செவிலியர்களுக்கு எடுத்துக்காட்டாக, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலித்தாயின் கடமை உணர்வை பல நூற்றாண்டுகளாக உலகம் பாராட்டி மகிழ்கிறது.
நம் நாட்டிலும், பிற நாடு களிலும் அத்தகைய தொண்டறத் தூய்மைப் பணிபுரியும் செவி லியர்கள் ஏராளம் – பல இயற்கைப் பேரிடர்கள் – சில நாடுகளில் திடீரெனத் தாக்கும் தொற்று நோய்கள் – ஆகியவற்றால் தத்தமது கடமைகளை செய்கையில் உயிர்த் தியாகம் கூடச் செய்து, மறைந்தாலும் மறையாமல், நெஞ்சங்களிலும் நிறைந்து வரலாற்றின் வைர வரிகளாகவும் மிளிர்ந்து கொண்டும் உள்ளனர்!
அத்தகைய ஒருவர் – கேரள மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் நிலச்சரிவினால் இறந்தவர்கள் எண்ணிக்கை முந்நூறை தாண்டுகின்ற கொடுமை – நம் நெஞ்சங்களைப் பிழியும் அவலச் செய்தியாக உள்ள நிலையில், ஆறுதல் கொள்ளும் ஒரு தொண்டறத்தின் செயலாக்கம் சபீனா என்ற செவிலியரின் செயற்கரிய செயல்.
அவரை வாழ்த்த வார்த்தைகள் போதாது! தம் உயிரைத் துச்சமெனக் கருதி தொங்கு கம்பி வழியே மருந்து பெட்டியுடன் தாண்டி, இராணுவத்தாருக்கே வியப்பை வாரித் தந்து கடமையைச் செய்தவர் சபீனா – ஆரல் மலைப்பகுதிக்கு செல்லும் ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் அக்கரைக்குச் செல்வதற்கு அந்தரத்தில் தொங்கியபடி – 5 நிமிடங் களுக்கு மேல் கம்பியை பிடித்துத் தொங்கிக் கடந்து சென்று, சிகிச்சை அளித்து, அதே போல் மீண்டும் திரும்பியுள்ளது – தமிழ்நாட்டுக்கு, இந்திய நாட்டிற்கே பெருமை அல்லவா?
பெண்களை மென்மையானவர்கள் – வலிமை யற்றவர்கள் என்று வாய் கூசாது வக்கணை பேசுவோர் வாயடைத்து நிற்கும் படியான அருஞ்செய்தி! அருமையான தகவல் இது!
படியுங்கள் – பதியுங்கள் – ஆண்கள் மனதில் மகளிர் பலவீனமான பாலினத்தவர்கள் என்ற ஒரு தவறான செய்தி. மனமும், வாய்ப்பும் இணைந்தால் ‘‘நம்மால் முடியாதது யாராலும் முடியாது’’ என்ற தன்னம்பிக்கை தன்னல மறுப்பின் சிகரங்களாக மாறியே தீருவர்.
சரி பகுதி மானிடமான ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்று கேட்டு அடிமை விலங் கொடித்த தந்தை பெரியாருக்கே இச்செய்தி அன்பு காணிக்கையாகும்!
இதோ அந்தச் செய்தி!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சிப்லைனில் ஆற்றை கடந்து சிகிச்சை அளித்த
தமிழக பெண் செவிலியர்
கூடலூர், ஆக.2- கேரள மாநிலம் வயநாடு முண்டக்கையில் நிலச்சரி வால் பாதித்தவர்களுக்கு கூடலூர் பெண் செவிலியர் சிப் லைன் மூலமாக ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த துப்பு குட்டி பேட்டையில் தனி யார் தொண்டு அமைப்பில் உள்ள சபீனா என்ற செவிலியர் புற்று நோயா ளி களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் கேரளா வய நாட்டில் நிலச்சரிவால் பாதித்தவர்களுக்கு உதவ இத்தொண்டு அமைப்பின் குழுவில் இடம்பெற்ற ஒரே பெண் செவிலியர் சபீனா ஆவார்.
சூரல் மலைப்பகுதிக்கு குழுவினர் சென்ற நிலையில் ஆற்றின் மறு பக்க கரையில் உள்ள முண்டக்கை கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு சிகிச்சை அளிக்க பெண் செவிலியர் வேண் டுமென ராணுவத்தினர் கேட்டனர். அப்போது செவிலியர் சபீனா தைரிய மாக ஆற்றின் மறுகரைக்கு சென்று சிகிச்சை அளிக்க முன்வந்தார்.
சூரல் மலை பகுதியில் இருந்து முண்டக்கை பகுதிக்கு செல்லும் ஆற்றுப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் அக்கரைக்கு செல்வதற்கு ராணுவத்தி னர் அந்தரத்தில் தொங் கியபடி கம்பியில் செல்லும் சிப்லைன் அமைத்து அதன் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சிப்லைன் மூல மாக இக்கரையில் இருந்து அக்கரை செல்ல சுமார் அய்ந்து நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்பதால் கீழே பெருகி ஓடும் வெள் ளத்தின் மீது தொங்கிய படி செல்வது ஆபத்தான செயலாகும். இதில் புதி தாக தொங்கி செல்வதற்கு அதிக மனோ தைரியம் வேண்டும் என்பதால் அதுகுறித்து சபீனாவிடம் ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் சபீனா இதற்கு ஒப்புக்கொண்டதோடு மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் அடங்கிய பையுடன் ராணுவத்தினர் அமைத்த சிப்லைனில் தொங்கிய படி முண்டக்கை பகுதிக்கு சென்றார். அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் தங்கி இருந்து நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் மீண்டும் அங்கிருந்து சிப்லைன் மூலமாக இக்கரைக்கு வந்தார்.
இது குறித்து சபீனா கூறுகையில், முண்டக்கையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சிப்லைன் மூலம் கொண்டுவர சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் ஆகும். இதனால் ராணுவத்தினர் கேட்டுக் கொண்டதன் படி, வெள்ளம் புரண்டோடும் ஆற்றின் மேல் கட்டப்பட்ட சிப்லைனில் தொங்கியபடி சென்றேன். அங்கு பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளித்தது. மனதுக்கு திருப்தியாகவும் அமைந்தது’ என்றார்.