புதுடில்லி, ஜூலை 30- ஒன்றிய பட்ஜெட் 2024-2025 குறித்து அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் (ஏஅய்டிஎஸ்ஓ) பொதுச்செயலாளர் சவுரவ் கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஒன்றிய பட்ஜெட் 2024-2025 கல்வித்துறைக்கு ரூபாய் 1.20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் திருத்திய மதிப்பிட்டோடு ஒப்பிடுகையில் ரூ.9000 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதியோடு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியையும் சேர்த்து ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளதாக கூறி கல்விக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித் துள்ளது போன்ற பிம்பத்தை ஒன்றிய அரசாங்கம் உருவாக்குகிறது. ஆனால் இதுவும்கூட மொத்த பட்ஜெட்டில் 4% மட்டுமே ஆகும்.
தேசிய கல்விக் கொள்கை 2020இல் கல்விக்கு 6% நிதி ஒதுக்கு வதாக முடிவு செய்துள்ளதாக தம்பட்டமடிக்கும் அரசாங்கம் இப்போதும் குறைவாகவே நிதி ஒதுக்கியுள்ளது. யூஜிசிக்கு வெறும் 2500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி யுள்ளனர். இது முந்தைய ஆண்டின் திருத்திய மதிப்பைக் காட்டிலும் 60.99% குறைவாகும். புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (அய்அய்எம்) களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைக்கப் பட்டுள்ளது.
அய்அய்டிகளுக்கான நிதியும் சிறிது குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆராய்ச்சிக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் நிலையில் தற்போது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன் மூலமாக “தனியார் ஆராய்ச்சியை” முன்னெடுப்பது குறித்து இந்த பட்ஜெட் பேசியுள்ளது. 2020-2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சக்ஸம் அங்கன்வாடி, போஷன் 2.0 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் படிப்பதற்கு மாண வர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி யிருப்பதாக அதிர்ச்சியான தகவலையும் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். மாணவ சமுதா யத்தை கடன் புதைகுழிக்குள் தள்ளுவதற்குரிய அனைத்து வழிகளையும் அரசாங்கமே ஏற்படுத்துகிறது என்பதையே இது காட்டுகிறது.
கல்விக் கட்டணத்தைக் குறைக்கா மல், சாமானிய மக்கள் கல்விக்கு செலவழிக்கும் சுமையை குறைப்பதற்கு அரசு கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அரசாங்கமானது மாணவர்களே அதிகரிக்கும் கல்விக்கட்டணத்தை செலுத்த கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. வன்மையாக கண்டிக் கத்தக்க இத்தகைய நடவடிக்கையால் அனைவருக்கும் கல்வி வழங்கும் தனது பொறுப்பை அரசாங்கம் கை கழுவுகிறது.
20 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ஒன்றிய பட்ஜெட் முடிவு செய்துள்ளது. திறன்கள் தேவை என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் இதனால் எந்த பலனுமில்லை. புதிய வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்கப்போகிறோம் என்பது குறித்து அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் எதுவும் கூறவில்லை.
மாறாக மாணவர்கள் இன்டர்ன் ஷிப் வழங்குவோம் என்று ஒன்றிய அரசாங்கம் கூறுகிறது. இது அவர் களது எஜமானர்களுக்கு மலிவான வேலையாட்களை அனுப்பும் தந்திர மாக. மாதம் ரூ. 5000 நிதி உதவி என்பது மாணவர்களை மிகக்கடுமையான நிதி
நெருக்கடியில் தள்ளிவிடும்.
வேலைகளை உருவாக்குவதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. அந்த Stipend தொகைக்கு அரசாங்கம் நிதியை ஒதுக்கவில்லை, எனவே அதை நிறுவனங்கள்தான் கொடுக்கப் போகின்றன, இதன்மூலம் அந்த நிதி உதவியும் இல்லாமல் போகலாம்.
மொத்தத்தில் இந்த ஒன்றிய பட்ஜெட்டானது “கடன் வழங்குதல்”, “மலிவாக உழைப்பை சுரண்டுதல்”, “வேலைகளை உருவாக்காமல் திறன்களை வளர்த்தல்” போன்ற வற்றை மட்டும் பேசுவதால் ஏற் கெனவே கல்விக்கு ஏராளமான கட்டணம் செலுத்தும் சுமையில் உள்ள நெருக்கடியில் சிக்கியுள்ள மாணவர் சமுதாயத்திற்கு பலத்த அடியாகும்.
பட்ஜெட்டில் 10% நிதியை பொதுக்கல்விக்கு ஒதுக்கி அனைவருக்கும் கல்வியை உத்திர வாதப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.