குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் ‘நீட்’ அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறி சிலர் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்வான ஏழை மாணவர்கள் என்று நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஒரு பட்டியலைப் படித்தார்.அந்தப்பட்டியலை தமிழ்நாடு பா.ஜ.க.தான் கொடுத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதன் விவரம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12,997 மாணவர்கள் 2022-2023 ஆண்டில் ‘நீட்’ தேர்வை எழுதியதில் 3,982 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்று அந்தப் பட்டியல் கூறுகின்றது.
அந்தப்பட்டியலில் உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வாகத் தகுதி இல்லாத மதிப்பெண்களைப் பெற்றவர்கள்.
மேலும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு ஓராண்டு வேறு நகரங்களுக்குச் சென்று பெரும் செலவு செய்து நீட் தேர்வை இரண்டாம் முறை எழுதியவர்கள்.
இதில் ஜீவித் குமார் என்பவர் பெரியகுளம் அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதி உள்ளார். ஆனால் அப்போது அவரால் 700க்கு 120 மதிப்பெண்கள் தான் பெற முடிந்தது. ஆகையால் அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் தான் இடம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அவர் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் – உறவினர்கள் ஆகியோர் நிதி உதவி செய்ய நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பெரும் தொகை கட்டி ஓராண்டு பயிற்சி பெற்றார். தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணிற்கும் அவருக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் தான் இடம் கிடைத்தது.
மயிலாடுதுறை, நிடூரைச் சேர்ந்த கனிமொழி தினக் கூலி வாடகைக் கார் ஓட்டுநரின் மகள்., நீட் தேர்வில் 279 மதிப்பெண்கள் பெற்றார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவினருக்குக் கட் ஆப் 2023 ஆண்டு 542.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கிராமத்தைச் சேர்ந்த அன்னபூரணி கட்டடத் தொழிலாளி மகள். 700க்கு 538 மதிப்பெண்கள், கட் ஆப் 556.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த அறிவுநிதி, கூலித்தொழிலாளியின் மகன். நீட் தேர்வில் 348 மதிப்பெண். பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவினருக்கு கட் ஆப் 2023 ஆண்டு 542.
ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் திவ்யபாரதி நீட் தேர்வில் பெற்றது 434 மதிப்பெண்கள் – பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவினருக்குக் கட் ஆப் 2023 ஆண்டு 542.
நிதி அமைச்சர் படித்த பட்டியலில் உள்ள அனைவருமே தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் ஆண்டுக்கு பல இலட்சம் வரை மருத்துவக் கல்லூரி கட்டணமாகக் கட்டிப் படிக்க வேண்டிய நிலை!
இந்தியாவில் மொத்தம் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களே 91,927 தான், ஆனால் தேர்ச்சிப் பெற்றவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்திற்கும் மேல், இதிலும், 117-715க்கு இடைப்பட்ட மதிப்பெண் எடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 8 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் 2018ஆம் ஆண்டு ஓட்டல் காவலாளி மகள் நீட் தேர்வில் வெற்றி என நீட் தேர்விற்கு ஆதரவாக செய்திகளும், பதிவுகளும் வெளியாகின.
ஆனால், அதே மாணவி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பேசும் போது, 3 முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தும் மருத்துவம் பயிலுவதற்கு இடம் கிடைக்கவில்லை எனப் பேசியது குறிப்பிடத்தக்கது
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே மருத்துவம் படிக்க இடம் கிடைத்து விடாது. கட் ஆஃப் மார்க் அடிப்படையில் தான் இடம் கிடைக்கும். இதற்காக, நீட் பயிற்சி மய்யத்தில் தொடர்ந்து சில ஆண்டுகள் செலவு செய்து பயிற்சி எடுத்து அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களின் எண்ணிக்கையே இங்கு மிக அதிகம்.
ஒன்றிய நிதி அமைச்சர் மானாவாரியாகப் புள்ளி விவரங்களை அள்ளி விடுவது அழகல்ல. இவர் சொல்லும் இருபால் மாணவர்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர் என்று சொல்லுவாரா?