சென்னை, ஜூலை 27- பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். அதில் 4 முக்கிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* சுயசான்றிதழ் அடிப்படையில் அனுமதி பெறப்பட்ட கட்டடங்களுக்கான நில உரிமையினை, அனுமதி வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் நகரமைப்பு பிரிவால் 100 சதவீதம் சரிபார்க்கப்பட வேண்டும்.
* வருவாய் பிரிவினர் 30 நாட்களுக்குள் காலிமனை வரியினை வசூல் செய்ய வேண்டும்.
* பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்பு தொகையை பொறியியல் பிரிவினர் 30 நாட்களுக்குள் வசூலிக்க வேண்டும்.
* இந்த கட்டுமானங்கள் 2,500 சதுரடி மனையில் 3,500 சதுரடி பரப்பளவு கொண்ட தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்கு உட்பட்ட கட்டுமானம் என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.
இந்த 4 விதிகளில் குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினர் நகரமைப்பு பிரிவிற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் கட்டட வரைப்பட அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து களிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.