நம் கருத்தைத் தவறு என்றோ, நடத்தையை அயோக்கியம் என்றோ எவரும் கூறாதபடி
இயக்கத்தை மிக ஜாக்கிரதையாக, வெற்றிகரமாக நடத்திவருகிறோம்-தந்தை பெரியார்
கி.வீரமணி
சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு உரிய காரணங்கள் குறித்தும், திராவிடர் கழகத்தின் தனித் தன்மை வாய்ந்த தொண்டு – அணுகுமுறைகள் பற்றியும் தந்தை பெரியார் தெரிவித்துள்ளவை வருமாறு:
எங்களுடைய கருத்தை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறவர்களல்ல நாங்கள். சொல்லுகிற கருத்துக்களைப்பற்றி மக்கள் சிந்தித்துப் பார்த்து சரி எனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக நான் பல முறை கூறி வந்திருக்கிறேன் மறுத்துக் கூறுபவர்கள் முன் வருவதை நான் வரவேற்கின்றேன்.
திராவிடர் கழகம்
ஆனால், திராவிடர் கழகம் ஒன்றுதான் இத்துறையில் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு வருகிறது. அதற்கு முன்பு ‘ஜஸ்டிஸ் கட்சி என்ற பேரால் இருந்து வந்த இந்தக் கழகம் சமூகத்துறையில் புகாமல் அரசியலில் மாத்திரம் வேலை செய்து வந்தது என்றாலும் அதனால் மக்களுக்கு அது சமயம் ஓரளவுக்கு அரசியல் உணர்ச்சி வந்தது. ஜஸ்டிஸ் கட்சியும் 18 ஆண்டு காலத்தில் ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன சாதிக்கக்கூடுமோ அதையெல்லாம் செய்தது; அதன் மூர்த்தண்யமான சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியும் புது துறையில் புகுந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்பே காங்கிரஸ் கட்சி இருந்துவந்தது; எனினும் அது அப்போதெல்லாம் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கும் ஆதிக்கமும், உத்தியோகமும் கிடைக்கப் பாடுபடும் ஒரு கட்சியாகவே இருந்து வந்தது; அதன் மூலம் வெள்ளைக்காரனிடமிருந்து உத்தியோகமும், பதவியும், அதிகாரமும்.
கொழுத்த ஊதியமும் பார்ப்பனர்களுக்குக் கிடைப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி இருந்து வந்தது. போட்டியாக ஜஸ்டிஸ் கட்சி தோன்றியவுடன்தான் அவர்கள் தமது போக்கை மாற்றிக்கொண்டார்கள். நானும் அந்த மாறுதல் காங்கிரசுடனிருந்தே தான் போராடினேன், அந்த அனுபவம் காரணமாகவே சில காரியங்களையேனும் சாதிக்க விரும்பியே சில நாளிலேயே காங்கிரசிலிருந்து வெளியேறினேன். அரசியலில் உழைப்பது மட்டும் பயன் அளிக்காது: உத்தியோகத்தால் மட்டும் மக்களுக்குப் பயனில்லை; அதுவும் உத்தியோகம் எத்தன்மையான மக்களையும் மதிமயக்கமடையச் செய்யத்தான் செய்யும். அதனால் அஸ்திவாரத்தைத் திருத்தி அமைக்க நாம் சமுதாயத் துறையில் பணியாற்றுவதென முடிவு செய்துகொண்டே இறங்கினேன். சமுதாயம் என்றால் இந்து மதச் சமுதாயம்: இந்து மதச் சமுதாயம் என்றால் அதாவது புராண சமுதாயம்தான் ஆகவே இங்கு நான் சமுதாயம் என்னும்போது “இந்து” சமுதாயத்தையே குறிப்பிடுகின்றேன்.
