ஜனநாயக கட்டமைப்புகளை நசுக்கி, எதிர்க் கருத்துகளை எல்லாம் ஒழிக்க முனைந்தால் இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதே வங்கதேச நிகழ்வு நமக்குச் சுட்டும் பாடம்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு தப்பி வந்துவிட்டார். தனது அரசை எதிர்த்துப் போராடியவர்களைத் தீவிரவாதிகள், பாகிஸ்தான் உள வாளிகள், தேசத் துரோகிகள், படித்த நக்சலைட்டுகள், நாட்டை துண்டாடத்துடிக்கும் துரோகிகள் என்று பேசிக் கொண்டு இருந்தார்.
வங்கதேசத்தில் 15 ஆண்டுகளாக நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு கடந்த ஜூலையில் வெடித்த மாணவர் போராட்டம் முடிவு கட்டியுள்ளது. மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேச அரசியலில் 20 ஆண்டுகளாக கோலோச்சிய ஷேக் ஹசீனாவை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அகற்றியது மாணவர் போராட்டம்.
ஆனால், அப்படியே நிலைமை மாறி நாட்டை விட்டு வெளியேற வெறும் 40 நிமிடம் தான் அவருக்கு ராணுவம் வழங்கியது. பிரதமர் மாளிகையைச் சேர்ந்த ஓர் ஊழியர் கூறும்போது, பிரதமர் வெளியே புறப்படும்போது குறைந்த பட்சம் 3 மணி நேரமாவது அவர் தயாராவார். உடைமைகளை எடுத்து வைக்க – அலுவலகக் கோப்புகளைப் பார்வையிட்டு முக்கிய கோப்புகள் எவை? கையெழுத்திடவேண்டியவை எவை? போன்ற பணிகளைச் செய்துவிட்டு பிறகு புறப்படுவார். ஆனால், 15 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஒருவருக்கு அவரது உடைமைகளை எடுத்துவைக்கக் கூட ராணுவம் நேரம் கொடுக்கவில்லை. காரணம் கூட்டம் உள்ளே புகுந்துவிட்டால், வன்முறையில் ஈடுபடுவார்கள்; பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அறிக்கை கொடுத்த உடனே வங்கதேசப் பிரதமர் உடனடியாக வெறும் கைப்பையையும் சில டாலர்களையும் எடுத்துக்கொண்டு வெளியேறினார் என்று கூறுகிறார்.
அவர் வெளியேறிய 8ஆவது நிமிடத்தில் கூட்டம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. கூட்டம் பிரதமரின் படுக்கை அறையில் நுழைந்த போது பிரதமர் மாளிகையின் பின்புறத்தில் இருந்து ஹெலிகாப்டர் இந்தியாவை நோக்கி பறக்கத் துவங்கியது.
இதை மாளிகையில் இருந்து ஒரு போராட்டக்காரர் தனது கைப்பேசியில் படம் எடுத்திருந்தார். பிரதமர் சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் அவரது உடலை டாக்கா சாலையில் இழுத்துச்சென்று இருப்பார்கள் போராட்டக்காரர்கள். அவர்களின் ஆக்ரோசத்தை குறைத்திருக்க முடியாது.
பேச்சு வார்த்தைக்கு என்று அழைத்து ஒட்டுமொத்த மாணவர் குழுத் தலைவர்களைச் சுட்டுத்தள்ளியது வங்கதேச காவல்துறை. இது பிரதமரின் உத்தரவின் பேரில் நடந்தது, காரணம் இந்த தலைவர்களைக் கொன்றுவிட்டால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுவிடுவார்கள் என்ற நினைப்பில் இவ்வாறு கொலை செய்ய உத்தரவிட்டார். அதுமட்டுமல்ல, இவர்களுக்காகக் குரல் கொடுத்த பல மூத்த கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து கொலை செய்தது வங்கதேச காவல்துறை.
இப்படி மொத்தம் 120க்கும் மேற்பட்டோரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து காவல்துறை சுட்டுக்கொலை செய்தது. அதனை அடுத்து ஹெலிகாப்டரில் சென்று போராட்டக்காரர்கள் மீது இயந்திரத் துப்பாக்கி கொண்டு சுட்டு வீழ்த்தியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பொது மக்களும் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக போராட்டக் காரர்களின் ஆத்திரம் அதிகரித்துவிட்டது. இவ்வாறு ஆக்ரோசமான போராட்டக்காரர்களின் பிடியில் பிரதமர் சிக்கி இருந்தால் இத்தாலிய பாசிச அதிபர் முசோலினிக்கு ஏற்பட்ட கதி இவருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆகையால்தான் அவர் மாற்று உடை கூட எடுக்காமல் ஓடிவிட்டார்.
அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்று செல்வச் செழிப்போடு வாழும் அவாமி லீக் கட்சியினருக்கே நாட்டின் பொருளாதார வளம் தரும் அனைத்து ஒப்பந்தங்களும் கொடுக்கப்பட்டன. அரசு வேலை வாய்ப்பா? ‘அவாமி லீக்’, உயர் கல்வியில் இட ஒதுக்கீடா? ‘அவாமி லீக்’ அரசுப் பணிக்கான ஒப்பந்தமா? ‘அவாமி லீக்’ என எங்கும் அவர்களுக்கே கொடுக்கப்பட்டது.
இங்கு எப்படி இ.டபிள்யூ.எஸ். (EWS) கொண்டு வந்தார்களோ அதே பாணிதான் அங்கேயும். பட்ட வர்த்தனமாக தேர்தல் முறைகேடுகள் நடக்கவே, எதிர்க் கட்சிகள் தேர்தலில் நிற்கவில்லை. இருப்பினும் சில பொம்மைக் கட்சிகளைத் தனக்கு எதிராக நிற்கவைத்து, வெற்றி பெற்று இதர பொம்மைக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு எந்தவித எதிர்ப்பும் இன்றி 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது.
அங்கிருந்துதான் பிரச்சினை வெடித்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளின் எண்ணிக்கை வெறும் 0.1 விழுக்காடு மட்டுமே! ஆனால், காலம்காலமாக அதிகாரத்தில் இருந்துகொண்டு இருக்கும் அவாமி லீக்கைச் சேர்ந்தவர்களுக்கும் அதன் ஆதவாளர்களுக்கும் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு.
அவாமி லீக்கில் பெரும்பாலானோர் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு பிரிவினையின் போது இந்தியாவின் மேற்குவங்கம் மற்றும் இதர இந்தியப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் வசதி கொண்ட ஆதிக்க சக்திகளாக இருந்ததால் ஆட்சி அதிகாரத்தைத் தங்களிடம் வைத்துக்கொண்டனர்.
காலம் காலமாக உழைக்கும் வங்கதேச மண்ணின் மைந்தர்கள் எப்போதும் போல் உழைத்துக் கொடுக்கும் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர். அண்மைக்காலமாக அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டு இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் அந்தப் பொருளாதாரக் குவியல் அனைத்தும் இங்குள்ள அதானி அம்பானிகளிடம் குவிவதைப் போல் அங்கே அவாமி லீக் கட்சிக்காரர்களிடமே குவியத் தொடங்கியது.
விளைவு சாமானியர்களின் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. இவர்களின் போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு எதிர்கொண்டது. 200க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20,000க்கும் மேல் காயமடைந்திருந்தனர். சுமார் பதினோராயிரம் பேர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். தேசம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, இணையத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தது அரசு.
அரசின் அடக்குமுறை மக்களின் கோபத்தை மேலும் வலுப்படுத்தவே உதவியது. ஷேக் ஹசீனா கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அவரது ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி என்பது, அதல பாதாளத்துக்குப் போயிருக்கிறது.
ஜனநாயக ரீதியில் தாங்கள் விமர்சனங்களை, எதிர்ப்புகளை முன்வைக்கும், வாய்ப்புகளும், ஆட்சியின் கொள்கை மாற்றங்களை முன்னெடுக்கும் வழிமுறைகளும் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. கடந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் மொத்தமாக புறக்கணித்திருந்தன. இவையெல்லாம் மக்களை ஒருவிதக் கொந்தளிப்பு நிலையிலேயே வைத்திருந்தன. இறுதியில் last straw on the camel’s backஆக இந்தப் போராட்டம் அமைந்துவிட்டது.
இப்போது தேசம் ராணுவத்தின் கைகளுக்குப் போயிருக்கிறது. வேறு வழியில்லை. அடுத்ததாக எதிர்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வுகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கிறது. ஜனநாயக நாட்டில் அரசுக்கெதிரான விமர்சனங்கள், போராட்டங்களை அனுமதிப்பது அவசியமான ஒன்று. கொள்கை முடிவுகளை விமர்சித்தல், அவற்றை மாற்றுவதற்கும் திருத்துவதற்கும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை முக்கியமான தேவையாக இருக்கின்றன. போராட்டங்கள் வன்முறையாக மாறாத வரை அனுமதிக்கப்பட வேண்டும். அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள் அல்லர். உண்மையில் அவர்கள் நாட்டை நேசிப்பவர்கள்தான் என்ற தெளிவை அரசு ஆதரவாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அப்படி எல்லாம் நிகழாமல் ஜனநாயகக் கட்டமைப்புகளை நசுக்கி, எதிர்க் கருத்துகளை எல்லாம் ஒழிக்க முனைந்தால் இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதையே வங்கதேச நிகழ்வுகள் நமக்குச் சுட்டும் பாடம். கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாயகக் கட்டமைப்புகளை துச்சமாக மதித்து, விமர்சனங்களை தேச விரோதமாக அணுகி, எதிர்க் கட்சிகளை பலவீனப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வரும் இந்திய பாஜக அரசுக்கும் இந்த அரசைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களுக்கும் வங்கதேசம் ஒரு ‘டிரெய்லர்’ காட்டி இருக்கிறது.