சென்னை, ஆக.21- மருத்துவர்களை பாதுகாக்க 16 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அதன்படி, மருத்து வர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
போராட்டம்
மேற்கு வங்காள மாநி லம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 8ஆம் தேதி பாலியல் வன் கொடுமை செய் யப்பட்டு கொலை செய்யப்பட் டார். அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடுமை யான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக பிடித்து, விரைவாக தண்டனை பெற்றுத்தர வேண் டும். மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை பாதுகாப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்காளம் மட்டுமின்றி நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டம்
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை பாது காப்பதற்கு உரிய சட்டம் இயற்றவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் பிரதான கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை. ஆனால் நமது நாட்டில் உள்ள சில மாநிலங்கள் மருத்துவர்கள் உள்பட சுகாதார சேவையாற்றி வருபவர்களின் பாதுகாப்புக்காக சட்டம் இயற்றியுள்ளன.
அந்தவகையில், தமிழ்நாடு மருத்துவ சேவையாற்றுபவர்கள் மற்றும் மருத்துவ சேவையாற்றும் நிறுவனங்கள் வன்முறை, இழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டம் 2008-ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் உயிர் காக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.
மருத்துவ சேவை வழங்குபவர்கள்
மருத்துவ சேவையாற்றுப வர்கள் மற்றும் மருத்துவ சேவை யாற்றும் நிறுவனங்கள் வன்முறை, இழப்பு மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின்படி, ஒன்றிய- மாநில அரசால் அல்லது உள்ளாட்சி அமைப்பால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகள், நோயுற்ற வர்களை தங்கவைத்து சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், குழந்தை பிறப்பதற்கு முன்பும், பின்பும் பெண்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், உடல், மனம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், நோய்கள் மருத்துவம் பார்த்த பின்பு அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்பு தங்கியிருக்கும் இல்லங்கள் ஆகியவை மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல, பதிவு பெற்ற மருத்துவர்கள், நர்சுகள், மருத் துவக் கல்வி பெறும் மாணவர்கள், நர்சிங் மாணவர்கள், மருத் துவமனையில் பணிபுரிகின்ற சார்நிலை மருத்துவ பணியா ளர்கள் மருத்துவ சேவை வழங்குபவர்களாகவும், மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்கள், மருத்துவ சேவைகள் வழங்குப வர்கள் வசம் இருக்கும் மருத் துவ சாதனங்கள், மருத்துவ எந்திரங்கள் சொத்துகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
10 ஆண்டுகள் சிறை
மருத்துவ சேவையாற்றுபவர் கள் தங்களது கடமையை செய் யும்போது அதனை தடுத்தாலோ, மருத்துவ சேவையாற்றும் நிறுவனங்களின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நபர் தனியாகவோ, அமைப்பின் தலைவராக, உறுப்பினராக இருந்து வன்முறை செயல்களை செய்தல், அதை செய்யதூண்டி விடுதல், ஊக்குவித்தல் போன்ற செயல்களை செய்தால் 3 ஆண்டுகளுக்கு குறையாமலும், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அதோடு சேர்த்து அபராதமும் விதிக்கப்படலாம்.
மருத்துவ சேவையாற்றுபவர் களின் உபகரணங்கள், மருத்துவ எந்திரங்கள், மருத்துவ சேவையாற்றும் நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துகளுக்கு தீங்கு விளைவித்தால் அது பிணையில் வெளியே வரமுடியாத குற்ற மாகும். இந்த குற்றத்தை செய்ததாக கருதப்படுபவர்கள் நீதிமன்றம் தீர்மானிக்கும் சொத்துக்கு, தீங்கு மற்றும் இழப்பு ஆகியவற்றிற்கு இழப்பீடு தரும் பொறுப்புடையவராக கருதப்படுவார்கள்.
16 ஆண்டுகளுக்கு முன்பே…
தமிழ்நாடு அரசு 16 ஆண்டு களுக்கு முன்பு இயற்றிய இந்த சட்டத்தை தீவிரமாக நடை முறைப்படுத்தினால் மருத்துவ சேவையாற்றுபவர்கள், மருத்துவ சேவையாற்றும் நிறுவனங்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், வன்முறை சம்பவங்கள் குறையும். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாற்றுபவர்களும் பயமின்றி தங்களது கடமையை செய்ய முடியும் என்று மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.