விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட புதிய பயிர்கள் அறிமுகம் : தமிழ்நாடு அரசு திட்டம்

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.7- விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க புதிய பயிர்கள் அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிக ரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வருமானத்தை பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல் பாடுகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்.

எனவே தமிழ்நாட்டில் வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மண் வளம் காப்பதற்கான நட வடிக்கைகளை எடுப்பது, பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பது, அதிக மகசூல் பெறுவது, அறு வடைக்கு பின் பொருட்களை இயற்கை முறையில் பதப்படுத் துவது போன்ற திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில்நுட்பங்களை மேம்படுத் திட துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு முதன்மை செயலாளர் அபூர்வா மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் (ஜூலை) 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றனர். அப்போது அவர்கள், அந்த நாடுகளின் வேளாண் வல்லுநர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினர். அங்குள்ள வேளாண் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்து முழு அளவில் ஆலோசனை நடத்தினர்.

ஆஸ்திரேலியாவில் தமிழ் நாட்டைப் போல ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, மாம்பழம், பலா ஆகிய பழ வகைகள் அதிகளவில் விளைவிக்கப் படுகிறது. மேலும் அங்கு இந்த பழங்கள் எந்த அளவில் இருக்க வேண்டும். அதன் நிறம், எடை, நுண்சத்துகள் மற்றும் சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதனை திட்டமிட்டு, அதற்கேற்ற விதைகளை உருவாக்கி உள்ளனர். இந்த விதைகள் மூலம் அதிகளவு மகசூலும் கிடைக்கிறது. எனவே இந்த புதிய பயிரின விதைகளை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்மூலம் விவசாய உற்பத்தி மட்டுமின்றி பொதுமக்களுக்கு தேவையான சத்துகளும் கிடைக்கிறது.

அதே போல் போல் ஆஸ்திரேலியாவில் பலாப்பழக் கொட்டையில் இருந்து மருந்து எடுக்கும் தொழில் நுட்பம் உள்ளது. அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் போது தமிழநாடு விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மிக முக்கியமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்கள் அறுவடைக்கு பின் எந்தவித செயற்கை செறிவூட்டல் இல்லாமல் இயற்கைமுறையில் சுமார் 3 மாத காலத்திற்கு பதப்படுத்தப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தினால் தமிழ்நாடு விவசாயி களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும் என்று அதிகாரிகள் எண்ணுகின்றனர். இருப்பினும் இதுகுறித்த முழுமையான ஆய்வறிக்கையை தயார் செய்த பின்புதான் தமிழ்நாடு அரசு அடுத்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *