நெல்லை, ஆக.16- தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 பக்தர்கள் பலியானார்கள். சாமி கும்பிட வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரி முத்து அய்யனார் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு வந்து அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் ‘புனித’ நீராடி, நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்கிறார்களாம். மேலும், ஆடி மாதத்தில் நடைபெறும் திரு விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குடில்கள் அமைத்து தங்கி வழிபடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆடி திருவிழா நடை பெற்றது.
சிவகாசி பக்தர்கள்
இந்த திருவிழாவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதால் நேற்று (15.8.2024) முருகன் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என 23 பேருடன் ஒரு வேனில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்தார். அங்கு பக்தர்கள் அனைவரும் காலையில் வழிபாடு செய்தனர்.
தண்ணீரில் மூழ்கிய
அக்காள் – -தங்கை
மதியம் கோவில் வளாகத்தில் உள்ள பட்டவராயன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் முருகனின் மகள்களான கல்லூரி மாணவி மேனகா (வயது 18), பள்ளி மாணவி சோலை ஈஸ்வரி (15) உள்ளிட்டவர்கள் குளித்து முடித்து விட்டு சாப்பிடுவதற்காக 2 பேரும் எழுந்து சென்றனர். அப்போது, அவர்கள் திடீரென்று ஆற்றில் இருந்த ஆழமான தடாகத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்கள். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரது சித்தப்பா சங்கரேஸ்வரன் (40), உறவினரான மாரீஸ்வரன் (28) ஆகியோர் ஆற்றில் இறங்கி 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், அவர்களும் தண்ணீரில் மூழ்கினார்கள். எனினும் மாரீஸ் வரனை அந்த பகுதியில் இருந்த சிலர் பத்திரமாக மீட்டனர்.
3 பேரும் பரிதாப சாவு
உடனடியாக அம்பை தீய ணைப்பு நிலையத்திற்கும், மணி முத்தாறு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு மேனகா, சோலை ஈஸ்வரி, சங்க ரேஸ்வரனை ஆகிய மூவரையும் பிணமாக மீட்டனர்.
3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.