சென்னை, ஆக.7- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைந்துள்ள தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் 4ஆம் ஆண்டு தொடக் கத்தை முன்னிட்டு 5.8.2024 அன்று சென்னை சைதாப்பேட்டை நேரு நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பயனாளிகளின் இல்லத்திற்கு சென்று மருந்து பெட்டகம் வழங்கினார். மேலும், இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொற்றா நோயினால் பாதிக்கப்படுகிறவர்களை காப்பாற்றும் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 13 ஆயிரத்து 872 பேர் பயனடைந்துள்ளனர். கிராமப்புறங்களை காட்டிலும் நகர்புறங்களில் குறிப்பாக சென்னையை பொறுத்தவரை இந்த திட்டத்தை கொண்டு செல்வது சவாலான விஷயமாகும். ஆனால், இதில் பொது சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
டெங்கு பாதிப்பு
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவிகள் தேவைப்பட்டால் 104 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து உதவிகள் பெறலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளது. மேலும், பருவ மழைக்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த கூட்டம் விரைவில் அதாவது வரும் 20ஆம் தேதி அல்லது 21ஆம் தேதியில் நடத்தப்படவுள்ளது. சென்னையில் 3,300 பேர் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மடிப்பாக்கம், ராம்நகர், புழுதிவாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முன்னரே தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமலாக்கத்துறைக்கு
உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஆக.7- தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி தமிழ் நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து அழைப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு நேற்று (6.8.2024) விசாரித்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு. ‘மணல் குவாரிகள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள டிஜிட்டல் ஆவணங்களில் சில ஆவணங்களை திறக்க முடியவில்லை. குறிப்பாக 7 ஆயிரம் முதல் தகவல் அறிக்கைகள் (எப்.அய்.ஆர்.) உள்ளன. சட்டவிரோத மணல்குவாரிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடை பெற்றுள்ளது. இதுதொடர்பான பட்டியலை 2 வாரங்களுக்குள், தாக்கல் செய்கிறேன்’ என வாதிட்டார்.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ‘அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன’ என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள், ‘உத்தரவை ஏற்று தமிழ்நாடு அரசு ஆவணங்களை வழங்கியுள் ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாார ணைக்கு வைத்திருப்பது முறையல்ல’ என்று அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர் . மேலும் முதல் தகவல் அறிக்கைகள், ஆவணங்கள் குறித்த பட்டியலை அமலாக்கத்துறை சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.