தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சியின் மும்பை தலைவர் அணில் தேஷ்முக் மராட்டி இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘‘பாஜகவுடன் கூட்டணி முறிந்ததால் காங்கிர சோடு இணைந்து மகாவிகாஷ் அகாடி உருவாகி உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றார்கள்.
அப்போதிருந்தே காங்கிரஸ், தேசியவாத காங்கி ரஸ், சிவசேனா உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க பெரும் முயற்சி செய்துகொண்டு இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதவி இழந்து எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மேனாள் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அனுப்பியதாக ஒரு பாஜக பிரமுகர் என்னிடம் வந்தார். அவர் நான்கு பிரமாண பத்திரங்களை எழுதச் சொன்னார். உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, அஜித் பவார் மற்றும் அணில் பராப் ஆகியோர் மீது எழுத்துப்பூர்வ குற்றச்சாட்டுகளை கூறும்படி என்னிடம் கேட்கப்பட்டது. அதன் பிறகு அவர்களே சில நாள்கள் கழித்து பிரமாணப் பத்திரங்களைக் கொண்டுவந்து நீங்கள் கையெழுத்துமட்டும் இட்டால் போதும் என்றார்கள் – இது தேவேந்திர பட்னாவிஸ் நேரடியாக அனுப்பியது ஆகும்.
என் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளதாகவும், இதில் கையெழுத்துப் போட்டால் எல்லாம் சுமுகமாக முடித்துவிடுவோம்; என் பின்னால் ஈ.டி. அல்லது சி.பி.அய். எல்லாம் வராது என்று கூறினார். நான் மறுக்கவே முதலில் சாதகமாக பேசியவர்கள் பின்னர் மிரட்டல்கள் விட ஆரம்பித்தனர். வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு ஆண்டுக்கணக்கில் பிணை இல்லாமல் சிறைவைப்போம் என்று கூறினார்கள். ஆனால், நான் வாழ்நாள் முழுவதும் சிறைக்குச் சென்றாலும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூற மாட்டேன் என்று தெளிவாக கூறினேன். அதன் பிறகு தொடர்ச்சியாக சி.பி.அய்., அமலாக்கத்துறை சோதனைகள் கைது சிறை என்று தொடர்ந்து என்னை பாடாய் படுத்தினார்கள்
அதன் பிறகு ஆதித்யா தாக்கரே, திஷா சால் என்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பால்கனியில் இருந்து தூக்கி வீசினார் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டினைப் பதிவு செய்யுமாறு என்னையும் எனது உறவினர் ஒருவரையும் மிரட்டினார்கள். ஆனால் நாங்கள் முடியாது என்று கூறிவிட்டோம். இதனால் நாங்கள் பல இன்னல்களுக்கு ஆளானோம். போலிகள் ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும், நீதிவெல்லும் என்ற ஒரே நம்பிக்கையோடு எங்கள் தலைவர்களை (சரத்பவார், உத்தவ் தாக்கரே) கண்ணுக்கு இமையாக காத்துவந்தோம். இது போன்ற ஒரு மோசமான அரசியலை எங்கள் வாழ்நாளில் கண்டிருக்கவில்லை’’ இவ்வாறு அணில் தேஷ்முக் கூறியிருந்தார்.
செந்தில் பாலாஜி, மனிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால், நாகேந்திரா என எதிர்க்கட்சி அமைச்சர்கள், முதலமைச்சர்களை அமலாக்கத்துறை, சி.பி.அய். போன்ற ஏவலாட்களை ஏவி கட்சிக்குள்ளேயே விலைபோகும் சிலர் மூலம் வாக்குமூலம் என்ற பெயரில் போலிக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சிறை வைக்கிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு. இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலிக்குற்றச்சாட்டுகள் என்பதை ஹேமந்த் சோரன் வழக்கில் (ஜார்க்கண்ட்) உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது’’
அணில் தேஷ்முக்கின் வாக்குமூலம் பாஜக அரசு சி.பி.அய்., அமலாக்கத்துறை உள்ளிட்ட நிறுவனங்களை எப்படி ஏவல் ஆளாக மாற்றி வைத் திருக்கிறது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு ஆகும்.
ஒன்றிய பிஜேபி அரசு அராஜகத்தையும், எதேச்சதிகாரத்தையும் இரண்டு கால்களாகக் கொண்டும் – ஜனநாயக விரோதம் என்ற கண்களைக் கொண்டும் – தானடித்த மூப்பு என்ற அகங்கார ஆணவ மனப்பான்மை கொண்டும் செயல்பட்டு வருகிறது.
ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள்! கிளர்ச்சி என்னும் ஒரு மூச்சை வெளிப்படுத்தினால் ஆட்சி அக்கணமே ஆழமான படுகுழியில் வீழும் – எச்சரிக்கை!