தியது தெரியவந்துள்ளது. அந்த பள்ளி, கல்லூரிகளிலும் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறை அய்.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஆலோசித்து, அவர்களது நலன் காக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுப்பது குறித்தும் பரிந்துரை அளிக்க, சமூகநலத் துறை செயலர் ஜெயசிறீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தகுழுவில், மாநில சமூகப் பாதுகாப்புஆணையர் ஜானி டாம் வர்கீஸ், தேர்வுத்துறை இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த்,மனநல மருத்துவர்கள் பூர்ணசந்திரிகா,சத்யா ராஜ், காவல் ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யாரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
`இந்த நிகழ்வு குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *