பெரியாருடைய சிந்தனை என்பது காலத்தைத் தாண்டிய சிந்தனை!
பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, ஜூலை 28 பெரியாருக்கு மனித சமுதாயத்தின்மீது இருந்த கவலை, அக்கறை – பெண்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிட்டீர்களே என்பதுதான்! படிக்கக்கூடாது, சிந்திக்கக்கூடாது, தலைநிமிர்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி, பெண்களை நாசப்படுத்திவிட்டீர்களே என்று கேட்டு, சுருக்கென்று சிந்திக்க வைத்தார். ஆகவேதான், பெரியாருடைய சிந்தனை என்பது காலத்தைத் தாண்டிய சிந்தனை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழா!
கடந்த 21.7.2024 அன்று காலை சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி அவர்கள் சமூகநீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளமாக, லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில், ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்தினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
‘‘இன்றைக்கு நீங்கள் எல்லாம் பாராட்டுகிறீர்கள்; நான் தீவிரமான கருத்தைச் சொல்லியிருக்கிறேன். நான்தான் பெரிய அறிவாளி என்று என்னைப் பாராட்டுகிறீர்கள். நன்றாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் நூறு, இரு நூறு ஆண்டுகள் கழித்து வரக்கூடிய தலைமுறையினர் சொல்வார்கள், ‘‘இராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி” இருந்தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரும். காரணம், அன்றைக்கு அறிவு அந்த அளவிற்கு வளர்ந்திருக்கும்” என்றார்.
தந்தை பெரியாருக்கு மட்டும்தான் உண்டு!
காரணம், தன்னைத்தானே வெளிப்படுத்தி, உறுதியாகச் சொல்லக்கூடிய துணிச்சல், தந்தை பெரியாருக்கு மட்டும்தான் உண்டு. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிந்தனை அய்யா அவர்களுக்கு.
விஞ்ஞானத்தைப் பார்த்தவுடன் அதிசயப்பட்டார் தந்தை பெரியார் அவர்கள்.
நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றமாவதற்கு முன்பு, இங்கே நிறைய மரங்கள் இருந்தன. 1967 ஆம் ஆண்டு ‘‘சோசலிச மாநாடு” போட்டோம்.
அப்பொழுது ‘விடுதலை’ அலுவலகம்
கட்டி முடிக்கப்படவில்லை!
இங்கே இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டி விட்டுத்தான், மாநாட்டுப் பந்தல் போடவேண்டும். உள் பகுதியில் பெரிய மரங்கள் இருந்ததால், அவற்றை வெட்ட முடியிவில்லை. அப்பொழுது ‘விடுதலை’ அலுவலகம் கட்டி முடிக்கப்படவில்லை.
அய்யா அவர்கள் காலையில் வந்துவிடுவார். அம்மா அவர்கள் சமைத்து எடுத்துக்கொண்டு வருவார், இங்கேயே அய்யா அவர்கள் சாப்பிடுவார்.
இந்த இடத்தைச் சரி செய்வதற்காக ஆட்கள் பணி யாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் நடைபெறும் பணிகளுக்கான செலவுகள் குறித்து கணக்கு எழுதி அய்யாவிடம் காட்டுவோம்.
அய்யா அவர்கள், ‘‘என்னப்பா, இவ்வளவு செலவு ஆகியிருக்கிறது, இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்; ஆனால், ஒரு வேலையும் நடைபெறவில்லையே” என்றார்.
அப்பொழுது நம்முடைய பொறியாளர்கள் அய்யா விடம், ‘‘அய்யா புல்டோசர் என்று ஒன்று இருக்கிறது; அதற்கு 500 ரூபாய் பணம் கட்டினால், இரண்டு நாளில் அல்லது ஒரு நாளில் பணிகள் நிறைவுறும்” என்று சொன்னார்கள்.
அப்படியா? சரி செய்யுங்கள் என்று சொன்னார்.
அப்பொழுதுதான் புல்டோசரை அய்யா அவர்கள் பார்க்கிறார்.
பெரிய மரத்தினை, புல்டோசர் ஒரு இடிஇடித்து, வேரோடு அந்த மரத்தினை சாய்த்தது.
அதைப் பார்த்த அய்யா அவர்கள், அதனைக் குறித்து வைத்துக் கொண்டு, அடுத்த நாள் அறிக்கை எழுதினார்.
அறிவினுடைய எல்லைக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது பாருங்கள்!
‘‘500, 600 பேர் வேலை செய்யவேண்டிய நேரத்தை மிச்சப்படுத்தி, ஒரே நேரத்தில், இவ்வளவு சீக்கிரத்தில் வேலை முடிகிறதே, அறிவினுடைய எல்லைக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது பாருங்கள்” என்று.
அதேபோன்று, மேட்டூரில் உள்ள அலுமினிய தொழிற்சாலைக்கு அய்யாவை அழைத்திருந்தார்கள். அந்தத் தொழிற்சாலையைப் பார்த்த அய்யா அவர்கள், ஒரு அலுமினிய கட்டியை வாங்கிக் கொண்டார்.
ஒவ்வொரு கூட்டத்திலும் வெளியில் சாதாரண மண்ணாகக் கொட்டுகிறார்கள். அது பின்னர் ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி, அலுமினியமாக கீழே வந்து விழுகிறது.
ஆறாவது அறிவைப்
பயன்படுத்தினால் என்ன?
மனிதனுடைய ஆறாவது அறிவு இருக்கிறதே, ஒரு முழ கல்லை வைத்து, இழு இழு என்று இழுத்துக்கொண்டு, இன்னும் தேர் இழுக்கிறேன், தேர் இழுக்கிறேன் என்று சொல்கிறான். இவன் எந்தக் காலத்தில் உருப்படுவது? இதை நினைத்தால்தானே எனக்குக் கவலையாக இருக்கிறது. எனக்கு என்ன தனிப்பட்ட முறையில் எந்த சாமிமீது கோபம்? எந்தக் கடவுள்மீது கோபம்? இவன் அறிவை நாசப்படுத்திக் கொண்டானே – அறிவை வளர்ச்சியடைய செய்யவில்லையே! வெள்ளைக்காரன் கண்டுபிடித்தான், அவன் கண்டுபிடித்தான், இவன் கண்டுபிடித்தான் என்று சொல்கிறாயே, அவனுக்கும் ஆறறிவு, நமக்கும் ஆறறிவுதானே! ஏன் அந்த ஆறா வது அறிவைப் பயன்படுத்தினால் என்ன?” என்று கேட்டார்.
இன்றைய ஓடிடிக்கு என்ன சிறப்பு என்று சொன்னால், டெக்னாலஜி என்று சொல்லக்கூடிய தொழில்நுட்பம் இன்றைக்கு உயர்ந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது. இன்றைக்கு அதை அனுபவிக்காதவர்களே கிடையாது. கைகளில் செல்போன் இல்லாதவர்கள் யாராவது உண்டா?
முப்பது முக்கோடி தேவர்களுக்கு ஒரு பயலுக்காவது செல்போன் என்றால் என்னவென்று தெரியுமா? நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளில்
யாராவது கண்டு பிடித்தார்களா செல்போனை?
வெள்ளைக்காரன் கண்டுபிடித்துக் கொடுத்தவுடன், அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, ஊடகங்களில் விளம்பரங்களை செய்கிறார்கள் நம்மாட்கள். கருங்காலி யில் ருத்திராட்சக் கொட்டை என்று சொல்கிறார்கள். ஏற்கெனவேதான் கருங்காலிகளாக மக்கள் கிடக்கையில், கருங்காலியில் ருத்திராட்சக் கொட்டை என்று அதற்கு விளம்பரம் செய்கிறார்கள். அந்த விளம்பரத்தில்
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடலை சாமர்த்தியமாகப் பயன்படுத்துகிறார்கள்.
சரசுவதியா தொலைக்காட்சியை கண்டுபிடித்தாள்?
இப்பொழுது என்ன ஆபத்து என்றால் நண்பர்களே, டெக்னாலஜியினுடைய சிறப்பை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இங்கே தொலைக்காட்சி நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்கள்; ஆயுதபூஜை என்று சொல்லி, அதற்கு மூன்று பட்டை போடுவார்கள். சரசுவதியா தொலைக்காட்சியை கண்டுபிடித்தாள்? அப்படி கண்டுபிடித்திருந்தால், சரசுவதியை நாங்களே பாராட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
நல்ல வாய்ப்பாக கம்ப்யூட்டருக்கு விபூதி பூசுவது இல்லை; குங்குமம் வைக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் கண்டுபிடிப்பதில் புரட்சி செய்தால், நம்மாட்களுக்கு குறைந்தபட்சம் அறிவு எவ்வளவு வறட்சி என்பதைப் பாருங்கள்.
‘‘பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்!”
எனவே, இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார்.
கலைஞர் ஒருமுறை சொன்னார், ‘‘பெரியார் எப்பொழு தும் தேவைப்படுவார்” என்று.
பெரியார் என்றால், ஒரு தனி மனிதர் அல்ல.
பெரியார் என்றால், பகுத்தறிவு.
பெரியார் என்றால், சுயமரியாதை.
இங்கே நம்முடைய கனிமொழி அவர்களும் சொன்னார்கள், நம்முடைய இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களும் சொன்னார்கள்; நம்முடைய சத்யராஜ் அவர்களும் சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் ஒரு மனிதாபிமானி.
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.
பெரியார் ஒரு தலைசிறந்த மனிதநேயர்!
ஒரு தலைசிறந்த மனிதநேயர். அவருடைய எந்தக் கொள்கையை எடுத்துக்கொண்டாலும், சுயமரி யாதை இயக்கம், பகுத்தறிவு, அவருடைய கடும் போராட்டங்கள் எல்லாவற்றையும் ஓர் அடித்தளத்தில், ஒரே ஒரு வார்த்தையில் அதை சொல்லவேண்டும் என்றால், ‘‘மனிதநேயம்!”
மனிதன் தானாகவும் பிறக்கவில்லை – தனக்காகவும் பிறக்கவில்லை! சமுதாயத்திற்காகதான். பெண்ணடிமைத்தனத்தைப்பற்றி அவர் சொன்ன ஒரே ஒரு கேள்வியைபற்றி சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
அவரவர் வீட்டில் தாய் இருப்பார்; துணைவியார் இருப்பார்; மகள்கள் இருப்பார்கள். பெண்கள் இல்லாத வீடு உண்டா? பெண்கள்தானே இந்த சமுதாயத்தில் சரி பகுதி. 140 கோடி மக்களில் 70 கோடி பேர் பெண்கள் அல்லவா!
பெண்களை செயலற்றவர்களாக ஆக்கிவிட்டீர்களே என்று பெரியார் கேட்டார்.
பெரியாருடைய சிந்தனை
காலத்தைத் தாண்டிய சிந்தனை!
பெரியாருக்கு இருந்த கவலை; பெரியாருக்கு மனித சமுதாயத்தின்மீது இருந்த கவலை, அக்கறை – அந்தப் பெண்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிட்டீர்களே என்பதுதான்!
படிக்கக்கூடாது, சிந்திக்கக்கூடாது, தலைநிமிர்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி, பெண்களை நாசப்படுத்திவிட்டீர்களே என்று கேட்டு, சுருக்கென்று சிந்திக்க வைத்தார்.
ஆகவேதான், பெரியாருடைய சிந்தனை என்பது காலத்தைத் தாண்டிய சிந்தனை.
சுயமரியாதைத் திருமணத்தை புரியாமல் அன்றைக்கு எதிர்த்தார்கள், தேர்தலுக்கு அதைப் பயன்படுத்தி னார்கள்.
பெரியாருடைய அணுகுமுறை என்ன? வைதீக திருமணமா? சடங்கு, சம்பிரதாயமா?
பெரியார் அவர்கள், நோயாளியினுடைய நாடியைப் பார்ப்பார்; நாடியைப் பார்த்துவிட்டு, மருந்து, சக்தி வாய்ந்த மருந்தாக இருந்தாலும், எவ்வளவு அளவு கொடுக்கவேண்டுமோ அந்த அளவு மருந்தைத்தான் கொடுப்பார்.
அதற்கடுத்து, அடுத்த கட்டத்திற்கு போவார்.
