சென்னை, ஆக.4 சென்னை ராயப்பேட்டையில் கோயில் அருகில் மெட்ரோ பணிகள் நடைபெறுவது தொடா்பான வழக்கில் கோயிலுக்கு நேற்று (3.8.2024) நேரில் சென்று ஆய்வு செய்ததாக உயா்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தாா்.
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் சிறீ ரத்தின விநாயகா், துா்க்கை அம்மன் கோயில் உள்ளது. நூறு ஆண்டு பழைமையான இந்த கோயில் அருகே, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில் அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க நிபுணா்கள் குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி(பொ) கிருஷ்ணகுமாா், நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ‘கோயில் அமைந்துள்ள இடம், மெட்ரோ ரெயில் நுழைவு வாயில் அமைய உள்ள இடம் ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என கோரப்பட்டது.
மனுதாரா் தரப்பிலும், இதே கோரிக்கை வலியுறுத்தப்படவே, கோயில் அமைந்துள்ள இடத்தை நேற்று (3.8.2024) காலை 8.30 மணிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததாக நீதிபதி கே.குமரேஷ்பாபு தெரிவித்தார்.