1925ஆம் ஆண்டில்
1925ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் நான் காங்கிரசிலிருந்து வெளிப்படையாகப் பிரிந்தேன். அரசியலின் பேரால் அப்போது காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் செய்து வந்த பித்தலாட்டங்களை நான் நன்றாய் உணர்ந்ததால் அவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி ஒரு ஆண்டு பணியாற்றினேன். ஓரளவு பயனுமடைந்தேன். எனினும் பொதுத் தேர்தல் 1926இல் நடைபெற்றபோது ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப்போய் விடவே, பின்பு சமுதாயம், மதம், புராணங்கள் இவைகளின் பேரால்தான் பார்ப்பனர்கள் இவ்வளவு அதிகாரமும். செல்வாக்கும் பெற முடிகின்றது என்பதை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குத் தெரிவித்து மக்களிடையே அதுபற்றித் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினேன். அந்த எண்ணத்துடனேதான் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்து. ‘குடிஅரசு’ பத்திரிகையிலும் தொடர்ச்சியாக அவை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தேன். சாதாரண மக்களுக்குப் புரியும்படியாகவும், அரசியல்வாதிகளும் ஓரளவு ஆதரவு அளிக்கும் வகையிலும் படிப்படியாக எழுதி வந்தேன்.
காலப்போக்கில் இயக்கம் வளர்ந்தது. இப்போது, அதாவது சமீப காலத்திலே அது திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றவுடன் அரசியல் தொடர்பையே அறுத்துக் கொண்டேன். தேர்தல், பதவி, கவுரவப் பட்டம் இவைகளை லட்சியம் செய்யாது அவைகளைத் துறக்கக்கூடிய தியாகங்களைச் செய்யக் கூடியவர்களையே கழகத்தில் சேர்த்துக் கொண்டேன். பட்டம், பதவி இவைகளை ஒதுக்கி, உதவும் தியாக மனப்பான்மை, நாணயம், யோக்கியம் இவை உடையவர்களையே கொண்டதாக திராவிடர் கழகத்தை நாளாவட்டத்தில் திருத்தி அமைத்தேன்.
ஆங்கிலத்தில் வழங்கப்படும் Honesty is the Best Policy என்னும் பழமொழியே, அதாவது நாணயம் என்ற சொல் யோக்கியதையினால் வளர்ச்சியடையும். ஒரு திட்டத்தைக் குறிப்பதேயாகும். தியாகம் என்பது சுயநலத்திற்குப் பலனை எதிர்பாராது, லட்சியம் செய்யாது. இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவது என்பதாகும். இந்த இரண்டு தன்மையும் திராவிடர் கழகத்தில் முக்கிய இடம் பெறச் செய்து, இதற்கு மாறுபட்ட சுயநலக்காரர்களைக் கழகத்திலிருந்து ஓடும்படிச் செய்தேன். அதனாலேயேதான் நம் கழகம் இந்த உயர்நிலையை அடைய முடிந்தது.
மரியாதையும் மதிப்பும்
அன்றியும், அதனாலேயே நமது புரட்சிகரமான கருத்துக்களுக்கும். பேச்சுக்களுக்கும் ஏகமாக ஆமோதிப்பு கிடைக்காவிடினும் எதிர்ப்பு இல்லாதபடி – நம் கருத்தைத் தவறு என்றோ, நடத்தையை அயோக்கியம் என்றோ எவரும் கூறாதபடி இயக்கத்தை மிக ஜாக்கிரதையாக, வெற்றிகரமாக நடத்திவர இருத்திவர முடிந்தது. இதனாலேயே தான் நாட்டிலும் ஒரு அளவு மரியாதையும் மதிப்பும் நம் கழகத்திற்கு இருந்து வருகிறது. அதிகாரிகளிடமும் எதிர்க்கட்சியாளர்களிடமும் மதிப்பிருந்து வரும் வகையில், பலம் பொருந்திய ஒரு ஸ்தாபனமாக நமது கழகத்தைக் கருதும்படியாகச் செய்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கெல்லாம் அது பதவியில் இருக்கும் வரையில் தான்; பதவி போய்விடின் யாரும் அக்கட்சியிலிரார். காரணம், காங்கிரசில் பதவிப் பித்தர்கள், பணப்பித்தர்கள் தவிர மற்றவர்களுக்கு இடமில்லாமற் போய்விட்டது. ஆதலால், காங்கிரஸ் கட்சி பதவியில் இருக்கிறது. நமக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக அதில் பலரும் இருக்கிறார்களே அன்றி அதன் திட்டத்துக்காக அல்ல; அதில் திட்டமும் எதுவும் இல்லை. பதவி அதிகார மோகம் காரணமாகவோ, கட்சியின் திறமைக் குறைவோ அதனால் நாணயக் குறைவோ ஏற்படும்போதெல்லாம் அவை வெளியே தெரியாதவாறு திரையிட்டு – மறைக்கப்பட்டு வருகின்றன.
