தஞ்சாவூர், ஆக.9- தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, ஒன்றிய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக தஞ்சை நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி கவலை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள அம்மை யாண்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நேற்று (8.8.2024) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார். அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் அ.வை. முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி முன்னிலை வகித்துப் பேசியதாவது:
“நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து தொகுதி தொடர்பான கோரிக்கை களை வலியுறுத்தி வருகிறேன். பேராவூரணி வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும். இந்த வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை அதிகரித்துத் தர வேண்டும். ஊதியத்தை இரட்டிப்பாக்கித் தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினேன்.
நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் இறந்து போனால் அவர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணத்தை 50,000 ரூபாயாக உயர்த்தித் தர கேட்டிருக்கிறோம். அதேபோல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றோம். ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டைப் பொருத்த வரை மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் செயல்படுகிறது. (சர்வ சிக்ச அபியான்) அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மூன்று ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. கேட்டால் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தம் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசுக்கு வரி வருவாயாக கொடுக்கிறோம். நம்மை விட வரி வருவாயை குறைவாகக் கொடுக்கக்கூடிய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ரயில்வே துறை மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதனால் தான் 40க்கு 40 இடங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம்.
தமிழ்நாட்டின் நலனுக்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம். வெள்ள நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு, வெறும் ரூ.270 கோடி மட்டுமே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியது. ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கியது. ஆனால், தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒன்றிய நிதி அமைச்ச ராக இருந்தும் இதுதான் நமது நிலைமை.”
இவ்வாறு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி கூறினார்.