சுயமரியாதைத் திருமணத்தை உண்டாக்கிய தந்தை பெரியாரின் சிந்தனை எந்த அளவிற்குப் போயிற்று என்று சொன்னால், திருமணம் என்பதே கிரிமினல் குற்றம் ஆகவேண்டும் என்று சொன்னார்.
இதைக் கேட்கும்பொழுது பலர் அதன் உண்மைத் தன்மையை உணர முடியாமல் இருப்பார்கள்.
இதை அய்யாவிடம் நாங்கள் சொன்னோம்; அய்யா, ‘‘பல பேர் ரொம்ப யோசிக்கிறார்கள்” என்று.
‘‘ஆமாம்! நம்மாட்களுக்கே கூட அதை ஜீரணித்துக் கொள்ள முடியாது. இன்றைக்கு நான் சொல்வது அப்படி இருக்கலாம். ஒரே ஓர் உதாரணம் சொல்கிறேன்” என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது சொன்னார்.
‘‘பலதார மணத் தடை” என்று வழக்கமாக இருந்தது. இன்றைக்கு அது சாதாரணமாகிவிட்டதே! அதைத் தடுத்து நிறுத்துவது சட்டப்படி உரிமையாகிவிட்டதே! எல்லோரும் பலதார மணம் செய்ய முடியுமா? இன்றைக்கு அது சட்டப்படி தவறு அல்லவா!
எனவே, ஒருவர், இருவரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. சட்டப்படி தவறு என்பது கிரிமினல் குற்றமாக இருக்கிறதா, இல்லையா?” என்று கேட்டார்.
ஆமாம், கிரிமினல் குற்றம்தான் அய்யா என்றோம்.
இன்றைக்கு அது கிரிமினல் குற்றம் என்று உணரு கிறீர்கள். அன்றைக்கு அதை நான் சொல்லும்பொழுது, பல பேர் எதிர்த்தார்கள் என்றார்.
‘‘மணமக்களே, நீங்கள் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது!”
அய்யா அவர்களை அழைத்து மணவிழாவினை நடத்தச் சொல்லி அழைப்பார்கள். எல்லோரும் மணமக்களை எப்படி வாழ்த்து வார்கள்? ‘‘மணமக்களே, நீங்கள் பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழவேண்டும்!” என்று வாழ்த்து வார்கள்.
ஆனால், அய்யா அவர்கள், ‘‘மணமக்களே, நீங்கள் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது” என்று வாழ்த்துவார்.
அங்கே இருக்கின்ற வைதீர்கள்கூட, பெரிய மனுஷன் என்று இவரை அழைத்தால், இவர் என்ன சொல்கிறார், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்கிறாரே என்று ஆச்சரியப்படுவார்கள்.
ஒரு திருமணம் நடந்தவுடன், எதிர்த்து வீட்டுக்கா ரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களைப் பார்த்து என்ன கேட்பார்கள், ‘‘ஏதாவது வயிற்றில் பூச்சிப் பொட்டு இருக்கிறதா?” என்று.
வயிற்றில் எதற்கு பூச்சிப் பொட்டு இருக்கவேண்டும்?
நீங்களே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
அய்யாதான் சொன்னார், ‘‘குழந்தை ஆசைதானே, குழந்தை இருந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்; அது உண்மைதான். அதற்காக நீங்களே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்; எத்தனை பேர் பெற்றுப் போட்டுவிட்டுப் போயி ருக்கிறான்; அதில் ஒன்றை எடுத்து வளர்த்துக் கொள்வது தானே!” என்று சொல்லிவிட்டு,
நேரடியாக மக்களைப் பார்த்துச் சொன்னார், ‘‘என்ஜாய்மெண்ட் வித்அவுட் ரெஸ்பான்சிபிலிட்டி” என்றார்.
தனி மனிதனுடைய சொத்துரிமையைக் காப்பாற்று வதற்காகத்தான், தன் ரத்தமாக இருக்கவேண்டும்; தன் குழந்தையாக இருக்கவேண்டும் என்ற கருத்து அப்பொழுதுதான் வந்தது என்று சொன்னார்.
இதை நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
‘‘இப்படி நான் சொன்னதும், சிலர் ‘‘எப்படிங்க இன்னொருவர் குழந்தையை எடுத்து நாங்கள் வளர்ப்பது?” என்று கேட்டார்கள்.
(தொடரும்)