வேறு கட்சிகள்
நாட்டில் வேறு கட்சிகள் எதுவுமில்லையா என்றால் கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக ஒரு கட்சி இருக்கிறது. என்றாலும் அதிலும் வசதிக்காக, வாழ்வுக்காக அதில் பெரும்பாலோர் இருப்பதால், அதோடு பார்ப்பன ஆதிக்கமும் அதில் தலைசிறந்து இருப்பதால், அவர்களின் நிலைமை இப்போது மக்களுக்கு நன்றாய் வெளியாகிவிட்டது. அக்கட்சியின் நிலையைக் கவனித்தால் இன்று அதன் முக்கியஸ்தர்களுக்குப் பலனளிப்பதாக இருக்கிறதே அன்றி பாமர ஏழை – தாழ்த்தப்பட்டோர். சேரிவாழ் மக்கள் இவர்களுக்கு அதில் பலனேதும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களும் சேரிவாழ் மக்களும் சமூக உயர்நிலைக்குத் திரும்பவோ அல்லது பிற மக்களுடன் சமநிலை அடையவோ அக்கட்சியினரிடம் திட்டம் வசதி இல்லை.
அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள்; சமீபகாலத்தில் தலைதூக்கும் வகையிலும் அதன் வேலைகள் தோன்றவில்லை. ஆகவே, உருப்படியாக இருப்பது திராவிடர் கழகம் ஒன்றுதான். இந்து மகாசபை இருக்கிறது; தமிழரசு போன்ற பல கழகத்தினர் இருக்கிறார்கள். ஆனால் தமிழரசுக் கழகத்தினர் தமிழ்நாடு பிரிவினை என்றதுமே அவர்களுக்கு ஒரு தரும சங்கடம், தொல்லை ஏற்பட்டிருக்கிறது! ஆகவே, பிழைப்புக்கு ஒரு வாய்ப்பாகவே தமிழரசுக் கழகமும், இந்துமகா சபையும் இருந்து வருகின்றன. பிரஜா கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி முதலியன எல்லாம் அதிலிருப்பவர்கள் தத்தமக்குப் பதவி வாய்ப்புக்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே தவிர அடிப்படையில் காங்கிரசுக்கு மாறுபட்ட தனித்த ஒரு லட்சியம் – நோக்கம் கொண்டன அல்ல தேர்தல் காலங்களில் ஓட்டு வேட்டைக்கு, சுயலாபத்துக்கு, கட்சிகள் இருக்கின்றன; அதற்கே பயன்படுகின்றனவே தவிர, உருவான நிலையான கட்சிகள் கிடையாது. எந்தக் கட்சியின் பேரைச் சொன்னாலும் “ஆகா! அவனப்படியா?” என்று மக்கள் சொல்லிப் போகும் வகையில் இருக்கிறது.
மக்கள் மதிப்பதேன்?
நாம் மக்களிடையே விழிப்பையும் உணர்ச்சியையும் ஊட்டுவதால் நம்மை மதிக்கிறார்களா, இல்லையா என்றில்லாவிடினும், அவர்களுக்குள் ஏமாற்றப்படாத வகைக்கு நம் செயல்கள் பலனளித்து வந்துள்ளன. ஆக. நாம் இவ்வித வசதிகளை மட்டும் கொண்டு பயனில்லை என்பதாலே காரியம் ஏதேனும் சாதிக்க, நம்மீது மக்கள் கொண்டுள்ள உறுதி – நம்பிக்கை இவைகளைக் கருதும்போது எதையாவது சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்: சிந்தித்து ஏதேனும் செய்து வருகிறோம். அவ்விதம் செயலாற்றியதன் பயனாகச் சென்ற சில ஆண்டுகளிலும் முன்னேற்றமும் கண்டு வருகிறோம். இந்த முன்னேற்றத்தைத் தீவிரமாக்க வேண்டும். இது காரணமாகவே இன்றைய அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு அரசியல் துறையில் இருந்து ஒதுங்கியிருந்து பின்னர் பார்க்கலாம் என்று கருத்துக் கொண்டிருக்கிறோம்.
தந்தை பெரியாரின் வெளிப்படைத் தன்மைக்கு இது போதாதா?
(தொடரும்)