மொழியின் பெயரால் நாட்டைச் சிதைப்பதா?

Viduthalai
2 Min Read

நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் அதனை ஹிந்தியில் மட்டுமே கேட்கும்படி ெமன்பொருள் மூலம் ஒலிபரப்பு வதை மக்களின் உரிமைப் பறிப்பு என்று கூறி சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அவையில் உறுப்பினர்கள் உரை ஆற்றும் மொழிகளான தமிழ், மராத்தி, வங்க மொழி, தெலுங்கு, போஜ்பூரி போன்ற ஹிந்தி அல்லாத மொழிகளில் உறுப்பினர்கள் பேசினால், நாடாளுமன்ற தொலைக்காட்சியில் அவர்கள் உரையை பின்னிருந்து தானியங்கி மொழிபெயர்ப்பு மென்பொருள் மூலம் ஹிந்தியில் மட்டும் அவர்கள் பேசுவது ஒலிபரப்பாகிவருகிறது
இது தொடர்பாக சரத்பவாரின் மகளும், மராட்டிய மாநில நாடாளுமன்ற உறுப்பின ருமான சுப்ரியா சுலே தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்
அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது ‘‘ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அவர்களது மொழியில் பேசும் போது மட்டுமே அறிந்து கொள்வார்கள். ஆனால் ஒன்றிய அரசோ, உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியில் உரை ஆற்றுவதை ஹிந்தியில் மாற்றி அவரைத் தேர்ந்தெடுத்த ஹிந்தி தெரியாத மக்களுக்கான உரிமையைப் பறித்துள்ளனர்’’ என்று சுப்ரியா சுலே கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு எல்லா வகையிலுமே ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை நிலை நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

முதலில் இந்தியா என்பது ஒரே நாடே யல்ல – இது ஒரு துணைக் கண்டமாகும்.
28 மாநிலங்கள் கொண்ட ஒரு கூட்டமைப் பாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று தனித்தனி மொழியும், தனித்தனி கலாச்சாரங்களும் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எட்டு யூனியன் பிரதேசங்களும் உண்டு.
இதை ஒப்புக் கொள்ள மறுப்பது – அவர்கள் கூறும் தேசியத்துக்கே ஆபத்தானதாகும்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பி னர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார்கள். நாடாளுமன்றம் என்பது ஹிந்தி வாலாக் களுக்கு மட்டும் சொந்தமானதல்ல!

நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்புக்கான நவீன விஞ்ஞான வசதிகள் உண்டு.
இந்த நிலையில் ஹிந்தியைத் தாய் மொழி யாகக் கொள்ளாத உறுப்பினர்களின் பேச்சை வேண்டும் என்றே தடை செய்வது அடாத செயலாகும்.
நாடாளுமன்றம் திசை தடுமாறி தவறான திசைக்கு நாட்டை இழுத்துச் செல்லுகிறது என்று நினைப்பதற்கு இடம் உண்டு.
புதிய கல்வி என்று கூறி, ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது – இப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சையே மொழி மாற்றம் செய்ய மறுப்பதெல்லாம் மாநிலங்களில் கொந்தளிப்பைத் தான் ஏற்படுத்தும் – அதன் பார தூர விளைவுகள் எங்கே போய்க் கொண்டு விடும் என்று இந்தப் ‘பத்தரை மாற்று’ தேசியங்கள் உணரட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *