சென்னை, ஆக. 6- கொளத்தூர் தொகுதியில், வெள்ள பாதிப்பு ஏற்படா மல் தடுப்பது உள்பட ரூ.355.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு, ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் கொளத்தூர் கணேஷ் நகரில் ரூ.110 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 230/33 கி.வோ. துணை மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த துணை மின் நிலையம் அமைக் கப்படுவதன் மூலம் கொளத்தூர், பெரியார் நகர், அன்னை நகர், நேர்மை நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு சீரான மின்சாரம் கிடைத்திடும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொளத்தூர் வீனஸ் நகரில் ரூ.19 கோடியே 56 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்று நிலையத்தின் செயல் பாடுகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்நிலையத்தின் மூலம் வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள குழாய் மூலம் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கொளத்தூர் பள்ளி சாலையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ், பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் ரூ.5 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் இரண்டு குழந்தைகள் வளர்ச்சி மய்யங் கள், ஜி.கே.எம். காலனி 27ஆவது தெருவில் ரூ.2 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வகுப்பறைகள், பணியாளர் அறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சென்னை துவக்க பள்ளி கட்டடம், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு தெருக்களில் ரூ.86 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 உயர் மின்கோபுர விளக்குகள் என மொத்தம் ரூ.8 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சீனிவாச நகர் 3ஆவது பிர தான சாலையில் ரூ.3 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சென்னை துவக்கப் பள்ளிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங் களையும் முதலமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூர் நேர்மை நகரில் 0.73 ஏக்கர் பரப்பளவில் ரூ.23 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சந்தையின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீர்வள ஆதாரத்துறை சார்பில் அயனா வரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகரில் ரூ.91 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்மூலம் பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அதனைத் தொடர்ந்து பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் ரூ.109 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகள், புதிதாக கட்டப்படவுள்ள துவக்க பள்ளிக்கு அடிக்கல், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் நவீன சந்தை, தணிகாசலம் கால்வாயினை அகலப் படுத்தி மேம்படுத்தும் பணிகள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துமனையில் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.355 கோடியே 23 லட்சத்தில் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல்,
எஸ்.சுதர்சனம், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், கொளத்தூர் தொகுதி கண்காணிப்பு அதிகாரியும், நகரமைப்பு துறை இயக்கு னருமான கணேசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? கலைஞர் ஸ்டைலில் பதிலளித்த முதலமைச்சர்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சென்னையில் சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதாக கேட்கிறீர்கள். சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பருவமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. சென்னையில் தற்போது எங்கும் மழைநீர் தேங்கவில்லை” என்றார்.
‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?’ என்று ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘வலுத்து வருகிறதே தவிர பழுக்கவில்லை’ என்று சிரிப்புடன் கூறினார்.
முதலமைச்சரின் இந்த பதில் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பாணியை ஒத்திருந்ததாக அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வியப்பு தெரிவித்தனர்.